சவுதி அரேபியாவில் 2019ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா(Red Sea International Film Festival) நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா வளர்ந்து வரும் திரை பிரபலங்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச நாடுகளில் இருந்து பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் பாலிவுட் நடிகர் அமீர் கான் கலந்து கொண்டார். அவருக்கு கவுரவ விருது வழங்கப்பட்டது. பின்பு அவர் பேசுகையில் ஷாருக்கான், சல்மான் கான் இருவருடன் இணைந்து நடிக்கும் எண்ணம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் பேசியதாவது, “எனக்கு தெரிந்து சல்மான் கானும் ஷாருக்கானும் இணைந்து நடிக்க ரெடியாகத் தான் இருக்கிறார்கள். நாங்கள் மூன்று பேரும் இணைந்து நடிப்பதை விரும்புகிறோம். ஆறு மாதங்களுக்கு முன்பு நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக இருந்த போது, இது குறித்து பேசினோம். நான் தான் முதலில் சொன்னேன். அதோடு மூன்று பேரும் சேர்ந்து நடிக்காமல் இருப்பதும் நமக்கு வருத்தம் தான் என்றேன்” என்றார்.
அமீர் கான் கடைசியாக லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். இப்போது சிதாரே ஜமீன் பார் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தமிழில் பிரசன்னாவை வைத்து கல்யாண சமையல் சாதம் படத்தை இயக்கிய ஆர்.எஸ் பிரசன்னா இயக்கியுள்ளார். ஜெனிலியா ஹீரோயினாக நடித்துள்ள இப்படம் வருகிற 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.