2025 oscar india official entry movie

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். இதில் சிறந்த சர்வதேச திரைப்படம் (Best International Feature Film) என்ற பிரிவிற்கு பல்வேறு நாட்டிலிருந்து பல்வேறு திரைப்படங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அனுப்பப்படும் நிலையில் கடந்த ஆண்டு மலையாளத் திரைப்படமான 2018 படம் அனுப்பப்பட்டது. அப்படம் நாமினேஷன் ஆகவில்லை.

Advertisment

இந்த நிலையில் 2025ஆம் ஆண்டிற்கான 97வது ஆஸ்கர் விருது போட்டிக்கு பாலிவுட் படமான ‘லப்பட்டா லேடிஸ்’ இந்திய சார்பில் அனுப்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இயக்குநர் கிரண் ராவ் இயக்கத்தில் கடந்த மார்ச் 1 அன்று வெளியானது லப்பட்டா லேடிஸ் படம். இப்படத்தை அமீர் கான் இணைத் தயாரிப்பாளராக தயாரித்திருந்தார். இப்படத்தில் நிதான்ஷி கோயல், ஸ்பர்ஷ் ஸ்ரீவஸ்தவா, பிரதிபா ரந்தா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராம் சம்பத் இசையமைத்திருந்தார். திருமணமான இரண்டு இளம் பெண்கள், தங்கள் கணவரின் வீட்டிற்கு செல்லும் போது இரயிலில் ஆள்மாறி சென்ற நிலையில் பின்பு தங்களது கணவரிடம் சென்றார்களா இல்லையா என்பதை காமெடி, அரசியல் நையாண்டி கலந்து கூறியிருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

Advertisment

ஆஸ்கர் விருதுக்ககாக தேர்ந்தெடுக்கப்படும் இந்திய திரைப்பட கூட்டமைப்பின் இறுதி பரிந்துரை பட்டியலில் 6 தமிழ் படங்கள், 10 இந்தி படங்கள், 5 மலையாளப் படங்கள், 3 மராத்தி படங்கள் உட்பட மொத்தம் 28 படங்கள் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழ் சினிமாவில் கொட்டுக்காளி, வாழை, தங்கலான், ஜமா, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய 6 படங்கள் இருந்துள்ளது. மேலும் இந்தியில் இருந்து அனிமல், மலையாத்திலிருந்து தேசிய விருது அறிவிக்கப்பட்ட ஆட்டம் மற்றும் கேன்ஸ் விருது வென்ற ‘ஆல் வி இமேஜின் அஸ் லைட்’ உள்ளிட்ட பிரபலமான படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த அனைத்து படங்களும் இறுதி பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த நிலையில் லப்பட்டா லேடிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.