கப்பலையும், கப்பலில் சட்ட ரீதியாக ஏற்றி வரும் சரக்குகளையும் இன்சூரன்ஸ் செய்வது பற்றி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் நம்மிடையே விவரிக்கிறார்.
கப்பல் கட்டும் வரை ஒரு இன்சூரன்ஸ் இருக்கும், கப்பலை முழுவதுமாக கட்டி முடித்து அது கடலுக்குள் இறங்கிய பிறகு ஒரு இன்சூரன்ஸ் எடுத்தாக வேண்டும். அதற்கு பெயர் மரைன் ஹல் இன்சூரன்ஸ் ஆகும். கட்டுமரம், படகு போன்றவைகளுக்கும் இன்சூரன்ஸ் அளிக்கப்படும். இதில் சில தில்லுமுல்லு எல்லாம் நடக்கும். அதை விவரிக்கிறேன்.
தொழில் அதிபர் ஒருவர் வெளிநாட்டிலிருந்து உரம் கொண்டு வந்து தருவதாக அரசின் டெண்டரை எடுக்கிறார். கப்பலில் சரக்கை ஏற்றும் முன் கப்பலின் எடை பரிசோதிக்கப்படும், கப்பலில் சரக்கு ஏறிய பிறகு அது நீரில் மூழ்கும் அளவை வைத்து ஒரு எடை போடப்படும், அதை வைத்துதான் சரக்கிற்கு இன்சூரன்ஸ் தொகை நியமிக்கப்படும். சென்னை துறைமுகம் வந்த சரக்கு இங்குள்ள விவசாயிகளிடம் அரசு மானியத்திற்கு விற்க இருந்த ஆயிரம் டன் உரத்தின் மூட்டைகள் காணாமல் போய்விட்டது என்று இன்சூரன்ஸ் கேட்டு விண்ணப்பித்தார்.
இன்சூரன்ஸ் அதிகாரிகள் மாறுவேடமிட்டு துறைமுகத்திற்குள் வேலை தேடுவது போல் சென்று விசாரித்தால் நூற்றுக்கணக்கான லாரிகள் துறைமுகத்திலிருந்து வெளியேறுகிறது. என்ன ஏதுவென்று விசாரித்தால் அங்குள்ளவர்கள் “இதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம், கண்டுகொள்ளக்கூடாது” என்றிருக்கிறார்கள். பிறகு அங்குள்ள ரெஜிஸ்டரில் வெளியே சென்ற லாரிகளின் நம்பரை வைத்து தேடினால் அந்த தொழிலபதிபர் ஆயிரம் டன் உர மூட்டைகளை அரசின் உதவி இல்லாமல், தனியாக விவசாயிகளிடம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இந்த உண்மையை கண்டறிய கடலூரில் பணிபுரிந்த கிரைம் இன்ஸ்பெக்டர் உதவினார். பிறகு, இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இன்சூரன்சிற்காக இதுபோன்ற பெரிய அளவிலான கொள்ளை எல்லாம் நடக்கும். ஆனால், இன்சூரன்ஸ் அதிகாரிகளை அவ்வளவு சீக்கிரத்தில் ஏமாற்றி இன்சூரன்ஸ் தொகையை பெற்றுவிட முடியாது.