Skip to main content

சென்னையில் பிக்பாக்கெட் தொல்லை குறைஞ்சது எப்படி தெரியுமா? - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 17

Published on 17/11/2023 | Edited on 17/11/2023

 

rajkumar-solla-marantha-kathai-17

 

சென்னை என்றாலே சினிமாக்களில் பிக்பாக்கெட் அடிப்பதாக காட்டப்படுவதுண்டு; அது இப்போதெல்லாம் சுத்தமாக கிடையாது. அது எப்படி முழுவதுமாக ஒழித்துக் கட்டப்பட்டது என்பதை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்ட காலம் பணிபுரிந்த ராஜ்குமார் ‘சொல்ல மறந்த கதை’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

சென்னை எல்லீஸ் ரோட்டில் ஆட்டோக்களுக்கு பைனான்ஸ் பண்ணும் நிறுவனத்திற்கான கிளை ஒன்றிற்கு பணம் நிலுவைத் தொகை கட்ட வரும் ஆட்டோக்காரர்கள் அடிக்கடி பணம் தொலைந்து விட்டதாகவே கூறி வந்தார்கள். ஆரம்பத்தில் எங்கேயோ தொலைத்து விட்டார்களோ என்று சாதாரணமாக எடுத்துக் கொண்டோம். ஆனால் தொடர்ச்சியாக இப்படி சொல்லப்படுவதால் என்னவென்று விசாரித்தபோது பணத்தை தொலைத்த எல்லோருடைய பை, பேண்ட், சட்டை ஆகியவற்றில் பிளேடு கொண்டு கிழிக்கப்பட்டிருக்கிறது. அப்போது ஒரு முடிவெடுத்தோம் தொடர்ச்சியாக பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு இருக்கிறது.

 

இது குறித்து விசாரித்து இதை தடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னராக அப்போது இருந்த விஜயகுமார் அவர்களிடம் பேசினேன். அவரும் செல்வமணி என்ற காவல்துறை அதிகாரியின் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து எங்களுடைய இன்சூரன்ஸ் குழுவும் இணைந்து ஏதேதோ முயற்சிகள் செய்து தேடினோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை. அப்போது ஏட்டையா ஒருவர் சொன்னார். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. அப்போதைய சென்ட்ரல் ஜெயிலில் பிக்பாக்கெட் வழக்கில் சிக்கியிருக்கிறவங்க கிட்ட கேட்டால் ஏதாச்சும் ஐடியா கிடைக்கும் என்றார்.

 

காவலர் ஒருவரையே கைதி போல சிறைக்குள் அனுப்பி பிக்பாக்கெட் கேசில் சிக்கியவர்களோடு பழக வைத்தோம். மகேஷ் என்றவர் அறிமுகமானார். அடிக்கடி பிக்பாக்கெட் வழக்கில் சிக்கி சிறை செல்பவர். அவரை நீதிபதி அனுமதியோடு மருத்துவ காரணங்களை சொல்லி சிறையிலிருந்து வெளியே எடுத்து அவரைக் கொண்டு அவருடைய பிக்பாக்கெட் அடிக்கும் கூட்டாளிகளைத் தேடினோம். சென்னையில் பிரபலமாக இருக்கும் அனைத்து பஸ் ஸ்டாண்டுகளிலிலிருந்தும் பிக்பாக்கெட் அடிக்கும் அவனின் கூட்டாளிகள் சிக்கினர்.

 

அதில் ஒருவன்தான் சொன்னான். எங்களை ஏன் சார் பிடிச்சு வச்சிருக்கீங்க... எங்க டிரைனர் இருக்காரு சார், அவரை போயி பாருங்க என்றான். வியாசர்பாடி நாகராஜன் என்பவரை தேடிப் போனபோது அவரோ வீட்டின் பின்புறம் பெரிய பயிற்சி பட்டறை வைத்திருந்திருக்கிறார். 

