Skip to main content

தந்தை தந்த அறிமுகம்... ’தளபதி’ என்னும் புது முகம்! விஜய்யின் பயணம் #1   

Published on 06/11/2020 | Edited on 06/11/2020


 

thalaivaa vijay

 

மீண்டும் ஒரு முறை சர்ச்சையாகியிருக்கிறது விஜய் என்ற பெயர். கட்சி தொடங்க விண்ணப்பம் என்று செய்தி, அதை உறுதி செய்த தந்தை, தனக்கு சம்மந்தமில்லை என்று விஜய் அறிக்கை... என இதுவரை இல்லாத மனநிலையில் இருக்கின்றனர் விஜய் ரசிகர்கள். சில ஆண்டுகளாகவே அவர்களது போஸ்டர்களிலும் பேனர்களிலும் சினிமாவைத் தாண்டிய அரசியல் வாசகங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. 'நாளைய தீர்ப்பி'ல் அறிமுகமாகி தனது தந்தையால் 'இளைய தளபதி' ஆக்கப்பட்டு தற்பொழுது ரசிகர்களால் 'தளபதி'யாக உயர்ந்து நிற்கிறார் விஜய்.

 

இவரது தந்தை புகழ் பெற்ற, பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர்தான், அதனால் இவர் சினிமாவுக்குள் வந்தது மிக எளிதாகவும் இயல்பாகவும் நடந்துதான். ஆனால், அதன் பின்பு இவர் பெற்ற வெற்றிகளோ, இன்று அடைந்திருக்கும் புகழோ இவருக்கு எளிதாகவோ இயல்பாகவோ கிடைத்திடவில்லை. இவரது சினிமா பயணத்தில் வழியெங்கும் பலமுறை விழுந்திருக்கிறார், பின்பு ஆற்றலைத் திரட்டி எழுந்திருக்கிறார்.

 

இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் ஆரம்பத்தில் சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக, பெரும்பாலும் சிறு வயது விஜயகாந்த்தாக நடித்த விஜய், கதாநாயகனாக அறிமுகமானது 1992இல் வெளிவந்த 'நாளைய தீர்ப்பு' திரைப்படத்தில்தான். அறிமுகமானபோது இவரது தோற்றம், நடனம், நடிப்பு என அனைத்தும் விமர்சிக்கப்பட்டன, கேலி பேசப்பட்டன. சளைக்கவில்லை எஸ்.ஏ.சி. தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா என பல படங்களை தனது மகனை வைத்து இயக்கினார். இவற்றில் செந்தூரப்பாண்டி மட்டுமே ஓரளவு வெற்றியையும் பெற்று அனைவரும் பார்க்கும்படியும் இருந்தது. மற்ற படங்கள் அனைத்தும் கவர்ச்சி, அதீத மசாலாத்தனம் என விமர்சிக்கப்பட்ட படங்கள். அதிலும் 'ரசிகன்' திரைப்படம் கவர்ச்சி, ஆபாசம், மசாலா  கலவையில் உச்சமாக இருந்தது.

 

இதனால், அத்தனை படங்கள் நடித்தாலும் விஜய் என்னும் நடிகர் குடும்பங்களால், பெண்களால் ஏற்றுக்கொள்ளப்படாத நடிகராகவே அதுவரை இருந்தார். இத்தனை விமர்சனங்களிலிருந்தும் விஜயை மீட்கும் வண்ணம் 1996ஆம் வருடம் வெளியானது 'பூவே உனக்காக'. விக்ரமன் இயக்கிய அந்தப் படம்தான் அதன் பின்னர் பல ஆண்டுகள் விஜயைத் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தமிழகத்தில் பலரும் நினைக்க வைத்த வெற்றித் திரைப்படம். திருமண வீடுகளெங்கும் 'ஆனந்தம் ஆனந்தம்', காதலர்கள் மனங்களெங்கும் 'மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்' என முழுமையாக மக்களிடம் விஜயைக் கொண்டு சேர்த்தது அந்தத் திரைப்படம். இதன் தொடர்ச்சியாக அமைந்தவைதான் பின்னர் வந்த காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும் போன்ற இந்த வகை வெற்றிப் படங்கள்.

