Skip to main content

“என் கணவருக்கு உடல் உறுப்பு மட்டும் கிடைத்திருந்தால்..” - நடிகை மீனா உருக்கம்

Published on 16/08/2022 | Edited on 16/08/2022

 

Actress Meena donates organs

 

கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகை மீனா, வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.  சமீபகாலமாக நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் அண்மையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

 

Actress Meena donates organs

 

இந்நிலையில் நடிகை மீனா உடல் உறுப்பு தானம் செய்வதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “ஒரு உயிரை காப்பாற்ற கூடிய சிறந்த விஷயம் உடல் உறுப்பு தான். அதை விட சிறந்தது வேறு எதுவும் கிடையாது. எனது கணவர் வித்யாசாகருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்திருந்தால், என் வாழ்க்கையே மாறியிருக்கும். ஒரு உடல் உறுப்பு தானத்தின் மூலம் 8 உயிரை காப்பாற்ற முடியும். அனைவரும் உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதனால் நான் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு எடுத்துள்ளேன். இதுவே நம் பரம்பரையை வாழ வைக்க சிறந்த வழி” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வதந்திகளுக்கு கண்டனம் தெரிவித்த மீனா

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
meena condemn about his second marriage rumours

90களில் மற்றும் 2000 தொடக்கத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. 2009 ஆம் ஆண்டு தொழிலதிபர் வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், 2022 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் வித்யாசாகர் மரணமடைந்தார். இவர்களுக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. அக்குழந்தையுடன் தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார் மீனா. இதனிடையே மீனா இரண்டாம் திருமணம் குறித்து அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகள் உலா வந்து கொண்டிருந்தது. அதை திட்டவட்டமாக மறுத்திருந்தார் மீனா. 

இந்த நிலையில், தனது இரண்டாவது திருமண வதந்திகள் குறித்துப் பேசிய மீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய அவர், “இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகள் தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் வருத்தத்திற்கு ஆழ்த்தியது. தகவல்களை சரி பார்க்காமல் அதை செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். தனது வாழ்க்கை தற்போது திருப்திகரமாக இருக்கிறது” என்றார். 

மேலும், “சமூக வலைத்தளத்தில் உண்மைகளை சொன்னால் தான் நல்லது. எனக்கு இரண்டாவது திருமணம் பற்றி எந்த சிந்தனையும் இப்போது இல்லை. அது பற்றி வெளியாகும் வதந்திகளை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்'' என்று கூறியுள்ளார். மீனா தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். மலையாளத்தில் ஒரு படமும் தமிழில் ஒரு படமும் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

உடல் உறுப்புகள் தானம்; தொழிலாளிக்கு அரசு முதல் மரியாதை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Govt first honor to worker who donated  organs.

 

இறந்தும் உயிர் கொடுத்த அந்த மாமனிதரின் உடலுக்கு தேசத்தில் எங்குமே அளிக்கப்படாத அரசு மரியாதையை முதன்முதலாக வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அந்த முதல் அரசு மரியாதை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் உறுப்பு தானம் செய்தவருக்கு முதன்முதலாகத் தரப்பட்டிருக்கிறது.

 

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (45) அருகிலுள்ள ராஜபாளையம் நகராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்த ஏழைத் தொழிலாளி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்பன் அந்தப் பணியிலிருந்து விலகி ஊரிலுள்ள கறிக்கடையில் வேலை செய்து வந்திருக்கிறார். கடந்த 07ம் தேதியன்று வேலை முடித்துவிட்டு வந்த மாரியப்பன் சாலையோரம் ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த போது, ஸ்பீடாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்று அவர்மீது  மோதி தூக்கி வீசியதில் தரையில் அவர் தலைமோதி கடுமையாக அடிபட்டு மயக்க நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு ஆரம்ப கட்ட சிகிச்சையளிக்கப்பட்டு பின் உடனடியான மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.

 

நெல்லை அரசு மருத்துவமனையில் மாரியப்பனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மூளைச்சாவு அடைந்திருந்ததையும், அதன் செயல்பாட்டையும் அவரது உறவினர்களுக்குத் தெரியப்படுத்தினர். மாரியப்பனுக்கு நேர்ந்ததை எண்ணி கலங்கி கண்ணீர் வடித்த அவரது குடும்பத்தினர் மனதைத் தேற்றிக்கொண்டு, அவர் நடுத்தர வயதுடையவர் என்பதால் அவரது பிற உறுப்புகளாவது யாருக்காகவாவது பயன்படட்டும் என்ற உன்னத முடிவில், மாரியப்பனின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலனுக்குத் தெரிவித்திருக்கிறார்கள்.

 

Govt first honor to worker who donated  organs.

 

பின்னர் அவரது தலைமையிலான மருத்துவக் குழுவினர், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி தொழிலாளி மாரியப்பனின் உடல் உறுப்புகளான கல்லீரல், 2 சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் ஆகியவற்றை திசு அறுவை சிகிச்சையின் மூலம் பக்குவமாகப் பிரித்தெடுத்தனர். அதன்பின் கல்லீரல் மதுரை தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் மற்றும் கண்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் முறைப்படி வழங்கப்பட்டது.

 

இவையனைத்தும் முடிக்கப்பட்ட பின்னர் 10ம் தேதியன்று தன் உடல் உறுப்புகளைத் தானம் செய்த மாரியப்பன் உடலுக்கு மருத்துவமனை டீன் ரேவதி பாலன் மற்றும் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து முதல் அரசு மரியாதையாக இறுதி அஞ்சலி செலுத்தி உடலை அனுப்பி வைத்தனர். ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட மாரியப்பனின் உடல், அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்படவிருக்கிற அவரது சேத்தூர் கிராமத்திற்குக் கொண்டு செல்கிறபோது, நெல்லை அரசு மருத்துவமனையின் நூற்றுக்கணக்கான பயிற்சி மருத்துவர்கள் வழிநெடுக வரிசையாக நின்று கண்ணீருடன் இறுதி மரியாதை செய்து வழியனுப்பி வைத்தது காண்போரின் கண்களில் கண்ணீரைச் சுரக்க வைத்தது.

 

Govt first honor to worker who donated  organs.

 

அன்றைய தினம் இரவு மாரியப்பனின் உடல் அவரது சொந்தக் கிராமத்தின் சுடுகாட்டில் அடக்கம் செய்கிறபோது, முதல் அரசு மரியாதையாக விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாலையணிவித்து இறுதியஞ்சலி செலுத்தினர். உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்த அவரது உறவினர்களுக்கு நன்றி தெரிவித்தோம். அவரது உடல் உறுப்புகள், திசுக்கள் நல்ல நிலைமையில் உள்ளன என்றார் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பாலன்.

 

தான் இறந்த பின்பும் மற்றவர்களை உயிர் வாழச் செய்து தானும் உயிர் வாழ்கிற அந்த ஆன்மாவிற்கு தேசத்தின் எந்த மூலையிலும் தரப்படாத அரசு மரியாதையை வழங்கி கௌரவப்படுத்தியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.