Skip to main content

முடிஞ்சா தொட்டுப்பாரு; போலீசுக்கு லெட்டர் கொடுத்த மம்பட்டியான் - திலகவதி ஐபிஎஸ் பகிரும் தடயம்: 01

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

Thilagavathi IPS (Rtd) Thadayam : 01

 

மம்பட்டியான் என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டவுடன் அப்படி ஒரு திரைப்படம் வந்தது பலருக்கு ஞாபகம் வரும். ஆனால், நிஜத்தில் அப்படி ஒரு மனிதர் இருந்திருக்கிறார். அவருடைய வாழ்க்கை பல்வேறு சவால்கள் நிறைந்தது. காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக விளங்கிய மம்பட்டியான் வழக்கு குறித்து தமிழ்நாடு காவல்துறையின் முதல் பெண் இயக்குநர், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி திலகவதி விவரிக்கிறார்.

 

அன்றாட வேலைகளை முடித்துவிட்டு அந்தக் காலத்தில் பெண்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்களுடைய பேச்சில் மம்பட்டியான் இடம்பெறாமல் போவது அரிது. அவரை ஒரு அண்ணன் போல் பார்த்தனர் பெண்கள். திரைப்படத்தில் பார்த்ததைவிட, காவல்துறையின் பதிவுகளில் இருப்பதைவிட விசித்திரமான மனிதர் மம்பட்டியான். ஒரு நாள் மம்பட்டியான் திரையரங்குக்கு திரைப்படம் பார்க்க வந்ததாகவும், அருகிலிருந்த காவல் அதிகாரியிடம் "குறிப்பிட்ட காலத்தில் நான் குறிப்பிட்ட மலைப்பகுதியில் இருப்பேன். முடிந்தால் என்னை வந்து பிடிக்கவும்" என்று சீட்டில் எழுதி அவரின் சட்டைப்பையில் வைத்ததாகவும் பேசிக்கொள்வார்கள். 

 

தர்மபுரியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் தான் மம்பட்டியானின் வாழ்க்கை பெருமளவு இருந்திருக்கிறது. வீரப்பனின் வாழ்க்கையும் மம்பட்டியானின் வாழ்க்கையும் பல நேரங்களில் ஒத்துப்போகிறது. பலருக்கு மம்பட்டியான் உதவி செய்ததாகச் சொல்வார்கள். துப்பாக்கி, கத்தி, வாள்கள் முதலானவற்றை அவரும் அவருடைய குழுவும் சேகரித்தது. தாங்கள் கொல்ல வேண்டிய நபர்களைக் குறித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொருவருக்கும் தன்னுடைய டீமில் இருந்து ஒருவரை நியமிப்பது மம்பட்டியானின் வழக்கம். போரில் வகுக்கப்படுவது போன்ற வியூகங்களை அவர் வகுப்பார்.

 

ஒரே இரவில் ஒன்பது கொலைகள் செய்த பிறகு அவர் மீதான காவல்துறையின் பிடி இறுகியது. கேட் அண்ட் மவுஸ் விளையாட்டு அதன் பிறகு தான் தொடங்குகிறது. ஒருமுறை மம்பட்டியானின் எச்சரிக்கையையும் மீறி அவருடைய தம்பி ஒரு திருவிழாவைக் காணச்சென்றார். பசிக்காக ஒரு பையனிடம் இட்லி வாங்கிவரச் சொன்னபோது, அந்தப் பையன் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தான். அப்போதும் மம்பட்டியானின் தம்பியைப் பிடிக்க காவல்துறை படாதபாடு பட்டது என்று கதையாகச் சொல்வார்கள். இறுதியில் போலீஸ் அவரை சுட்டுக்கொன்றது.

 

தம்பியைப் புதைத்த இடத்திற்கு இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் வந்த மம்பட்டியான், இறுதிச் சடங்குகளைச் செய்தார். ஒரு ராணுவத்தை வளர்த்தது போல் தன்னுடைய கூட்டத்தை மம்பட்டியான் வளர்த்தார். 

 

- தொடரும்