 

 

naalaiya theerpu

 

 

அதன் பிறகு சில வெற்றிப்படங்கள், ஓரிரு தோல்விப் படங்கள் என சென்றது விஜயின் சினிமா பயணம். ஆனாலும் அப்பொழுது விஜயைப் பற்றி இருந்த பேச்சு, அவர் B, C சென்டர்களுக்கான நாயகன் என்பதே. இப்பொழுது தமிழ் சினிமா சந்தையில் இந்த A, B, C சென்டர் பிரிவுகள் குறைந்துவிட்டன. அப்பொழுதெல்லாம் அந்த வரையறை பலமாக இருந்தது. விஜய் ஸ்டைலான பாத்திரங்களுக்கு ஏற்றவரல்ல என்ற பார்வையே இருந்தது. அவரும் அதுபோல தனது உடைகளில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை, செலுத்தினாலும் ஏதோ ஒன்று குறைவது போன்றே இருக்கும். பிரஷாந்த் உச்சத்தில் இருந்த காலகட்டம் அது, திருடா திருடா, ஜீன்ஸ் என மணிரத்னம், ஷங்கர் நாயகனாக அவரும் இன்னொரு புறம் அழகான நாயகனாக அஜித்தும் பேசப்பட, விஜய்க்கு இது ஒரு குறையாகவே பார்க்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த 'குஷி' அந்த பிம்பத்தை மாற்றியது. 'வாலி' என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற, வழக்கத்துக்கு மாறான படத்தை எடுத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, ஒரு வெகு வழக்கமான கதை, அதையும் படத்தின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு கொண்டு சென்ற 'குஷி' வாலியை மிஞ்சும் வெற்றியைப் பெற்றது. விஜயின் ஸ்டைலிஷ் தோற்றத்துக்கும் உடைகளுக்கும் துவக்கமாக அது அமைந்தது.

 

நல்ல வெற்றிகள், புகழ், மெல்ல பெருகிக்கொண்டிருந்த ரசிகர்கள் எண்ணிக்கை, என தொழில் வாழ்க்கை சிறப்பாக சென்றுகொண்டிருந்த அந்த சமயம், விஜயின் சொந்த வாழ்க்கை குறித்து சில செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அவர் காதலில் விழுந்ததாகவும் அதை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லையெனவும் அதனால் தற்கொலை முயற்சி அளவுக்கு சென்றதாகவும் அப்போது சில பத்திரிகைகளில் 'கிசுகிசு' வகை செய்திகள் வந்தன. ஆனால், எதுவும் பெரிதாக வெளிப்படையாகப் பேசப்படவில்லை. அதற்கு விஜய் தரப்பில் யாரும் பதிலும் சொல்லவில்லை, பதில் சொன்னது 1999ஆம் ஆண்டு நடந்த விஜய்-சங்கீதா திருமணம். லண்டனில் வாழ்ந்துவந்த இலங்கைத் தமிழரும் தன் ரசிகையுமான சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் விஜய். இன்று வரை அவர்களது அன்பில் எந்தக் குறையுமின்றி செல்கிறது அவர்கள் உறவு. 

vijay with sangeetha


 

