இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்ததாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியானதாகவும் 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அதே வேளையில், உலகில் உள்ள பல்வேறு மாணவர் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இந்தப் போரை நிறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 26ஆம் தேதி இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர், ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதனால், அங்கு எந்தவித உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது. போர் சூழல் ஏற்படும் அபாயம் இருந்ததால், காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இஸ்ரேல் படையினர் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 45 பாலஸ்தீன மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலகளவில் பரவலாக பேசப்பட, பலரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ஆல் ஐஸ் ஆன் ரபா’ ‘ALL EYES ON RAFAH' என்ற போஸ்டரை அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதில் த்ரிஷா, சமந்தா, துல்கர் சல்மான், அட்லீ, ஹன்சிகா, மாதுரி தீக்ஷித், சோனம் கபூர், இலியானா, ரகுல் ப்ரீத் சிங், மலைக்கா அரோரா, நோரா ஃபதாஹி என பலரும் இருக்கும் நிலையில் அவர்களோடு விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பிரபலங்கள் என மொத்தம் 3 கோடிக்கும் அதிகமானோர் கடந்த 24 மணிநேரத்தில் இந்த போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.