Skip to main content

கடத்தப்பட்ட 19 வயது இளம்பெண்; மிரட்டலால் அலைந்து திரிந்த பெற்றோர் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம் :81

Published on 26/09/2024 | Edited on 26/09/2024
thilagavathi ips rtd thadayam 81

கியாத்தி ஸ்ரேஸ்தா என்ற இளம்பெண்ணுடைய வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விளக்குகிறார்.

நேபாளத்தைச் சேர்ந்த கியாத்தி ஸ்ரேஸ்தா என்ற இளம்பெண்ணுடைய வழக்கு இது. இவரது 19வது வயதில், நேபாள் தலைநகர் காட்மண்ட் பகுதியில் இருக்கிறார். ஒரு 15 வருடத்திற்கு முன்பு ஜூன் மாதம் 15ஆம் தேதி அன்று கியாத்திக்கு ஒரு போன் கால் வருகிறது. அதில், ரேண்டம் குழுக்களில், தங்களுக்கு பரிசுத்தொகையாக 20,000 ரூபாய் பணமும், சுற்றுலா செல்வதற்கு விமான டிக்கெட்டும் கிடைத்திருப்பதாக கூறி குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி எதிர்முனையில் இருந்து ஒரு பெண்மணி பேசுகிறார். அதன்படி, தன் குடும்பத்தில் முடிவுசெய்துவிட்டு அந்த பரிசுத்தொகையை வாங்குவதற்காக அந்த குறிப்பிட்ட இடத்திற்கு கியாத்தி செல்கிறார். அங்கு சென்றவுடன், போனில் பேசிய மெரினா என்ற இளம்பெண், கியாத்தியை குஷிபூ என்ற இடத்தில் உள்ள அபார்ட்மெண்டிற்கு அழைத்துச் செல்கிறார். 

அங்கு சென்றவுடன், கியாத்திக்கு கொடுக்கப்பட்ட கூல்டிரிங்கஸை அவர் குடிக்கிறார். இதற்கிடையில், கியாத்திக்கு அவருடைய அப்பா கோபால் இரண்டு முறை போன் போட்டு விசாரிக்கிறார். கியாத்தியின் பெற்றோரரான, கோபால் மற்றும் ராதா ஆகியோர் விரட்நகரில் வசித்து வந்த பின்பு, மகளின் மேல்படிப்பிற்காக காட்மண்ட் பகுதிக்கு வந்துள்ளனர். படிப்பில் அதிகம் கவனம் செலுத்தும் கியாத்தி, தனது 10ஆம் வகுப்பில் நேபாளத்திலே அதிக மார்க் எடுத்து பாராட்டு பெற்றிருக்கிறார். நேபாளத்திலே பிரபலமான கியாத்தி, மேற்படிப்பிற்காக காட்மண்ட் பகுதிக்கு வந்து ஜுபிலண்ட் காலேஜில் 11ஆம் வகுப்பு படிக்கிறார். இதனால், வேறு ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவருடைய வீட்டில் குடும்பத்தோடு வாடகைக்கு குடிபோகிறார்கள். அங்கு குடிபோன இவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அந்த ஆசிரியர் கியாத்திக்கு நல்லவிதமாக பாடங்களை கற்பிக்கிறார். இதனையடுத்து, சில மாதங்கள் கழித்து அந்த வீட்டை வேறு ஒருவருக்கு ஆசிரியர் விற்க, அந்த வீட்டில் இருந்து காலி செய்துவிட்டு அனம் என்ற பகுதிக்கு கியாத்தினுடைய குடும்பம் குடிபோகிறார்கள். வெளிநாட்டில் படிக்கும் ஆசைகளை கொண்ட கியாத்திக்கு, இந்த சூழ்நிலையில் தான் பரிசுத்தொகையாக 20,000 ரூபாய் கொடுப்பதாக போன் கால் வந்துள்ளது. 