 

பஸ் ஸ்டாண்டில் எப்படி திருடனும், கோவிலில் எப்படி திருடனும், பையிலிருந்து எப்படி எடுக்க வேண்டும் போன்ற எல்லாவற்றிற்கும் செய்முறை பயிற்சி எடுப்பதற்காகவே மாதிரிகளை உருவாக்கி ஒரு பட்டறையே வைத்திருந்திருக்கிறார். தினமும் சென்னை மண்ட்ரோ சிலை அருகே கூடி நின்று எந்த பஸ்சில் யார் போக வேண்டும். பிக்பாக்கெட் அடிக்கும் பணத்தை எங்கே கொண்டு வந்து பிரித்துக் கொள்ள வேண்டும் என்று திட்டம் தீட்டி வேலை செய்திருக்கிறார்கள். அந்த குழுவையே ஒட்டுமொத்தமாக பிடித்து குண்டர் சட்டத்தில் சிறைக்கு அனுப்பினோம். அதன் பிறகு சென்னையில் பிக்பாக்கெட் ஒட்டுமொத்தமாக அடியோடு அழித்து ஒழிக்கப்பட்டது. 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

டீ கடையில் போட்ட திட்டம்; 15 கோடி நகையை திருடிய நண்பர்கள் - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 16

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 rajkumar-solla-marantha-kathai-16

 

நண்பர்கள் மூவர் இணைந்து கொள்ளை அடித்து மாட்டிக்கொண்ட சம்பவம் குறித்து இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

 

வாழை இலை விற்பவர், ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தவர், வேலையில்லா பட்டதாரி நண்பர்கள் மூவர் ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்த போது என்ன வாழ்க்கையில இப்படியே இருக்கோமே, இப்படியே இருந்தால் எப்பத்தான் செட்டில் ஆவது என்று யோசித்திருக்கிறார்கள். அதில் ஒருவன் சொல்லி இருக்கிறான் “பேங்க்கை கொள்ளை அடித்தால் தான் செட்டில் ஆக முடியும்” என்று. இது ஏதோ ஒரு சாதாரணமாக நண்பர்களுக்குள் கிண்டலாக பேசிக் கொள்வதாகத்தானே அனைவரும் நினைப்போம். ஆனால் இந்த நண்பர்கள் மூவரும் இதை சீரியசாகவே செயல்படுத்த முனைந்திருக்கிறார்கள்.

 

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள நகைகளை அடகு பிடித்து பணம் கொடுக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் இந்த மூன்று நண்பர்களில் ஒருவனான முருகன் என்பவன் கடைநிலை ஊழியராக சேர்கிறான். நீண்ட நாட்கள் திட்டப்படி ஒரு நாள் அங்கிருக்கும் ஊழியர்களுக்கு ஜுஸில் மயக்கமருந்து கொடுத்து விட்டு, மற்றொரு பெண் ஊழியரை கத்தியைக் காட்டி மிரட்டி தனி அறையில் அடைத்து விட்டு அங்கிருந்த 15 கோடி மதிப்பில் உள்ள நகைகளை திருடிக்கொண்டு சென்று விடுகிறார்கள்.

 

மூவரும் சென்னையில் பல்லாவரத்தில் ஒரு லாட்ஜ் புக் பண்ணி, அங்கேயே தங்கி நகைகளை உருக்க முயற்சித்திருக்கிறார்கள். ஒரு அளவிற்கு மேலே முடியவில்லை. அதனால் மூவரும் தனித்தனியாக பிரிந்து சென்றுவிடலாம் என்று முடிவெடுத்து ஒருவன் மேல்மருவத்தூர் அருகே உள்ள ஒரு ஊரில் உறவினர் வீட்டில் தங்கி இருந்துவிட்டு அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கொஞ்சம் பணம் கொடுத்து விட்டு சென்றிருக்கிறான். மற்றொருவன் விழுப்புரம் அருகே உள்ள மனைவி ஊரில் மண்ணைத் தோண்டி புதைத்து வைத்திருந்திருக்கிறான்.

