கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி இருக்கிறது. பாதிப்பும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகமாகும் சூழ்நிலையில் அரசின் அறிவுறுத்தல்படியும் மருத்துவர்களின் ஆலோசனைப்படியும் நாம் வீட்டிலேயே தனிமைப்பட்டு இருக்க வேண்டியது நம் கடமையாகிறது. இன்னும் இருபது நாட்கள் வீட்டில் பொழுதைக்கழிக்க சிரமப்படும் உங்களுடன் சுவாரசியமாக சில பல பழைய தமிழ் சினிமா கதைகளை பேசலாமே என்று தோன்றியது...
'கதைத்திருட்டு' என்ற வார்த்தை, தமிழ் சினிமா ரசிகர்கள் சமீபத்தில் அதிகம் கேட்ட ஒரு வார்த்தை. 'சர்கார்' பட விவகாரத்தில் அது மிக வெளிப்படையாக விவாதிக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்று, குற்றச்சாட்டு வைத்த வருண் ராஜேந்திரனின் பெயர் சர்கார் டைட்டிலில் இணைக்கப்பட்டு 'நன்றி' கார்ட் போடும் வரை சென்றது. அவருக்கு ஒரு இழப்பீடும் வழங்கப்பட்டது. அதற்கு முன்பும் பின்பும் பல படங்களில் இந்தக் குற்றச்சாட்டு, பஞ்சாயத்து நடந்துள்ளது. 'பிகில்', '96', கத்தி, 'மெட்ராஸ்' என பல முக்கிய படங்கள் இந்த லிஸ்ட்டில் வரும். இப்போது, கதை திருட்டு குற்றச்சாட்டுகள் எப்படி கையாளப்படுகின்றன என்பதை நாம் பார்க்கிறோம். குற்றச்சாட்டு வைப்பவர் நேரடியாக ஊடகங்களிலோ, சமூக ஊடகங்களிலோ அதை வெளியிடுகிறார். தனது கதை முறையாகப் பதிவு செய்யப்பட்டிருந்தால் அந்த சங்கத்திலும் புகார் செய்கிறார். அடுத்து இரு தரப்பும் மாற்றி மாற்றி ப்ரஸ் மீட் கொடுக்க, ஒரு சில நாட்கள் அதுதான் சோசியல் மீடியா விவாதப் பொருள் ஆகிறது. முடிவு கிடைக்கிறதோ இல்லையோ பிறகு அடுத்த டாபிக் வந்துவிடுகிறது.
நந்தகுமார்
பத்து, இருபது வருடங்களுக்கு முன்பு சோசியல் மீடியா, ஏன், மீடியாவே இந்தளவுக்கு இல்லாத பொழுது எப்படி கையாளப்பட்டன இவை? அப்போதெல்லாம் சினிமா சங்கங்கள் மிகவும் பலமாகவும் அதிகாரம் உள்ளவையாகவும் இருந்தன. அதனால் பெரும்பாலும் அதிகம் வெளியே தெரியாமல் முக்கிய புள்ளிகள் முன்னிலையில் பேசி முடிக்கப்பட்டன. இன்னொரு விதமாகவும் டீல் செய்யப்பட்டது. கதையை பறிகொடுத்தவரிடம் உண்மை இருப்பதாக தயாரிப்பாளர் உணர்ந்தால், அவரே அந்த கதாசிரியருக்கு பட வாய்ப்பு கொடுத்து ஈடுகட்டினார். 'ரமணா', விஜயகாந்துக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்த படம். விஜயகாந்த், திரையுலகில் மிக நல்லவர் என்ற பெயரெடுத்தவர். 'கேப்டன்' என்று அன்பாக அழைக்கப்பட்டவர். அந்த 'ரமணா' படத்தின் கதை தன்னுடையது என்று கூறினார் இன்னொரு இயக்குனர். அவர், நந்தகுமார். அதற்கு முன்பு பிரம்மாண்ட தயாரிப்பாளராகத் திகழ்ந்த குஞ்சுமோன் தயாரிப்பில் 'கோடீஸ்வரன்' என்ற படத்தை இயக்கியவர். ஆனால் நிதி சிக்கலால் அந்தப் படம் வெளிவரவில்லை.
