Skip to main content

போதைப்பொருள் வழக்கு - நீதிமன்றத்தை நாடிய நவ்தீப்?

Published on 16/09/2023 | Edited on 16/09/2023

 

actor navdeep case update

 

கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி, ஹைதராபாத் போதைப்பொருள் போலீசார் மாதப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் சோதனை நடத்தினர். அங்கு விலையுயர்ந்த போதைப் பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட திரைப்பட பைனான்சியர் வெங்கடரத்னா ரெட்டி, பாலாஜி மற்றும் முரளி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். 

 

விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் நடிகர் நவ்தீப் மற்றும் தயாரிப்பாளர் ரவி ஆகியோர் பெயரைச் சொல்லியுள்ளதாக போலீஸ் தரப்பு தெரிவித்தது. மேலும் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சி.வி. ஆனந்த், இந்த வழக்கில் நவ்தீப் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், நடிகர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறினார். இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த நவ்தீப், "அது நான் இல்லை. தயவுசெய்து தெளிவு படுத்துங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். 

 

இதையடுத்து நவ்தீப், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகி, இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை எனவும் கைது செய்யவுள்ளதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பின்பு அவரைக் கைது செய்ய வேண்டாம் என போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நவ்தீப் அறிந்தும் அறியாமலும், ஏகன், இது என்ன மாயம் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். 

 

கடந்த 2017 ஆம் ஆண்டு போதைப்பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில், 10 திரைப் பிரபலங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் நவ்தீப்பும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பண்ணை வீட்டில் போதை விருந்து; சிக்கிய நடிகை; தயாரிப்பாளர் சாடல்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
actress hema rave party issue case

கர்நாடக போலீஸார், கடந்த 20ஆம் தேதி பெங்களூரு புறநகர் பகுதியில் மது விருந்து நடந்த பண்ணை வீட்டில் அதிரடி சோதனை செய்தனர். ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான வாசு, தனது பிறந்தநாளையொட்டி இந்த விருந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அங்கு மது விருந்து என்ற பெயரில் போதைப்பொருளும் பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டது. இதில் தெலுங்கு திரையுலகினர், ஐ.டி.ஊழியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் விருந்தில் பங்கேற்றுள்ளனர். 

மேலும் தெலுங்கு நடிகை ஹேமா கலந்துகொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார் ஹேமா. பின்பு பெங்களூரு நகர காவல்துறையினர் ஹேமா விருந்தில் கலந்துகொண்டதை உறுதி செய்தது. ரத்த மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதிசெய்யப்பட்டது. 

அத்தோடு அந்தப் போதை விருந்தில் 73 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 103 பேர் கலந்துகொண்டதும், இதில் 59 ஆண்கள் மற்றும் 27 பெண்கள் என மொத்தம் 86 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியது அவர்களுடைய ரத்த மாதிரிகள் சோதனையில் தெரியவந்துள்ளது. அனைவருக்கும் மத்திய குற்றப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. இதில் நடிகை ஹேமா மட்டுமல்லாது நடிகை ஆஷா ராயும் கலந்து கொண்டு போதைப் பொருள் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இது தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஐந்து பேர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக தெலுங்கு தயாரிப்பாளர் நட்டி குமார், “திரைத்துறை விஷயங்களில் திரைத்துறையினர் ஈடுபட்டால், அவர்களின் படங்களை மக்கள் பார்க்க தயங்குவார்கள். இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்கள் யாராக இருந்தாலும், என்ன செய்தாலும் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்” என்றார்.

Next Story

நடிகை பாயல் ராஜ்புத் மீது புகார்

Published on 22/05/2024 | Edited on 22/05/2024
payal rajput rakshana team issue

சின்னத்திரையில் பிரபலமாகி பஞ்சாபி, இந்தி, தெலுங்கு என அடுத்தடுத்த மொழிகளில் அறிமுகமானவர் நடிகை பாயல் ராஜ்புத். தமிழில் 2021ஆம் ஆண்டு வெளியான இருவர் உள்ளம் படத்தில் வினய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்போது ரக்‌ஷனா என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளரால் தான் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக பரபரப்பு குற்றச்சாட்டை சில தினங்களுக்கு முன் வைத்தார். அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், “நான் நடித்துள்ள ரக்‌ஷனா படம் 2019ஆம் ஆண்டு படமாக்கப்பட்டது. பின்பு 2020ல் 5 டபள்யூ.எஸ் (5ws) எனத் தலைப்பு வைக்கப்பட்டது. இப்படம் வெளியாவதில் தற்போது தாமதமாகி வருகிறது. அதனால் படக்குழு என்னுடைய சம்பளத்தை இன்னும் கொடுக்காமல் இருக்கின்றனர். மேலும் என்னுடைய சமீபத்திய வெற்றியை வைத்து பலனடைய பார்க்கிறார்கள். என்னை புரொமோஷனுக்கு வரவழைக்க முயற்சிக்கிறார்கள். அதற்கு என்னுடைய டீம், அடுத்தடுத்த கமிட்மெண்டுகளால் புரொமோஷனில் கலந்து கொள்ள முடியாது எனச் சொன்ன பிறகும், தெலுங்கு சினிமாவிலிருந்து என்னைத் தடைசெய்து விடுவதாக மிரட்டுகின்றனர். 

என்னுடைய டீம் ரக்ஷனா பட டிஜிட்டல் விளம்பரத்திற்காக பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்த போது, முதலில் இழப்பீட்டுடன் நிலுவைத் தொகையை செலுத்த பரிந்துரைத்தது. ஆனால், அவர்கள் சமரசம் செய்து கொள்ள மறுத்துவிட்டனர். என் பெயரைக் கெடுக்கும் வகையில் என் பெயரைப் பயன்படுத்தியுள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. சமீபத்திய சந்திப்புகளில், அவர்கள் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார்கள். விநியோகஸ்தரிடம் சில சொத்துக்களைக் காட்டும்படி கேட்டனர். அப்படி காட்டவில்லை என்றால், என்னுடைய படத்தை வெளியிட மாட்டோம் எனக் கூறினர். என்னுடைய சம்பளப் பாக்கியை திருப்பித் தராமலும் என்னுடைய ஒப்புதல் இல்லாமலும் படத்தை வெளியிட முயற்சித்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்து பதிவிட்டிருந்தார். இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் பாயல் ராஜ்புத்தின் மீது ரக்‌ஷனா படக்குழு தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப் பெற்றுக் கொண்ட தயாரிப்பாளர்கள் சங்கம், ஒப்பந்தத்தின்படி பட புரொமோஷனுக்கு சென்று கலந்து கொள்ளுமாறு பாயல் ராஜ்புத்திற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அவரது சம்பளப் பாக்கியை ரக்‌ஷனா படக்குழு சங்கத்தில் கொடுத்துள்ளதாகவும் அதனால் படக்குழுவிற்கு பாயல் ராஜ்புத் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அத்தோடு இரு தரப்புக்கும் இடையிலான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.