தந்தையின் செயலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு படுத்தப் படுக்கையாக இருக்கும் தன் கணவனை தன் மகள் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை, மதிக்கவில்லை என்று ஒரு அம்மா என்னிடன் வந்து புலம்பினார். அதன் பின்பு அந்த அம்மாவின் மகளை அழைத்து வரச் சொன்னேன். அதன் பின்பு அந்த மகளிடம் பேசும்போது, தன் அப்பா குறித்து பேசுவதாக இருந்தால் தனக்கு இந்த கவுன்சிலிங் தேவை இல்லை என்ற உடல்மொழியில் பேசினாள். அதற்கு நான் உங்கள் அப்பாவை பற்றி எனக்கு தெரியாது. ஆனால் படுத்த படுக்கையாக இருக்கும் உன் அப்பாவை நீ சரிவர பார்த்துக் கொள்வதில்லை என்று உன் அம்மா புலம்பினதால் தான் உன்னை அழைத்து வரச் சொன்னேன் என்றேன். அதற்கு அந்த மகள், உங்களிடம் எந்த உண்மையையும் அம்மா சொல்லவில்லையா என்று கூறியதோடு தன் வீட்டில் நடந்ததை வரிசையாக பகிர ஆரம்பித்தது.
அந்த மகள் பேசும்போது, சிறு வயதிலிருந்து தன் அப்பா எப்போதுமே வீட்டில் சண்டையிட்டு வந்ததாகவும் தனது அம்மாவை ஒரு பொருட்டாக மதிக்காமல் எதற்கெடுத்தாலும் அடித்து காயப்படுத்தியதாகவும் கூறினாள். மேலும் சில நேரங்களில் சண்டையால் தனது நிம்மதியான வாழ்க்கை இழந்ததாகவும் சொன்னாள். பல முறை சண்டையிட்டு தன் அம்மாவை காயப்படுத்தியது தனக்கும் வேதனை அளித்தது என்றும் தன்னுடைய மற்ற நண்பர்கள் வீட்டில் பெற்றோர்கள் இந்தளவிற்கு சண்டையிட்டு கொள்ள மாட்டார்கள் என்றும் கண்ணீர் மல்க அந்த மகள் தெரிவித்தாள். அதோடு எல்லாவற்றையும் தன் அம்மா சகித்துக்கொண்டு தன் அப்பாவுடன் இருந்தது, மேலும் தனக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும் கூறினாள். இதனால் தன் அப்பா இப்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருப்பது வீட்டில் அமைதியை தருகிறது என்று சொன்னாள். அதற்கு நான் ஒரு வேலை உன் அப்பா இப்போது திருந்தியிருக்கலாம், நிதானமாக யோசி என்றேன். அதற்கு அந்த மகள், அவர் தனக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் மட்டும்தான் வருந்தி கண்ணீர் சிந்துவார். மற்றபடி அவர் திருந்தமாட்டார். ஒருவேளை அவர் உடல் நலம் தேறி வந்தால் கூட நான் அவரை அடிக்கத்தான் செய்வேன் என்று கோபமாக சொன்னாள்.
அதன் பிறகு அந்த அம்மாவிடம் பேசியபோது. குடும்பம் என்று இருந்தால் கணவன், மனைவி சண்டை வரும். கணவன் அடிக்கத் தான் செய்வார். ஆனால் தன் மகளை தன் கணவர் துளிகூட அடித்திருக்க மாட்டார். தன்னிடம்தான் எந்த கோபமாக இருந்தாலும் வெளிப்படுத்துவார். ஆனால் இப்போது மகள் அவரை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது என்று கூறினார். இதற்கிடையில் அந்த மகள், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை அம்மா, அப்பாவை கவனிக்க முடியவில்லை. அதனால்தான் அவரை கவனிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார் என்றார். பின்பு நான் அந்த மகளிடம், எல்லா மனிதர்களும் தவறு செய்வார்கள். அவர்கள் திருந்த மற்றொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் முற்றிலும் நிராகரித்துவிடக்கூடாது என்று அறிவுரை கூறினேன். அந்த மகள் செய்தது சரி என்று சொல்லவில்லை அந்த பெற்றோர்கள் சண்டையிட்டு கொண்டதால்தான் அந்த மகள் இந்தளவிற்கு மாறியிருக்கிறாள். முடிந்தளவிற்கு குழந்தைகள் முன்பு சண்டையிட்டு கொள்வதை தவிர்க்க வேண்டும் இல்லையென்றால். பெற்றோர்கள் மீது முழந்தைகளுக்கு வெறுப்புதான் உருவாகும். அன்பை வெளிப்படுத்தினால் அது பிரதிபலிக்கும் இல்லையென்றாள் இது போன்ற அப்பா மகள் உறவுகூட கசப்பில்தான் முடியும் முடிந்தளவிற்கு பெற்றோர்கள் தங்களுக்குள்ளும் குழந்தைகளிடமும் அன்பாக நடந்துகொள்ளுங்கள்.