சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நடந்த சம்பவம் தொடர்பான வழக்கை பற்றி தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்
1996ஆம் ஆண்டு கேரளா மாநிலம் சூரியநெல்லி கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி தொடர்சியாக 40 நாட்கள் பலராலும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த வழக்கை, காவல்துறை மெத்தனபோக்கில் விசாரிக்காமல் இருந்து வந்த நிலையில், சில பத்திரிகையாளர்கள் விசாரித்து, நடந்த சம்பவத்தின் பின்னணியில் அதிகாரத்தில் இருக்கும் பலர் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இதோடு முந்தைய தொடரில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாகப் பின்வருமாறு...
சம்பவம் நடந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு அஜிதா என்பவரின் தலைமையிலான பெண்கள் அமைப்பு மற்றும் அன்வேசி, என்.எஃப்.ஐ.டபள்யு, போன்ற அமைப்புகள் இணைந்து கேரள ஸ்த்ரீ வேதியா அமைப்பின் தலைமையில் சூரியநெல்லி கிராமத்தைச் சேர்ந்த சிறுமிக்கு நடந்த வன்கொடுமை சம்பவத்திற்கு நியாயம் வேண்டி போராடி மீண்டும் அந்த வழக்கை உயிர்ப்பித்தனர். பின்பு காவல்துறை இந்த வழக்கை விசாரிக்க டி.ஐ.ஜி. சிபி மேத்யூ தலைமையில் சிறப்பு குழுவை அமைத்தனர். இந்த குழுவின் முயற்சியால், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 38 பேரையும் கண்டுபிடித்து, அந்த 38 பேரும் சேர்ந்து கிட்டத்தட்ட 67 முறை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததைப் புள்ளி விவரத்துடன் நீதிமன்றத்தில் சமர்பித்தனர். இந்த வழக்கு நீதிபதி சசிதரன் நம்பியார் தலைமையில் கடந்த 2000ஆம் ஆண்டில் விசாரணைக்கு வந்தது. முக்கிய குற்றவாளியான தர்ம ராஜுக்கு பெயிலில் வெளியே வரமுடியாத வகையில் வாழ்நாள் சிறைத்தண்டனையை நீதிபதி வழங்கினார். மேலும் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட மற்றவர்களுக்கு அவரவர்கள் செய்த குற்றத்திற்கேற்ப தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அதன் பின்பு இரண்டு வருடம் சிறையிலிருந்த தர்மராஜ் பெயில் வாங்கி வெளியே வந்து தலைமறைவாகிவிடுகிறான். மற்ற குற்றவாளிகள், தங்களுக்கு வழங்கிய தண்டனைகளை மாற்ற வேண்டுமென கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதற்கிடையில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த சிறுமி, டி.வி.யில் காங்கிரஸ் கட்சி பிரமுகரும், 6 முறை எம்.எல்.ஏ. பதிவியிலிருந்த பி.ஜெ.குரியனை பார்த்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் இவரும் ஒருவர்தான் என்று அலறியிருக்கிறது. பி.ஜெ.குரியன், மாநிலங்களவையில் துணை சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார். பின்பு சிறுமியின் குடும்பத்தினர் பீர்மேடு என்ற பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் பி.ஜெ.குரியன் மீது புகார் கொடுத்துள்ளனர். இதை தெரிந்துகொண்ட பி.ஜெ.குரியன் தன் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றத்திற்குச் சென்று மனு கொடுக்க நீதிமன்றமும் ரத்து செய்துள்ளது. இதனிடையே மேல்முறையீடு செய்த மற்ற குற்றவாளிகளுக்கு நீதிபதிகள் வசந்த், அப்துல் கபூர் உள்ளடக்கிய அமர்வில் தர்மராஜுக்கு ரூ.25,000 அபாராதம் வழக்கி தீர்ப்பளித்ததோடு மற்றவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளனர். அரசு தரப்பில் இந்த தீர்ப்பை மேல்முறையீடு செய்யக்கோரி உச்சநீதிமன்றம் சென்றபோது அதற்கான மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. நிர்பயா வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, மீண்டும் சூரியநெல்லி சிறுமி வழக்கில் வழங்கிய தீர்ப்பை மேல்முறையீடு செய்யக்கோரி சில பெண்கள் அமைப்பினர் மனு அளிக்க நீதிமன்றம் அதை ஏற்றது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான தர்மராஜ் தலைமறைவாகியிருந்த நிலையில், சில பத்திரிகையாளர்கள் அவனை பிடித்து பேட்டி எடுத்துள்ளனர். அதில் பி.ஜெ.குரியன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மைதான் என்று கூறியுள்ளார். இதையடுத்து மற்றொரு காங்கிரஸ் கட்சி பிரமுகரான சுதாகர், சூரியநெல்லியை சேர்ந்த சிறுமி, பாலியல் தொழில் செய்ததாக சில இடங்களில் பேசினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வசந்த், சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஏன் நடந்த உண்மையை அங்கிருப்பவர்களிடம் சொல்லவில்லை? என கேள்வி எழுப்பி சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். பொதுமக்களிடம் இந்த கருத்து விமர்சனத்திற்குள்ளானது. இதுபோன்ற பல விவாதங்கள் இந்த வழக்கில் பேசுபொருளாக இருந்தது. இறுதியாக 19 வருடங்கள் நடந்த இந்த வழக்கில், தர்மராஜுவுக்கு வாழ்நாள் சிறை மற்றும் மற்றவர்களுக்கு அபராதத்துடனான சிறை தண்டனை வழங்கி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் சில குற்றவாளிகள், தீர்ப்புக்கு முன்னரே இறந்துவிட்டனர்.
அந்த சிறுமி வளர்ந்து 34 வயது பெண்ணான பிறகு, சூரியநெல்லி கிராமத்தைவிட்டு தற்போது கோட்டையம் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். நடந்த சம்பவத்தால் அவளது அக்காவும் திருமணம் செய்துகொள்ளாமல் தற்போது செவிலியராக பணியாற்றி வருகிறார். ஈ.கே.நாயனார் முதல்வராக இருந்தபோது சேஸ்டர் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு பியூன் வேலை வாங்கி கொடுத்தார். அங்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் ஊழல் செய்ததாக வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அந்த பெண்ணை அடைத்துள்ளனர். இந்த வழக்கில் மீண்டும் அந்த குடும்பம் சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைப் பற்றி அந்த பெண்ணின் அப்பாவிடம் விசாரிக்கையில், தன் மகள் மீது பொய் வழக்குப் போட்டுள்ளதாக கூறுகிறார். இது போன்ற பல போராட்டங்கள் மத்தியில் தற்போது அந்த குடும்பம் வாழ்ந்து வருகிறது.