ஆபாசப் படங்களைப் பார்த்து படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் இருந்த மாணவனுக்குக் கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
12ஆவது வகுப்பு படிக்கும் ஒரு பையன் தொடர்ந்து மூன்று மாதமாக ஆபாச படங்களைப் பார்த்து வந்துள்ளான். இதைப் பார்த்த அவனின் பெற்றோர் அந்த பையனை அடித்து திட்டியுள்ளனர். அடிக்கும்போது மட்டும் சரி இனிமேல் அதை பார்க்கமாட்டேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் ஆபாச படங்களைப் பார்த்துள்ளான். இதனால் அந்த பையனின் பெற்றோர் என்னிடம் வந்து என் பையனின் எண்ணங்களை எப்படியாவது மாற்றுங்கள் என்று சொன்னார்கள்.
அதன் பிறகு அந்த பையனிடம் நான் பேசும்போது, உன்னுடைய வயதில் இந்த மாதிரி செய்வதெல்லாம் சாதாரண விஷயம்தான். உனக்கு எங்கிருந்து இதுபோன்ற படங்களை பார்க்க தோன்றியது என்று கேட்டேன். அதற்கு அந்த பையன், ஒரு நாள் இரவு தனது பெற்றோர்கள் உறவு வைத்திருப்பதை பார்த்தாக சொன்னான். அதுமட்டுமில்லாமல் அது என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்காக தன் நண்பர் ஒருவனிடம் கேட்டுள்ளான். அந்த பையனின் நண்பர் இதுபோல அப்பா, அம்மா மட்டுமில்லை எல்லோரும் செய்யலாம் என்று கூறி சில வீடியோக்களையும் காண்பித்துள்ளான். அதன் பிறகுதான் ஆபாச வீடியோக்களை பார்த்ததாகவும் அது பிடித்திருந்ததாகவும் கூறினான். மேலும் அதுபோன்ற வீடியோக்களை படிக்கும்போது குளிக்கும்போது தொடர்ந்து பார்த்து வருவதாக சொன்னான்.
இதையெல்லாம் கேட்ட பிறகு அந்த பையனிடம், உனக்கு இனப்பெருக்கம் தொடர்பான கல்வியை பள்ளியில் சொல்லிக்கொடுத்தார்களா என்றேன். அதற்கு அவன் மலர்களில் நடக்கும் மகரந்த சேர்க்கை பற்றி சொல்லிக்கொடுத்ததாகக் கூறினான். அதன் பிறகு நான் அந்த பையனுக்கு தினமும் பாலியல் கல்வி தொடர்பாக பேச ஆரம்பித்தேன். முதலில் பருவமடைதல் பற்றி விவரித்தேன். அதன் பிறகு எந்த வயதில் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால் என்ன நடக்கும். அவனுடைய வயதில் உறவு வைத்துக்கொண்டால் என்ன ஆகும் என்று படிப்படியாக விவரிக்க தொடங்கினேன். என்னிடம் பாலியல் கல்வி தொடர்பான ஒரு புத்தகம் இருந்தது. அதேபோல் அந்த பையனையும் ஒரு புத்தகத்தை வாங்க சொல்லி அதில் உள்ளதை சொல்லிக்கொடுக்கும்போதே அழகாகப் புரிந்துகொண்டான். 6 செசன்களுக்கு பிறகு அந்த பையன், எனக்கு புரிந்துவிட்டது இனிமேல் அதற்கான வயது வரும் வரை ஆபாச வீடியோக்களை பார்க்க மாட்டேன் என்று சொன்னான்.
சில குழந்தைகள் அவர்களாகவே வந்து பெற்றோர்களிடம், குழந்தை எப்படி பிறக்கும்? என்று கேட்டுவிடுவார்கள். சில குழந்தைகள் நண்பர்களிடம் கேட்டு தவறாக முடிவெடுப்பார்கள். இதையெல்லாம் பெற்றோர்கள் கவனித்து அதற்கான கல்வியைச் சொல்லிக்கொடுக்க வேண்டும். இதுபோல பிரச்சனையில் வரும் குழந்தைகளின் பெற்றோர்களிடமும் இதைத்தான் நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.