'கோடீஸ்வரன்' கைவிடப்பட்ட பிறகு அதிலிருந்து மீண்டு அடுத்த கதையை தயார் செய்தார் நந்தகுமார். 'பத்ரி' திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்திடம் அந்தக் கதையை சொல்லி ஓகே பண்ணியிருந்தார். அவருடன் அதே நிறுவனத்தில் அதே நேரத்தில் கதை சொல்லியிருந்தது சீமான். தனது 'தம்பி' கதையை அப்போது 'திலீபன்' என்ற பெயரில் சொல்லி ஒப்புதல் வாங்கி இருந்தாராம். 'ரமணா' கதையை 'ஆசான்' என்ற பெயரில் தயார் செய்துவிட்டு படம் இயக்கக் காத்திருந்த நந்தகுமாருக்கு அதிர்ச்சி செய்தி வந்தது. தெலுங்கில், தனது அனுமதி இல்லாமலேயே அந்தப் பட வேலைகள் தொடங்கி ஷாஜி கைலாஷை இயக்க நியமித்திருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு இவர் எதிர்ப்பு தெரிவிக்க பின்னர் அந்தப் படமும் தமிழில் இவர் இயக்கவிருந்த படமும் கைவிடப்பட்டன.
கொஞ்ச நாள் கழித்து அதே கதையை விஜயகாந்த்துக்காக அவரது மேனேஜரிடம் கதை சொல்ல வந்தார் நந்தகுமார். கதையை கேட்ட மேனேஜர் பாதியிலேயே எழுந்து சென்றுவிட்டாராம். என்னவென்று விசாரிக்க அதே கதையில் ரமணா படம் விஜயகாந்த் நடிப்பில் தயாராகிக்கொண்டிருந்த விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். பிரச்னை விஜயகாந்த் வரை செல்ல, நடிகர் சங்கத்தில் நெப்போலியன் உள்ளிட்ட பலர் முன்னிலையில் பேசப்பட்டது. பணமெல்லாம் வேண்டாம், தன் பெயர் திரையில் வரவேண்டுமென்பதே தன் நிபந்தனை என்று கூறிய நந்தகுமாரின் நேர்மையை உணர்ந்த விஜயகாந்த், தானே அழைத்து அவருக்கு படம் இயக்க வாய்ப்பளித்தார். அந்தப் படம்தான் 'தென்னவன்'. முரண் என்னவென்றால் 'ரமணா' பெற்ற பெருவெற்றியை 'தென்னவன்' பெறவில்லை.
இதே போல, அஜித் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த 'காதல் கோட்டை' படத்தின் கதை தன்னுடையது என்று குற்றம் சாட்டிய பாலு என்ற இயக்குனருக்கு அவரது திறமையை அங்கீகரித்து 'காலமெல்லாம் காதல் வாழ்க' என்ற படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தார் 'சிவசக்தி' பாண்டியன். 'காதல் கோட்டை' படத்தை இயக்கிய அகத்தியன், தான் கதையை திருடவில்லை என்றும் 'இது உலகுக்கே பொதுவான கதை, தமிழ் இலக்கியத்திலிருந்துதான் தனக்கு இந்தக் கதை தோன்றியது' என்றும் தெரிவித்தார். 'காதல் கோட்டை', 'காலமெல்லாம் காதல் வாழ்க' இரண்டு படங்களிலுமே கதைக்கரு 'பார்க்காமலேயே காதல்' என்பதுதான். இந்த இரண்டு படங்களுமே வெற்றியடைந்தது சிறப்பு.
மேலும் பல கதைகள் பேசுவோம்...