
பெற்றோர்களின் சண்டையால் பாதிக்கப்பட்ட பையனுக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி குழந்தை வளர்ப்பு ஆலோசகர் ஆஷா பாக்யராஜ் நம்மிடம் விவரிக்கிறார்.
22 வயது பையன் தன் பெற்றோர் என்ன சொன்னாலும் கோபத்தில் அடிக்க ஆரம்பித்து அவர்களை அசிங்கமாக பேசுகிறான். இப்படி இருக்கும் அந்த பையனை எப்படியாவது மாற்றிக் கொடுங்கள் என்று பெற்றோர்கள் அழைத்து வந்தனர். அந்த பையனிடம் நான் பேசும் போது, சிறுவதிலிருந்து அவனுடைய பெற்றோர் செய்த குறைகளை சொல்லிக்கொண்டே இருந்தான். பெற்றோர் தன் முன்பு ஆபாச வார்த்தைகளை பேசி இருவரும் சண்டை போடுவதாகவும் மேலும், ஒருவருக்கொருவர் மாறி மாறி தங்களது தாம்பத்திய வாழ்க்கையை கொஞ்சைப்படுத்தி அடித்துக்கொண்டதாகவும் கூறினான். இதை உறவினர்கள் அவன் முன்பே பெற்றோர்களை தவறாக பேசுவதாக கூறினான்.
கவுன்சிலிங் பெற்று வந்த சமயத்தில் அந்த பையனிடம் பெற்றோரை பல முறை மன்னிப்பு கேட்க வைத்தேன். ஆனாலும் பெற்றோர்கள் தொடர்ந்து பொய் சொல்லி தன்னை ஏமாற்றுவதாக கூறி அவர்களை அடிப்பான். ஆனால், இது அந்த பையனின் ஒரிஜினல் கேரக்டர் இல்லை. ஒருமுறை எனக்கு உடம்பு சரி இல்லை என சொல்லிவிட்டு அடுத்த நாள் கவுன்சிலிங் வா என்றேன் அதற்கு அவன் எனக்காக கவலைப்பட்டு உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். இந்தளவிற்கு இருக்கக்கூடிய ஒரு பையன் தனது அப்பா, அம்மாவை பார்த்தால் மட்டும் கோபமாக நடந்து கொள்கிறான். இதுபோல குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட பெற்றோர்களே முக்கிய காரணமாக இருக்கின்றனர். தொடர்ந்து அந்த பையனுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருகிறேன். பெற்றோர்கள் ஒத்துழைப்பால் அவனும் கொஞ்சம் மாற்றம் அடைய ஆரம்பித்திருக்கிறான்.