Skip to main content

95வது ஆஸ்கர் நாமினேஷன் பட்டியல் வெளியீடு - இடம்பிடித்ததா இந்தியாவின் 'செல்லோ ஷோ' படம்?

Published on 24/01/2023 | Edited on 24/01/2023

 

95th Oscar Nomination List Released - India's 'Cello Show' Makes Place

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருது விழா வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இதனால் தேர்வுக்காக அனுப்பப்பட்ட படங்களை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

இந்தியா சார்பில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் அனுப்பப்பட்டது. இந்த நிலையில், இறுதி செய்யப்பட்ட நாமினேஷன் பட்டியலை வெளியிட்டு வருகிறது ஆஸ்கர் அமைப்பு. அந்த வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிறந்த சர்வதேச திரைப்படம் விருதிற்கான நாமினேஷன் லிஸ்டில் 'செல்லோ ஷோ' படம் இடம்பெறவில்லை. 

 

இருப்பினும், இந்தியாவில் டெல்லியின் பின்னணியில் எடுக்கப்பட்ட ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்கிற ஆவணப்படம் சிறந்த ஆவணப்படங்களுக்கான பிரிவிலும், தமிழ்நாட்டில் முதுமலை சரணாலயத்திற்குட்பட்ட தெப்பக்காடு யானைகள் முகாம் பகுதியில் ஒரு குட்டி யானைக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட இரு பழங்குடிகளைப் பற்றிய ஆவணப்படமான 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' (The Elephant Whisperers) ஆவணக் குறும்படம் பிரிவிலும் நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விமானத்தில் பொம்மன் - பெள்ளி தம்பதிக்கு பாராட்டு

Published on 25/03/2023 | Edited on 25/03/2023

 

Pilot gives a big shoutout to Elephant Whisperers' Bomman and Bellie

 

கார்த்திகி கோன்சால்வ்ஸ் இயக்கத்தில் குனீத் மோங்கா தயாரித்திருந்த ஆவணக் குறும்படம் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்'. நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமில் யானை பணியாளர்களாக பணியாற்றி வருகின்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி, தாயைப் பிரிந்து உடம்பில் காயங்களுடன் இருந்த ஒரு குட்டி யானையை ரகு எனப் பெயரிட்டு வளர்த்து வந்ததை குறித்து எடுக்கப்பட்டது. இப்படம் 95வது ஆஸ்கர் விழாவில் விருது வாங்கி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தது. 

 

இதன் பிறகு உலகளவில் கவனம் பெற்ற பிரபலங்களாகிவிட்டனர் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த தம்பதிகளை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து, தலா 1 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கினார். மேலும் இயக்குநர் கார்த்திகி அண்மையில் முதல்வரை சந்தித்து பாராட்டு பெற்றார். அவருக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி முதல்வர் கெளரவித்திருந்தார். 

 

இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த தம்பதி விமானத்தில் பயணித்துள்ள நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள் அந்த தம்பதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோவை வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை பார்க்கையில், ஊட்டிக்கு அந்த தம்பதி விமானம் மூலம் திரும்பியுள்ளனர். அப்போது விமானி ஒருவர், "தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் படத்தின் நட்சத்திரங்கள் நம்முடன் பயணிக்கிறார்கள். அவர்கள் எங்கள் விமானத்தில் பயணிப்பது மகிழ்ச்சி" எனக் கூறினார். பின்பு பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதி அனைவரின் முன்பும் எழுந்து நிற்க பயணிகள் அனைவரும் அவர்களுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமுக வலைத்தளங்களில் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

 

 

Next Story

"எனக்கு எதுவும் தெரியாது" - ஆஸ்கர் குறித்து ஆர்.ஆர்.ஆர் பட தயாரிப்பாளர் பளிச்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Producer dvv danayya about rrr spend Rs 80 crore on Oscars campaign

 

ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆர்.ஆர்.ஆர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டிவிவி தானையா தயாரித்திருந்த இப்படம் கிட்டத்தட்ட ரூ.1200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் 3வது இடத்தை பிடித்துள்ளது. முதல் இடத்தில் அமீர் கானின் 'தங்கல்', இரண்டாவது இடத்தில் ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி 2' படங்கள் உள்ளன. 

 

இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்த நிலையில் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக 'நாட்டு நாட்டு' பாடல் பலரது கவனத்தை ஈர்த்து திரைத்துறையில் உயரிய விருதுகளாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றது. மேலும் ஆஸ்கர் பெற்ற முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றது. இதனால் உலக அளவில் கவனம் பெற்ற இப்பாடலை பலரும் நடனமாடி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

இதனிடையே அண்மையில் ஆஸ்கர் விருதிற்காக ரூ.80 கோடி வரை விளம்பரம் செய்ததாகவும் விழாவில் கலந்துகொள்ள இலவச டிக்கெட் வழங்கப்படாத சூழலில் ஒருவருக்கு ரூ.20 லட்சம் செலவு செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் இந்த பேச்சுக்கள் குறித்து ஆர்.ஆர்.ஆர் படத்தின் தயாரிப்பாளர் டிவிவி தானையா ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஆஸ்கர் விளம்பரத்திற்காக நான் எந்தப் பணத்தையும் செலவழிக்கவில்லை. அது பற்றி என்ன நடந்தது என்பது எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் ஒரு விருது விழாவிற்கு யாரும் 80 கோடி ரூபாய் செலவு செய்யமாட்டார்கள். இதில் எந்த லாபமும் இருக்காது" என்றார். 

 

ஆஸ்கர் குறித்து எனக்கு எதுவும் தெரியாது என படத்தின் தயாரிப்பாளர் கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் ராஜமௌலி தனிப்பட்ட முறையில் கோடி கணக்கில் ஆஸ்கருக்காக விளம்பரம் செய்ததாக ஒரு தகவல் சுற்றி வருகிறது. மேலும் ப்ரோமோஷனில் தயாரிப்பாளர் பெயரை பெரிதளவு ராஜமௌலி குறிப்பிடவில்லை என மற்றொரு குற்றச்சாட்டும் அவர் மீது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.