இன்சூரன்ஸ் பெறுவதற்காக நடத்தப்படும் பல்வேறு மோசடி, திருட்டு குறித்து நம்மிடையே தொடர்ச்சியாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் காணாமல் போன மருந்து கண்டைனர்களுக்கான இன்சூரன்ஸ் குறித்து விவரிக்கிறார்.
சீனாவிலிருந்து டியூபர்குளோசிஸ் நோய்க்கு ரிஃபம்பேசின் என்ற மருந்தின் மூலக்கூறுகள் இந்தியாவிற்கு கப்பல் மூலம் இறக்குமதி ஆகும். நமக்கு சீனாவிலிருந்து சிங்கப்பூர் வரும் வழியாக இந்தியாவிற்கு பல்லாயிரம் டன் கொண்ட மெடிசின் கண்டைனர் கப்பல்கள் சென்னை துறைமுகத்திற்கு வந்து சேரும். நாங்கள் சீனாவிலிருந்தே அதற்கான காப்பீடு முதல் கண்டைனர் சரியாக இருக்கிறதா என்பது வரை முறையாக ஏற்றுமதி ஆகிறதா என்றும் உறுதி செய்து விடுவோம். மேலும் அந்த கப்பல்கள் இங்கு சென்னை வந்தவுடனும், அதற்கென்று உரிய பார்மசி நிபுணர்கள் நன்றாக பார்த்து விடுவார்கள்.
அதுபோல, அந்த மூலக்கூறுகளை மாத்திரையாக மாற்றும் அடுத்தகட்ட முறைகள் பொதுவாக அன்று குஜராத்தில் நடந்து வந்தது. அங்கே நாங்கள் பார்த்து அனுப்பி வந்தோம். அப்போது என்னுடைய பாக்டரியில் இருந்து அழைப்பு வந்தது, இரண்டு மூன்று கண்டைனர்களில் மருந்தே இல்லை, வெறும் குப்பைகள் தான் இருக்கின்றன என்றும் அதற்குரியதை கிளைம் செய்து தருமாறு தகவல் வந்தது. பல கோடி ரூபாய் பெறும் இன்டர்நேஷனல் சமாச்சாரம் இது. இந்த மருந்து இத்தனை காவல் தாண்டி, எல்லா இடத்திலும் முறையாய் சோதித்து அனுப்பியும் இந்த மருந்து எப்படி குப்பையாக மாறி இருக்கும் என்று திகிலாக இருந்தது. இதற்கிடையில் மத்திய சுகாதார அமைச்சகம் வேறு வந்துவிட்டது.
ஏற்றுமதி ஆன வேர்ஹவுஸ் முதல் இறக்குமதி செய்யப்படும் வேர்ஹவுஸ் வரை நாங்கள் தான் பொறுப்பு. இதனை வேர்ஹவுஸ் டு வேர்ஹவுஸ் காப்பீடு என்று சொல்வோம். மாறின கண்டைனர்களுக்கு நாங்கள் தான் காப்பீடு வழங்க வேண்டும். எனவே அடுத்த கட்டமாக தமிழகத்தின் அன்றைய சி.பி.ஐ ஆபீசர் ஏ.கே. விஸ்வநாத் அவர்களுடன் கேஸை விசாரிக்கிறோம். நிறைய மருத்துவர்கள், அதிகாரிகள், இந்த மருந்திற்கான பிரதிநிதிகள் எல்லாருமே கலந்து இதற்கு விடை தேடிக் கொண்டிருந்தோம். அப்போது எங்களுடய இன்பார்மர் கூப்பிட்டார். நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆள் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே பௌடர் பாட்சா என்ற பெயரில் இருக்கிறார் என்று தகவல் சொன்னார்.
கவனமாக அவரைப் பின்தொடர்ந்து கவனித்ததில், அவர் வடசென்னையில் தனி பாக்டரியே நடத்திக் கொண்டிருக்கிறார். பெரிய டீம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். இந்த மருந்து மட்டுமல்ல, நிறைய முக்கிய நோய்க்கான மருந்தினை இவர்கள் சர்வ சாதாரணமாக குடிசை தொழில் போல பேக் செய்து கொண்டிருக்கின்றனர். நாங்கள் செய்த தவறு, சென்னை அடுத்து குஜராத்தில் தான் கண்டைனர்களை செக் செய்வோம். ஆனால் இவனுடைய ஆள், லாரி டிரைவராக இருந்து ரெட் ஹில்ஸ் அருகே நிறுத்தி வைக்கும்போது, எவ்வளவு பெரிய சீலாக இருந்தாலும் லாவகமாகப் பிரித்து சரக்குகளை எடுத்து விடுகிறான். அதை எடுத்து விட்டு குப்பை கண்டைனர்களை மாற்றி வைத்து விடுகிறான்.
மூன்று வேளை உட்கொள்ளும் இந்த மருந்து அறுபது ரூபாயாக விற்கப்பட்டது. இவர் போலியாக தயாரித்து ஆந்திரா, ஒரிசா என்று ஒரு ரூபாய்க்கு விற்று வந்திருக்கிறார். நன்றாகத் திட்டமிட்டு சுகாதார அதிகாரிகள், உணவு கலப்படத் துறை அதிகாரிகள் என்று அனைவருடன் சென்று அவரைப் பிடித்து முறையான விசாரணையில் எல்லா தகவல்களையும் வாங்கினோம். இதுவரைக்கும் அவர் வேறு வகையான போதைப் பொருள் பிசினஸ் செய்து வந்திருக்கிறார். பின்னர் தான் இந்த துறைக்கு மாறி இருக்கிறார். அதனால் தான் அவருக்கு இந்த பெயரே வந்திருக்கிறது. இந்த கேசில் அவருக்கு பின்னால் இருக்கும் பெரிய டீமை பிடித்தோம். இனி வந்த எல்லா கண்டைனர்களையும் பல்வேறு இடத்தில் நிறுத்தி செக் செய்தோம். சீல்களின் பட்டர்ன்களை மாற்றினோம். அன்று கைமாறிப் போன கண்டைனரில் இருந்த மூலப்பொருள்களின் விலை அந்த தேதியில் சுமார் என்பது கோடி ரூபாய். அவருடன் பத்து பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.