Skip to main content

'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை...' கண்ணதாசனின் கவிநுட்பத்திற்கான சான்று !

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

rajesh

 

நடிகர் ராஜேஷ், சினிமா, இலக்கியம், ஆன்மிகம், சினிமா பிரபலங்களுடனான அவருடைய நெருக்கம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து நக்கீரனிடம் தொடர்ந்து பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், 'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்...' என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எவ்வளவு நுட்பமாக எழுதியிருப்பார் என்பது குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்...' என்று பாடல் 'வல்லவனுக்கு வல்லவன்' படத்தில் இடம்பெற்றிருக்கும். இந்தப்பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருப்பார். காதல் பாடல்களில் கண்ணதாசன் எழுதியவற்றையெல்லாம் பிறரால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. நாம் என்னவெல்லாம் கற்பனை செய்கிறோமா அதை நிஜ வாழ்க்கையில் செய்யமுடியாது என்பார் பிளேட்டோ. இது உண்மையும்கூட. பல கவிஞர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்களின் வாழ்க்கையை நேரடியாக பார்த்துவிட்டுத்தான் இதை நான் கூறுகிறேன். சினிமாவைப் பார்த்து இப்படியெல்லாம் நடந்தால் நன்றாக இருக்குமே என்று நாம் நினைப்பது நிஜ வாழ்க்கையில் நடப்பதில்லை. 

 

'ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்...' என்ற பாடலை மிகநுட்பமாக கண்ணதாசன் எழுதியிருப்பார். முதல் வரியைக் கவனித்தாலே உங்களுக்கு அது புரியும். மிகப்பெரிய கூட்டத்தில் இருந்தாலும் அங்கிருக்கும் ஓராயிரம் பார்வையில் உன் பார்வையை நான் கண்டுபிடித்துவிடுவேன் எனக் கூறுகிறார். காதலிப்பவர்களுக்கு இது நன்றாக புரியும். அவர்களுக்கு இடையேயான அந்த பரிபாஷைகள் மிக அருமையாக இருக்கும். ஆண்களுக்கு 130 டிகிரிதான் பார்வை கோணம் உண்டு. ஆனால், பெண்களுக்கு 160 டிகிரி பார்வை கோணம் உண்டு. 'உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்...' இத்தகைய வரிகளையெல்லாம் கண்ணதாசனுக்கு முன்பு சினிமா பாடலில் யாரும் எழுதியதில்லை. 

 

'நூறுமுறை பிறந்தாலும் நூறுமுறை இறந்தாலும் உனைப்பிரிந்து வெகுதூரம் நான் ஒருநாளும் போறதில்லை... உலகத்தின் கண்களிலே உருவம் மறைந்தாலும் ஒன்றான உள்ளங்கள் ஒருநாளும் மறைவதில்லை...' ஆத்மார்த்தமான காதல் என்று நாம் சொல்கிறோமே; அந்தக்காதலை எவ்வளவு நுட்பமாக கண்ணதாசன் குறிப்பிட்டிருக்கிறார் என்று கவனியுங்கள். 'இந்த மானிடர் காதலெல்லாம் மரணத்தில் மாறிவிடும்... இந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்... நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும்கூட வரும்...' மனிதர்களுடைய காதல் என்றால் மரணம் வரும்போது அது காணமால் போய்விடும். என்னுடைய காதல் தெய்வீகக் காதல் என்று கதாநாயகியிடம் கதாநாயகன் கூறுகிறான். 

 

'இந்தக் காற்றினில் நான் கலந்தேன்... உன் கண்களைத் தழுவுகிறேன்...' கட்டியணைப்பது, தலையைக் கோதுவது என்றுதான் தமிழ் சினிமாவில் பாடல்கள் வந்திருக்கின்றன. கண்களைத் தழுவுகிறேன் என்று  பாடல்களுக்கு புதுமை கொடுத்தவர் கண்ணதாசன். 'இந்த ஆற்றினில் நான் ஓடுகிறேன்... உன் ஆடையில் நான் ஆடுகின்றேன்...' ஆற்றில் வரும் தண்ணியில் நாயகியின் ஆடை அசைந்தாடுவதை மிக அற்புதமான கற்பனையில் கொண்டுவந்திருக்கிறார் கண்ணதாசன். 'நான் போகின்ற பாதையெல்லாம் உன் பூமுகம் காணுகின்றேன்...' ராவணனின் தங்கை சூர்ப்பனகை சீதையின் அழகை ராவணனிடம் சொல்லி வர்ணிக்கையில், அவன் காதல் மயக்கமாகி சீதை பற்றி விசாரிக்கிறான். அப்போது அவனது முகம் மாறுவதைக்கண்டு, என்ன என்று சூர்ப்பனகை கேட்கிறாள். தனக்கு எதைப் பார்த்தாலும் சீதையாகத் தெரிவதாக இராவணன் கூறுகிறான். காதல் மயக்கம் கண்டுவிட்டால் காணும் பொருளெல்லாம் அவர்களாகத் தெரிவார்கள் என்பார்கள். இதைத்தான் கண்ணதாசன் இங்கு குறிப்பிடுகிறார். இந்தப்பாடலை சாதாரணமாகக் கேட்டால் மிகச்சாதாரணமான பாடல்போலத்தான் தெரியும். ஆனால், சிறிய சோகம் கலந்து பாடியுள்ள எம்.எஸ்.வி குரலோடு உள்வாங்கி கேட்கும்போது வேறுமாதிரியான பாடலாக இருக்கும். இப்பாடலிலேயே, 'இந்தக் காற்றினில் நான் கலந்தேன்... உன் கண்களைத் தழுவுகிறேன்...' என்ற வரிதான் எனக்கு மிகவும் பிடித்தமான வரி. இதற்கு ஒப்பான வரியை இதுவரை நான் கேட்டதில்லை.

 

 

சார்ந்த செய்திகள்