Skip to main content

அழுக்கான விரல்களால் கண்களைத் தேய்த்துக் கொண்டு யாரு? என்றாள் கன்னடத்தில்! - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #11

Published on 26/09/2020 | Edited on 26/09/2020
dfg

 

ஸாம்னியா ஸாமென்... மழை மரம் சிலிரென்று அதன் இலைகளில் உள்ள அத்தனை ஈரத்தையும் மழையைப் போல தூவி தரைத்தளங்களை நனைத்துக் கொண்டு இருந்தது. பெங்களூரின் சீதோஷ்ணம் கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. சாயங்கால மேகங்கள் முயல் குட்டிகளாய் வானத்தோடு கொஞ்சிக் கொண்டு இருக்க பளீர் மின்னல் பகலாய் காயும் சிலநேரம் பலநேரம் சட்டென்று உற்சாக மழை தூறல். கிருஷ்ணராஜபுரம் மாலைநேர விளக்குகளில் மிச்சமிருந்த வெளிச்சத்தில் காய்கறிகளும் பழங்களும் வரிசையாய் பிளாட்பார்மினை அணிவகுக்க அதிலிருந்து ஒரு விள்ளல் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்தாள் அந்த சிறுமி.

 

எண்ணெய் என்ற வஸ்து ஒன்று இருக்கிறதா என்றே தெரியாத அவளின் தலைக்கேசம் சிக்குண்டு சிதிலமாய் இருந்திருந்து எட்டுக்குள் வயதிருக்கும். வயதுக்குரிய துருதுருப்பு இல்லாமல் சூம்பிப்போன கால்களுடன் கிழிந்திருக்கும் உடைகளுடன். நான்கைந்து நாளாக இந்த பிளாட்பார்ம் வாசம். கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. தொண்டைக்குள் குறைந்திருந்த எச்சிலால் உதட்டை ஈரப்படுத்தினாள். இருள் கொஞ்சம் கொஞ்சமாய் தன் வலையினை விரித்துக்கொண்டே இருக்க அந்த குட்டிப்பெண் இப்போது அரை மயக்கத்தில் இருந்தாள். தன்னை நோக்கி வந்த காரையோ அதிலிருந்து இறங்கிய சுடிதார் அணிந்த குண்டு பெண்மணியையோ அவள் தன்னையே விழிகள் விரிய பார்த்துக் கொண்டிருந்து என எதையும் அறியவில்லை, மயக்கமா அல்லது உறக்கமா என்று அறிந்து கொள்ளமுடியாத நிலையில் அந்த பிஞ்சு உடலைத் தொட்டு தட்டியெழுப்பினாள்.

 

யாரு ? அழுக்கான விரல்களால் கண்களைத் தேய்த்துக் கொண்டு யாரு? என்றாள் கன்னடத்தில்! என்ன பண்றே ? ஏன் இங்கே படுத்திருக்கே பரிவாய் தோளைத் தொட்டு எழுப்பி சாப்பிடலாம் வர்றீயா என்கூட? தமிழோ, கன்னடமோ எந்த மொழிக்கும் பசியும் உணவும் சொல்லாலும் சைகையாலும் புரிபடுகிறதே ?! பலவீனமாய் தலையசைத்தது அந்த பிள்ளை. தன் நிழல் முழுவதாலும் அவளை மறைத்தபடி அந்த பெண்ணை அழைத்துச் சென்றாள் அந்த குண்டுப்பெண்மணி. தீப்பெட்டிகளாய் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அப்பார்ட்மெண்ட் அடுக்குகளில் புதைந்திருந்த அந்த வீட்டின் இரும்பு கிராதியைத் திறந்து பொம்மை ஸ்டிக்கர்கள் ஒட்டியிருந்த ப்ரவுன் நிறக்கதவுக்குப் பின்னால் யூகிக்க முடியாத ஏதோவொரு நாற்றம் சட்டென்று கதவை மூடிக்கொண்டாள் அவள். தலைக்கொள்ளா கேசத்தோடு வந்திருக்கும் புது விருந்தாளியை ஆவலோடு பார்த்தது அந்த கண்கள் வேட்டை நாயின் இரை கிடைத்த சந்தோஷம் அவன் முகத்தில் கொப்பளித்தது. 

 

ரக

 

எங்கே பிடிச்சே? வேறெங்கே ரோட்டோரத்தில் தான். பசிக்குதும்மா, பசிக்குதா? முதல்ல அவளுக்கு விருந்து அப்பறம் உனக்கு ? அவள் கன்னடத்தில் ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே கிச்சனில் நுழைந்தான். நன்றாக தீட்டப்பட்ட ஐந்தாறுக் குறுங்கத்திகள். தோல் சீவப்பட்ட உருளைக்கு பக்கத்தில் கரப்பான் எதையோ மொய்த்துக் கொண்டு இருந்தது. துரத்திவிட்டு உருளையின் மீதிருந்த ரத்தத்தைக் கழுவினாள். ஏண்டா தம்பி கொஞ்ச நேரம் பொருத்துக்கலாம் இல்லையா?!  பசிச்சிதும்மா

 

