போதைப் பொருள் பயன்படுத்தும் குழந்தைகளை எப்படிக் கையாள்வது என்பதைப் பற்றியும் அதிலிருந்து அவர்களை எப்படி மீட்பது என்பதைப் பற்றியும் குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
இப்போது நிறைப் பள்ளிகளிலுள்ள குழந்தைகள் கூல் லிப் என்ற போதைப் பொருளைப் பயன்படுத்தி வருகின்றனர். இதைப் பற்றி எனக்குத் தெரிந்த சில ஆசிரியர்களிடம் விசாரித்தபோது கூல் லிப் பயன்படுத்தும் குழந்தைகளைக் கண்டறிந்து மாதத்திற்கு இரண்டு, மூன்று குழந்தைகளை சஸ்பெண்ட் செய்து வருவதாகக் கூறினார். இதைக் கேட்கும்போது ஷாக்காக இருந்தது. கவுன்சிலிங் வரும் நிறைய குழந்தைகள் அந்த போதைப் பொருளை உபயோகித்து பின்பு சிகரெட், மது என அடுத்தடுத்த போதைப் பழக்கத்திற்கு செல்கிறார்கள். பாலியல் துன்புறுத்தல் குறித்து எந்த அளவிற்கு குழந்தைகளிடம் விழிப்புணர்வைப் பற்றி பேசுகிறோமோ, அதே அளவிற்கு இந்த பிரச்சனையைப் பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இன்றைக்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் இருக்கின்றனர்.
பள்ளி வளாகத்தில் கூட இப்போது கூல் லிப் கிடைக்கிறது. கண்டிப்பாகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நண்பர்களைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு குழந்தையும் அந்த போதைப் பொருள் பயன்படுத்துவதைப் பெற்றோர்களிடம் நேரடியாக சொல்ல மாட்டார்கள். அப்படியே பெற்றோர்கள் கண்டுபிடித்தாலும் முதலில் அந்த குழந்தைகள் தங்கள் நண்பர்கள் சொல்லித்தான் செய்தேன் என்று சொல்லுவார்கள். குழந்தைகள் தவறு செய்தால் அந்த தவறை அவர்கள் ஒப்புக்கொள்வதற்கான இடத்தை பெற்றோர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும். நிறைய பெற்றோர்கள் இந்த விஷயத்தில் தவறு செய்கிறார்கள்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் இந்த பழக்க வழக்கத்தைக் கண்டறிந்த பிறகு மிரட்டும் தொனியில் அணுகினால் கண்டிப்பாகக் குழந்தைகள் பொய்தான் சொல்வார்கள். முடிந்தளவிற்கு எந்த மாதிரியான வார்த்தைகளைக் குழந்தைகளிடம் பேசப் போகிறீர்கள் என்று கவனத்துடன் இருக்க வேண்டும். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடைகளைத் துவைக்கும்போது அந்த போதைப்பொருளைப் பார்த்ததாக கூறுகின்றனர். அந்த நேரத்தில், கண்டிப்பாக பெற்றோர்களாக இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் கோபம் வரம். அதனால் உடனே அந்த கோபத்தை காண்பிப்பதன் மூலம் குழந்தைகளை அந்த பழக்கத்திலிருந்து கொண்டுவர முடியாது.
குழந்தைகளை கையாளுவதில் பொறுமை மிக முக்கியம். உதாரணத்திற்கு வீட்டில் பணம் காணாமல் போகும்போது குழந்தைகளிடம் ‘நீ எடுத்தியா’ என்று கேட்டால் கண்டிப்பாக குழந்தைகள் அதை மறைப்பார்கள். அந்த மாதிரியான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ‘பணத்தை எங்கேயோ வைத்துவிட்டேன் உனக்குத் தெரிந்தால் சொல்லு’ என்று கனிவாக அணுகும்போது சில நேரங்களில் உண்மைகள் வெளிவர வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் கோபப்பட்டால் இப்போது உள்ள குழந்தைகள் மிகவும் சென்சிடிவ்வாக இருக்கிறார்கள். நிதானமாக பேசும்போது அந்த குழந்தைகள் தவறை ஒப்புக்கொண்டு தன்னால் அந்த பழக்கத்திலிருந்து வெளியே வரமுடியவில்லையென்று சொல்லுவார்கள், இல்லையென்றால் தனக்கு அது பிடித்திருக்கிறது என்று சொல்வார்கள். இப்படி கேட்டு தெரிந்து கொள்வதன் மூலம் குழந்தைகளிடம் எளிதாக கனெக்ட் ஆகவும் முடியும். அதோடு அவர்களை அந்த பழக்கத்திலிருந்து மற்ற திறமைகளைக் கண்டறிந்து எளிதாக மாற்றவும் முடியும் என்றார்.