காலை வீட்டை விட்டு வெளியே சென்ற கியாத்தி, வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், மூன்றாவது முறையாக கியாத்திக்கு போன் போடுகிறார்கள். ஆனால், அந்த பக்கம் யாரும் எடுக்கவில்லை. தொடர்ந்து பலமுறை போன் போட்டாலும், எதிர்முனையில் இருந்து யாரும் எடுக்காமல் இருக்கின்றனர். இதனையடுத்து, மாலை நேரத்தில், கியாத்தியை கடத்தி வைத்திருப்பதாகவும், 10 லட்ச ரூபாய் கொடுத்தால் தான் பெண்ணை விடுவிப்போம் என்ற மெசேஜ் கியாத்தியினுடைய அப்பாவுக்கு போன் மூலம் மிரட்டல் வருகிறது. அதனால், தெரிந்தவர்கள் எல்லோரிடமும் அந்த பணத்தை தயார் செய்கிறார்கள். மிரட்டல் விடுவித்தவர்கள் சொன்னதன் பேரில், அந்த பணத்தை பட்டூர் என்ற இடத்திற்கு கொண்டு சென்று அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அங்கு யாரும் வராததால், கியாத்தினுடைய பெற்றோர் அவர்களுக்கு போன் போட்டு பார்க்கிறார்கள். ஆனால், யாரும் எடுக்கவில்லை. போலீஸுக்கும் போகக் கூடாது என்று அவர்கள் மிரட்டியதன் காரணமாக, கியாத்தினுடைய பெற்றோர் அங்கிருந்து திரும்பி தனது வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். சில நாட்கள் கழித்து, மிரட்டல்காரர்கள் மீண்டும் மிரட்டல் விடுத்ததன் காரணமாக, அவர்கள் சொன்னதன் பேரில், மகளை மீட்பதற்காக பணத்தை எடுத்துக் கொண்டு சித்வன் என்ற இடத்திற்கு செல்கின்றனர். அங்கு சென்றவுடன், மிரட்டல்காரர்களும் வருவதில்லை, போன் போட்டு பார்த்தாலும் எந்த தகவலும் கிடைப்பதில்லை. இதனால், அந்த பணத்தை எடுத்துக் கொண்டு மீண்டும் தனது வீட்டுக்கு வந்துவிடுகின்றனர். 

இரண்டு நாட்கள் கழித்து, சனோலி என்ற இடத்திற்கு வருமாறு மிரட்டல்காரர்கள் மீண்டும் இவர்களுக்கு மெசேஜ் மூலம் மிரட்டல் விடுகின்றனர். அவர்கள் சொன்னதன் பேரில், கியாத்தினுடைய பெற்றோர் பணத்தை எடுத்துக் கொண்டு மணிக்கணக்காக காத்துக் கொண்டிருந்தாலும் யாரும் வருவதில்லை. இதில் மனமுடைந்த வீட்டிற்கு திரும்பிய அடுத்த நாளில் இந்தியாவில் உள்ள டார்ஜிலின் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு மிரட்டல்காரர்கள் வரச்சொல்கிறார்கள். இந்த முறை, கியாத்தினுடைய பெற்றோர், வீட்டில் வேலை பார்க்கும் ராம் என்பவரை அழைத்துக் கொண்டு அவர்கள் சொன்ன ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று மிரட்டல்காரர்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் வேளையில், கியாத்தியின் குடும்பம் காட்மண்ட் பகுதியில் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் அந்த ஆசிரியர் தென்படுகிறார். கியாத்தி கடத்தப்பட்டதற்கு 20 நாட்கள் முன்பு கூட, அந்த ஆசிரியரை தனது வீட்டுக்கு வரவழைத்து மகளின் படிப்பிற்காக ஆலோசனை கேட்டுள்ளனர். நேபாளத்தில் வேலை பார்க்கும் அந்த ஆசிரியர் இந்தியாவில் இருப்பதை கண்ட கியாத்தியின் பெற்றோருக்கு சந்தேகம் வருகிறது. இருப்பினும், அதை கண்டுகொள்ளாமல் மிரட்டல்காரர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பழைய மாதிரி அங்கும் யாரும் வராததால், மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுகிறார்கள். இரண்டு தினங்கள் கழித்து, கணவரை அழைக்காமல் வேலைக்காரர் ராமை மட்டும் அழைத்துக் கொண்டு காட்மண்டில் உள்ள காகர்குட்டா பகுதிக்கு பணத்தை எடுத்துக் கொண்டு வருமாறு கியாத்தியினுடைய அம்மாவுக்கு மிரட்டல்காரர்கள் வரச்சொல்கிறார்கள். அதன் பேரில், ராமை அழைத்துக் கொண்டு கியாத்தியினுடைய அம்மா அந்த பகுதிக்குச் செல்கிறார். இந்த முறை, அந்த பணத்தை வாங்குவதற்காக ஒரு நபர் வருகிறார். இவ்வழக்கு குறித்த மேலும் விவரங்களை அடுத்த தொடரில் காணலாம்..