காதல் படங்கள், குடும்பப் படங்கள், காமெடி படங்கள் என பல வெற்றிகளைக் கொடுத்த விஜய்க்கு அப்பொழுது வரை ஆக்ஷன் என்ற ஒன்று அமையவேயில்லை. தனது தந்தையின் இயக்கத்தில் அவர் நடித்த பல படங்கள் ஆக்ஷன் படங்களாக ஆக்க முயற்சிக்கப்பட்டவைதான். ஆனால் எதுவும் வெற்றி பெறவில்லை. விஜயின் பட போஸ்டர்களோ பாடல்களோ வெளிவரும்போதே அவை ஆக்ஷன் படம் போல  இருந்தால், 'படம் அவ்வளவுதான்' என்று மற்றவர்கள் பேசக்கூடிய அளவுக்கு இருந்தது விஜய் கிராஃப். ஆரம்ப கால அப்பாவின் படங்களும் அதற்குப் பின் அவ்வப்போது முயற்சித்த ஆக்ஷன் படங்களான நெஞ்சினிலே, பகவதி, தமிழன், புதியகீதை போன்ற படங்களும் தோல்வியை சந்தித்ததால், 'காதல், காமெடி, குடும்பம் தாண்டிய கதைகள் விஜய்க்கு செட் ஆகாது' என பேசப்பட்டது. இன்னொரு புறம் அவரது போட்டியாளராக இருந்த அஜித் அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஆக்ஷனில் கலக்கிக் கொண்டிருந்தார்.

 

இந்த நிலையில் தோற்றம், உடை, பேச்சு, சூழல் ஏன் படத்தின் கலர் வரை அனைத்திலும் அதுவரை விஜய் நடித்த படங்களிலிருந்து மாறுபட்டு வந்தன ஒரு புதிய விஜய் படத்தின் போஸ்டர்கள். அது எந்தப் படம்? வெற்றி பெற்றதா? கீழே உள்ள கட்டுரை லிங்க்கை கிளிக் செய்து தொடர்ந்து வாசியுங்கள்...     

எஸ்.ஏ.சி, விஜய்க்கு செய்தது என்ன? விஜய்யின் பயணம் #2

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''யாரு முயல்? யாரு யானை?''- வழக்கம்போல் குட்டிக்கதை சொன்ன விஜய்

Published on 01/11/2023 | Edited on 02/11/2023

 

"Who is the rabbit? Who is the elephant?''-Vijay told a short story as usual

 

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.

 

இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் விஜய் வழக்கம் போல் ஒரு குட்டி கதை சொன்னார். அவர் பேசியதாவது ''இரண்டு பேர் ஈட்டியுடன் வேட்டைக்கு சென்றார்கள். ஒருத்தர் ஈட்டியில முயல அடிச்சு தூக்கிட்டாரு. இன்னொருத்தர் ஈட்டியை வைத்து யானையை எய்ம் பண்றாரு, எய்ம் பண்றாரு மிஸ் ஆயிட்டே போகுது. அப்ப ரெண்டு பேரும் மீண்டும் ஊருக்குள்ள வராங்க. ஒருத்தர் கையில முயலோட வரார். ஒருத்தர் வெறும் கையில் வேலோட வரார். இவங்க ரெண்டு பேத்துல யாரு ஜெயிச்சாங்க'னு நினைக்கிறீங்க. யார் கெத்து'னு நினைக்கிறீங்க.

 

அந்த யானையை எய்ம் பண்ணி தவற விட்டார் இல்ல அவர் தான். இதை நான் ஏன் சொல்றேன்னா நம்மால் எதை ஈசியா ஜெயிக்க முடியுமோ அதை ஜெயிப்பது வெற்றியில்ல நண்பா. நம்மால் எது ஜெயிக்கவே முடியாதோ அதை ஜெயிக்க முயற்சி பண்றோம் இல்ல, அதுதான். உன்னிப்பாக கவனிக்கணும், முயற்சி பண்றோம் இல்ல, அதுதான் உண்மையான வெற்றி. உங்களுடைய குறிக்கோள்; உங்களுடைய லட்சியம்; எல்லாம் பெருசா யோசிங்க, பெருசா கனவு காணுங்க, பெருசா திங்க் பண்ணுங்க, யாரும் அதெல்லாம் யாரும் தவறு'னு சொல்ல முடியாது.

