தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான சதீஷ், கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் சதீஷிற்கு ஜோடியாக குக் வித் கோமாளி புகழ் பவித்ரா நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் 21ஆவது படமான இப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிவருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பானது தற்போது முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு 'நாய் சேகர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயனும் கிரிக்கெட் வீரர் அஷ்வினும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
24ஆம் புலிகேசி பட சர்ச்சையில் இருந்து மீண்டுவந்துள்ள நடிகர் வடிவேலு, சுராஜ் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கவுள்ளார். இப்படத்திற்கு 'நாய் சேகர்' எனப் பெயரிட விரும்பிய படக்குழு, இந்த டைட்டிலை கைவசம் வைத்திருந்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இப்படியான சூழலில் 'நாய் சேகர்' பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது வடிவேலு ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.