 

காவல்துறையின் தீவிர வேட்டையில் மூன்றே நாளில் மூவரும் பிடிபட்டார்கள். அவர்களிடம் திருடப்பட்ட நகையும் மீட்கப்பட்டது. இதை திறம்பட செய்தவர் மறைந்த காவல்துறை அதிகாரி விஜயகுமார் என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினரே கண்டுபிடிக்க முடியாவிட்டால், அதற்கான இன்சூரன்சிற்கு நிறுவனங்கள் ஒதுக்கீடு செய்யும். இந்த நகைகள் பிடிபட்டதால் இன்சூரன்ஸ் தொகை எதுவும் வழங்கவில்லை.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

ஊருக்குப் போன இளம் மனைவி; பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கணவன்  - ராஜ்குமார் பகிரும் சொல்ல மறந்த கதை: 15

Published on 27/10/2023 | Edited on 27/10/2023

 

rajkumar-solla-marantha-kathai-15

 

கணவனைக் கொன்ற மனைவியைப் பற்றியும், அந்த கொலை நடத்தப்பட்ட விதம் பற்றியும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் நீண்டகாலம் பணிபுரிந்த ராஜ்குமார் விவரிக்கிறார் 

 

ஒரு அப்பாவிக் கணவன் தன்னுடைய உயிரை இழந்த கதை இது. சென்னையில் இண்டீரியர் டெகரேசன்  செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார். மனைவி, குழந்தை என்று மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். அவருடைய மனைவி அழகுக் கலை பயின்றவர். அவர் வேலை செய்து வந்த ஆபீசுக்கு அருகில் இருந்த ஒருவரோடு அந்தப் பெண்ணுக்கு திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டது. அந்த நபர் குடும்ப நண்பராகவே பழகி வந்தாலும் ஒருகட்டத்தில் மனைவியின் தொடர்பு குறித்து கணவர் கண்டுபிடித்தார். மனைவியை எச்சரித்தார். அதன் பிறகும் அந்த நபரோடு மனைவி ரகசியமாகப் பழகி வந்தார். 

 

கணவருக்கு உண்மை தெரிந்துவிட்டதால், அந்த நபரோடு சேர்ந்து கணவரைக் கொல்ல மனைவி முடிவு செய்தார். ரகசியமாக ஒரு செல்போன் வாங்கினார். தன்னுடைய ஊருக்கு அவர் கிளம்பிச் சென்றார். அந்த நேரத்தில் கூலிப்படையை வைத்து கணவரைக் கொலை செய்யுமாறு காதலனுக்கு அறிவுறுத்தினார். காதலனிடம் அவளுடைய வீட்டின் போலி சாவி ஒன்று இருந்தது. கத்தியை எடுத்துக்கொண்டு போய் அவளுடைய கணவனை அவன் கொன்றான். அதன் பின்னர் அவளே காவல் நிலையத்துக்கு போன் செய்து தன்னுடைய கணவர் போனை எடுக்கவில்லை என்று கூறினாள். போலீசார் சென்று பார்த்தபோது கணவர் இறந்து கிடந்தார். 

 

இந்தப் பெண்ணின் நடவடிக்கைகளை காவல்துறையினர் கண்காணிக்க ஆரம்பித்தனர். அவள் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவள் பேசிய போன் கால்களை செக் செய்தனர். அவளையும் அவளுடைய காதலனையும் கைது செய்தனர். கணவன் வேண்டாம் என்று நினைத்திருந்தால் அந்தப் பெண் விவாகரத்து பெற்றிருக்கலாம். ஆனால் சொத்துக்காக அந்த அப்பாவி மனிதர் கொலை செய்யப்பட்டார். கடைசியில் அந்தப் பெண் நினைத்த எதுவும் நடக்கவில்லை. முதலில் பிசினஸ் சம்பந்தப்பட்ட யாரோ தான் கொலை செய்தார்கள் என்று காவல்துறையினர் நினைத்தனர். பிறகு தான் மனைவியே கொலை செய்திருக்கிறார் என்பதை கண்டறிந்தனர்.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்