 

பாரதியார் சொன்னது தான் 'பெரிதிலும் பெரிது கேள்' அப்படி இருக்க வேண்டும் உங்கள் கனவுகள்; அப்படி இருக்க வேண்டும் உங்கள் ஆசைகள்; அப்படி இருக்க வேண்டும், உங்கள் உழைப்பு. அப்படி நீங்கள் பயணித்தால் இலக்கை நிச்சயம் அடைவீர்கள். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இடம் இருக்கு நண்பா. ஆசைகள் இருக்கும்; கனவுகள் இருக்கும். ஆனால் எல்லாருக்கும் ஒரு இடம் இருக்கிறது. வீட்ல ஒரு குட்டி பையன் ஆசையா அவங்க அப்பாவோட சட்டையை எடுத்து போட்டுக்குவான். அவரோட வாட்சை எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ல ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த சட்ட அவனுக்கு செட்டே ஆகாது. தொளதொளனு இருக்கும். வாட்ச் கையிலே நிற்காது. அந்த சேர்ல உட்காரலாமா இல்லையா? அந்த தகுதி எல்லாம் தெரியவே தெரியாது.  அப்பா மாதிரி ஆக வேண்டும் என்று கனவு. இதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணு நண்பா.

 

தயவு செஞ்சு சொல்றேன் சினிமாவை சினிமாவா பாருங்க. உலகம் முழுவதும் பார்த்தால், சினிமா மக்கள் பார்க்கின்ற பொழுதுபோக்கு அம்சம். அதில் வருகின்ற டயலாக், சீன்ஸ் எல்லாமே முழுக்க முழுக்க ஒரு கற்பனை. முழுக்க முழுக்க ஒரு செயற்கை தனமானது என்பது எல்லாருக்குமே தெரிஞ்ச விஷயம். அப்படி ஒரு சில படங்களில் ஒரு நல்லவன், ஒரு கெட்டவன் இருப்பான். அதை வேறுபடுத்தி காட்டுவதற்கு நீங்கள் என்ன பண்ணுவீங்க. அதற்கு தகுந்த மாதிரி சில காட்சிகள், அதற்கு தகுந்த மாதிரி சில வசனங்களை வைப்பது ஸ்கிரீன் பிளேயில் ஒரு காமனான விஷயம். அப்படி ஒரு சில கேரக்டர்கள் மூலம் சொல்லப்படுகின்ற சில தவறான எண்ணங்கள், ஆக்சன்... நான் உங்களுக்கு சொல்லி புரிய வைத்து அட்வைஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு டெஃபனட்டா தெரியும் நீங்கள் யாரும் அதை ஃபாலோ பண்ண மாட்டீங்க என்று. நீங்கள் எல்லாம் என்ன அவ்வளவு  அன்மெச்சூரா என்ன. நல்ல நல்ல விஷயங்களை எடுத்துக்கோங்க. மற்றதை விட்டுருங்க. திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும்''  என்றார்.

 

 

 

Next Story

‘தளபதி 68’ - அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு பதில்!

Published on 06/06/2023 | Edited on 06/06/2023

 

Venkat Prabhu about Thalapathy 68

 

காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்த சுனைனா முதன்மை கதாபாத்திரமாக நடித்து வெளிவர இருக்கும் படம் ‘ரெஜினா’. இப்படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. 

 

இதில் பங்கேற்ற இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில் “இந்த ரெஜினா படத்தின் இசையமைப்பாளரும், தயாரிப்பாளருமான சதீஷ் குமார் எனக்கு ஆரம்ப கால நண்பன். எனது தந்தைக்கு மிகவும் பிடித்த நபர் அதனால் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். இந்தப் படத்தில் நடித்த சுனைனா இதற்கு முன் இப்படி ஒரு பரிமாணத்தில் பார்த்ததே இல்லை . அந்த அளவுக்கு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இருந்தது. இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்” என்றார்

 

மேலும், விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டை வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது  "இப்போது தளபதி 68 படத்தின் அப்டேட்டை கூறினால், விஜய்யே என்னை திட்டுவார். அதனால் லியோ படம் வெளிவரட்டும் அதன்பின்பு தளபதி 68 படத்தின் அப்டேட்ஸ்  கண்டிப்பாக வரும்" என்று கூறினார்.