அதுக்காக போனவாரம் வெட்டி வைச்சது அதைப் போய் எடுத்து சாப்பிட்டு இருக்கியே ? வயித்துக்கு ஆகலைன்னா என்ன பண்றது ? பிரிட்ஜில் வைத்திருந்த பழையதையெல்லாம் எடுத்து கிரைண்டரில் ஒரு சுத்து சுத்தி சிங்கில் ஊற்றினாள். அடைத்துக் கொண்டு லேசில் போக மறுத்தது. பக்கத்து ப்ளாட்டில் இருந்து ஏதோ சுத்தியல் அடிக்கும் சப்தம். என்ன கண்றாவியை தின்னுட்டு போட்டாங்களோ எல்லாம் அடைச்சி நாத்தம் குடலைப் பிடுங்குது என்று கத்தினாளே பக்கத்து வீட்டுக்காரி யாரையாவது கூப்பிட்டு வந்து சுத்தம் செய்கிறாளோ?! என்ற யோசனையிலேயே சமையலுக்கு மசாலா ரெடி செய்தாள். 

 

ஹாலில் சிங்கஜானின் குறும்பை தன் மங்கிய கண்களுக்குள் ரசித்தபடியே அவள் விரல்களில் ஒரு பிளாஸ்டிக் தட்டில் சில நொறுக்கு சமாச்சாரங்ளோடு ஒரு குளிர்பாட்டிலும்.  அம்மா சமைக்க ஆரம்பிச்சிட்டியா ? அதுக்கு முன்னாடி சுத்தம் செய்ய வேண்டாமா ? ஒரே அழுக்கா இருக்கு ? நான் வேணா... வேண்டான்டா வழுக்கும், பக்குவமா அம்மாவே செய்து தர்றேன். அவள் பேசியபடியே பாப்பா சாப்பிட்டாயா ? உடம்பெல்லாம் ஒரே அழுக்கு பாரு போய் குளி நான் வேற டிரஸ் தர்றேன் என்று ஒரு அறையைக் காட்டி உள்ளே அனுப்பினாள். தன் சூம்பிப்போன கால்களோடு அவள் தள்ளாடியபடியே நகர்ந்ததும், வாசற்கதவு சிறிது நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்பட்டது.

 

யாரு? இலேசாக கம்பிகோர்த்த கதவு திறக்கப்பட்டு தம்பி பக்கத்து வீட்டுலே சிங்க் அடைச்சிருக்கு உங்க வீட்டுபைப்பிலதான் அடைப்பு இருக்கு அஞ்சி நிமிஷ வேலைதான். பாவம் அந்தம்மா வீடு முழுக்க சாக்கடைத்தண்ணி அதான் நைட் கூப்பிட்டு இருக்கிறாங்க. கோவிச்சிக்காம கதவைத் திறக்கணும் ஸாரே.  பிளம்பர் கெஞ்சலாக கேட்க வேறு வழியின்றி கதவைத் திறந்தான் அவன் உள்ளே நுழைந்ததும் அந்த வித்தியாசத்தை உணர்ந்தவனின் காதுகளில் ப்ளக் ப்ளக் என்ற சப்தம் கேட்டது அமைதியாய் சிங்க் அடியில் உள்ள பைப்பைக் குடைந்தான். அசைவம் சமைக்கப்படுகிறது அருகில் இருந்த குப்பைக் கூடையில் மனிதனின் தலைமயிர்கள் ஆங்காங்கே ரத்தத் தீற்றல்கள். ஏதோ தவறு நடக்கிறது என்று புரிந்தது.

 

பயந்தபடியே தன் செல்போனில் பக்கத்து வீட்டில் இருந்தவனுக்கு தகவல் கொடுத்தவன் அடுத்த நொடி பின்மண்டையில் பட்டென்று இரும்புத் தடியால் அடிவாங்கி ஹாலில் கிடத்தப்பட்டவனுக்கு அருகில் ஒரு சிறுமியின் வெட்டப்பட்ட உடலைக் கண்டதும் உடனடி மயக்கம் ஏற்பட்டது.  அடுத்த சில மணி நேரங்களில் அப்பார்ட்மெண்ட் விழித்து கொண்டையில் சிகப்பு பல்ப் வைத்த வண்டி சைரன் ஒலியோடு, சூப் குடித்துக் கொண்டிருந்த அம்மாவும் மகனும் கைது செய்யப்பட்டார்கள். கிட்டத்தட்ட ஆறுமாதமாக விநோதமான மனநோயினால் தாக்கப்பட்ட மகனின் வயிற்றுப்பசிக்கு சாலையோர குழந்தைகளை மயக்கி அழைத்து வந்து அவர்களை சமைத்து அதை உணவாக மகனுக்குத் தரும் அம்மா. இதுவரையில் 10க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வீடு முழுவதும் பல உடல் பாகங்கள் கைப்பற்றப்பட்டது என்று பத்திரிக்கைகள் செய்தியைச் சுமந்து வர சிறைக்கம்பிகளுக்கு பின் இருவரின் புகைப்படங்களோடு மறுநாளை பெங்களூர் டைம்ஸ்.