தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் நடித்து வரும் சாய் பல்லவி தற்போது தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விராட பருவம் படத்தில் நடித்துள்ளார். சாய் பல்லவி நக்சலைட்டாக நடித்துள்ள இப்படம் வரும் 17 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனைத்தொடர்ந்து படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் சாய் பல்லவி மற்றும் படக்குழு இறங்கியுள்ளன. அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் பல்லவி பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், "சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் காஷ்மீரில், காஷ்மீர் பண்டிட்டுகள் கொல்லப்படுவதும், கரோனா காலத்தில் மாடுகளை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர்களை வழிமறித்து அவர்களை ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லச் சொல்லித் தாக்குதல் நடத்திக் கொல்வதும் ஒன்றுதான். இரண்டுமே தவறுதான்" என்று கூறியுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு ஒரு சிலர் ஆதரவும், ஒரு சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சாய் பல்லவிக்கு ஆதரவாக நடிகை ரம்யா கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நடிகை சாய் பல்லவிக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்த வேண்டும். ஒவ்வொருவருக்கும் கருத்து சொல்ல உரிமை உண்டு. அப்படி இருக்கையில் பெண்களுக்கு மட்டும் உரிமை இல்லை? நல்ல மனிதனாக இரு என்று கூறினால் உடனே தேசத் துரோகி என்று முத்திரை குத்தி விடுவார்கள். ஆனால் 'கோலி மாரோ' என்றால் ஹீரோ என்று சொல்லுவார்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
The trolling & threats to @Sai_Pallavi92 must stop.Everyone is entitled to an opinion or is it that women alone aren’t?What she has said is what any decent human being would say- to be kind & to protect those who are oppressed. One can disagree with someone without being abusive.— Divya Spandana/Ramya (@divyaspandana) June 16, 2022