/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/166_14.jpg)
விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த 5 ஆம் தேதி வெளியான படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இப்போது வரை ரூ.150 கோடியை கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம் டீசர் வெளியான பின்பு தொடர் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. மத வெறுப்பைத் தூண்டும் வகையில் படம் இருப்பதாகப் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தியாவை தொடர்ந்து இங்கிலாந்தில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இப்படம் குறித்து வெளியான சர்ச்சை குறித்து இயக்குநர் பேசுகையில், "இது நமது ஜனநாயகத்தின் மிகவும் சோகமான பகுதியாகும். ஜனநாயகம் என்ற பெயரில் பல விஷயங்கள் சரியாக நடப்பதில்லை. இந்தியாவில் செயல்படும் தீவிரவாத கும்பலை பற்றி பேசும்போது,​​ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். அவர்களின் மனசாட்சிப்படி ஒன்றுபட்டு சமூகத்தின் தீமைக்கு எதிராகப் போராட வேண்டும்" என்றுள்ளார்.
இப்படத்தின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்துள்ள அதா சர்மா இப்பட சர்ச்சை குறித்து பேசுகையில், "மேற்கு வங்கத்தில் படம் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எல்லா இடங்களிலும் இது இலவசமாகக் காண்பிக்கப்படும் என்று நம்புகிறேன். அதன் மூலம் மக்கள் பார்த்து இப்படம் பிடித்துள்ளதா இல்லையா என்று முடிவு செய்யட்டும்" என்றார்.
இப்படம் தமிழகத்தில் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு சார்பில் “தி கேரளா ஸ்டோரி படத்திற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாத காரணத்தால் திரையரங்குகளே தாங்களாக முன்வந்து படத்தை திரையிடுவதை நிறுத்தியுள்ளனர்.திரைப்படத்தை தமிழ்நாடு அரசு தடை செய்துவிட்டதாகக் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல்” என்று விளக்கம் அளித்தனர். மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)