பள்ளிப் பருவ ஹார்மோன் மாற்றத்தால் கீழ்ப்படியாமல் இருந்த குழந்தையின் பெற்றோருக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் சக மாணவியிடம் பழகி வந்துள்ளான். பள்ளியில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் இரவு மொபைலில் பேசும் அளவிற்கு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் அந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவனிடம் பேசிய அந்த சிறுமியின் பெற்றோருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுமியின் வீட்டார் சிறுவனின் பெற்றோரிடம் வாய் வார்த்தைகளால் சண்டை போட்டுள்ளனர். ஆனாலும் அந்த சிறுவன், சிறுமி இருவரும் தங்களுக்கு ஏற்பட்ட பழக்கத்தை நிறுத்திக்கொள்ள முடியாமல் தொடர்ந்து நன்றாகப் பேசி வந்தனர். இதனால் அந்த சிறுவனின் பெற்றோர் தங்களது வீடு இருக்கும் இடத்தையும், மகன் படிக்கும் பள்ளியையும் மாற்றினர்.
வேறு வீடு மற்றும் பள்ளிக்குச் சென்றாலும் தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்கள் மூலம் அந்த சிறுமியும் சிறுவனும் பேசி வந்தனர். அச்சிறுவனின் பெற்றோர் அவனைக் கண்டித்தபோது, தனக்கு அந்த சிறுமியிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவளுடன் பழகாமல் நாள் வெறுமையாகச் செல்கிறது என்று அடம்பிடித்து சண்டை போட்டுள்ளான். இந்த பிரச்சனையைக் கையாள சிறுவனின் முடியாமல் திணறினர். ஒருபக்கம் மகனின் படிப்பும் கேள்விக்குறியானது. அந்த சிறுமியிடம் பேசவில்லையென்றால் பெற்றோர் சொல்லும் எதையும் செய்ய மாட்டேன் என்று விடாப்பிடியாய் அந்த சிறுவன் இருந்துள்ளான்.
இந்த சூழலில் அந்த சிறுவனை அவனது பெற்றோர்கள் என்னிடம் அழைத்து வந்து கவுன்சிலிங் கொடுக்கச் சொன்னார்கள். அந்த சிறுவனிடம் நான் பேசியபோது, காதல் செய்யவில்லை என்றும் எனக்கு ரொம்ப சக மாணவியை பிடிக்கும். ஆனால் பேசவிடாமல் தடுக்கின்றனர் என்று கலங்கியபடி கூறினான். பேசியதில் சிறுவன் தன்னை அறியாமலேயே ஹார்மோன் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. போதைக்கு அடிமையாவது போல் இதுவும் ஒரு ஹார்மோன் தொடர்பான பிரச்சனைதான். முதலில் நான் அந்த சிறுவனிடம் அவனுடைய வயதில் என்ன செய்ய வேண்டும், எதில் கவனம் செலுத்த வேண்டும் என்ற முக்கியத்துவத்தை அவனுக்கேற்ற முறையில் பேசி புரிய வைத்தேன். அந்த சிறுவன் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டான். இந்த விஷயத்தில் முழுக்க முழுக்க பெற்றோர்தான் தவறு செய்திருகின்றனர்.
அச்சிறுவனின் பெற்றோரிடம் பேசும்போது, உங்கள் மகனைக் கவனிக்கத் தவறியதுதான் வீடு மாறும் அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவிற்கு முதலில் சுதந்திரம் கொடுத்திருக்கக் கூடாது. கண்டிப்பு என்பது கொஞ்சமாவது இருக்க வேண்டும். குழந்தையின் போக்குக்கு பெற்றோர்கள் போகலாம். ஆனால் அதில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு வரைமுறையற்ற சுதந்திரத்தைக் கொடுக்காமல் சில விஷயங்களில் எல்லைகளை உருவாக்க வேண்டும். பருவமடைதல், இனப்பெருக்கம் போன்றவற்றைப் பற்றித் தெளிவான புரிதல்களுக்குள் குழந்தைகளை வளர்க்க வேண்டும். இல்லையென்றால் வெளியிலிருந்து அது தெரியவரும்போது இதுபோன்ற பிரச்சனைகள் வரலாம் என்று ஆலோசனை வழங்கினேன். அதோடு அந்த சிறுவனுக்கு ஏற்பட்டுள்ள உணர்வு எப்போது வெளிப்பட வேண்டும் என்ற அறிவுரை கூறியதோடு படிப்பில் கவனம் செலுத்தச் சொல்லியிருக்கிறேன். இன்னும் சில கவுன்சிலிங் அந்த சிறுவன் வந்தால், கண்டிப்பாகத் தேறி படிப்பில் கவனம் செலுத்திவிடுவான் என்றார்.