குழந்தைகள் பற்றியே யோசித்து தன் நிலையை இழந்திருக்கும் பெண்மணிக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.
என்னிடம் கவுன்சிலிங் வரும் குழந்தைகளுக்கு எவ்வளவு மெண்டல் ஹெல்த் முக்கியமோ அந்த அளவு அவர்களுடைய பெற்றோர்களுடைய மெண்டல் ஹெல்த்தும் முக்கியம். ஏனென்றால், அவர்களது மனவலிமையே குழந்தைகளுக்கு சென்றடையும். என்னிடம் வந்திருந்த அந்த பெற்றோர்க்கு குழந்தையின் படிப்பு, அவர்களது உலகத்தைச் சுற்றியே முழுமையாக இருபத்தி நான்கு மணிநேரமும் யோசித்து யோசித்து இப்போது அவர்களுக்கு தங்கள் குழந்தையைக் கண்டாலே பிடிப்பதில்லை. அவர்கள் அம்மா என்று அழைத்தாலே கோவம் வருகிறது என்றார். நான் இப்படி இருந்ததே இல்லை. அவர்களும் இப்போது என்னிடம் நெருக்கம் முன்பு போல காட்டுவதில்லை. நான் என்ன செய்ய வேண்டும் மேடம் என்று கவலையுடன் என்னைப் பார்க்க வந்திருந்தார்.
குழந்தைகளை இயல்பாக விட்டிருந்தாலே அவர்கள் நன்றாக தான் படிப்பில் நாட்டம் காட்டுகின்றனர். ஆனால், இப்போதுள்ள பெற்றோர்கள் அவர்கள் படிப்பில் சிறக்க ஒவ்வொரு பாடத்திலும் இன்னும் சிறப்பாக பயில நிறைய வகுப்புகளில் சேர்த்து விடுகின்றனர். அது குழந்தைகள் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் அவர்களது ஸ்ட்ரெஸ்ஸில் பங்கெடுத்து மிகவும் பாதிக்கப்பட்டு விடுகின்றனர். இந்தப் பெற்றோர்க்கு இரண்டுமே பெண் குழந்தைகள் வேறு. அவர்கள் பதின் வயதை அடைவதால் கண்டிப்பாக தன்னுடைய அரவணைப்பு அவர்களுக்கு வேண்டும் என்பது தெரிந்தாலும் தன்னால் முடியவில்லை என்றார். அவர்கள் பள்ளியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்று வாரம் முழுவதும் தினசரி ஸ்பெஷல் வகுப்புகள் சேர்த்து அதைப் பற்றியே நினைத்து, அவரை பற்றி நினைக்காமல் உடல்நிலையே பாதிக்குமளவிற்குச் சென்றிருக்கிறார்.
அவரது உடல்நிலை கேடே அவரது உள்ளத்தையும் பெரிதளவு பாதித்து இருக்கிறது. சரியாக சாப்பிடுவது, தூங்குவது எல்லாமே மறந்து போய் பிடிக்காமல் இருந்தார். அவர் தன் குழந்தைகள் ஒன்றாவது வகுப்பு படிக்கும்போதே அவர்கள் பத்தாவதில் என்னவெல்லாம் செய்யவேண்டும், தான் வெளிநாட்டில் படிக்க இருந்து ஆனால் முடியாமல் போன இடத்தில் இவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று ஒரு நோட்டில் குறித்து வைத்திருந்திருக்கிறார். பின்னாடி மேலும் பேசியதில் தெரிந்தது, இவரது தந்தையும் இதே போலதான் தன்னைப் படிக்க வைக்கும் நடவடிக்கை இருந்ததாக குறிப்பிட்டார். இதுதான் அவரை அறியாமல் இவருக்கும் வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிந்தது.
ஏதாவது ஆயுதம் பார்த்தால் தற்கொலை செய்து கொள்ளலாமா என்றெல்லாம் யோசித்திருந்திருக்கிறார். செல்ப் கேர் செய்திருந்தாலே அவர்கள் மனநிலை நன்றாக மாறும். ரொம்ப டிப்ரஷனாக இருந்தார். என்னுடைய காணொளியை மூன்று மாதமாக பார்த்து வந்தாலும், இதனை எப்படி போய் பேசுவது என்று காலம் தள்ளியதாகவும், ஆனால், இனிமேல் தாமதிக்க கூடாது என்று தான் வந்ததாக சொன்னார். அவருமே தன் பள்ளி, கல்லூரி படிப்பிலும், அரசு தேர்விலும் கூட சிறந்து விளங்கி இருந்திருக்கிறார். அதனால்தான் தன்னைப் போலவே தன் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று இப்படி செய்து வந்திருக்கிறார் என்று புரிந்தது. நான் முதலில் அவர் கணவனை அழைத்து பேசினேன். இவர் தற்கொலை எண்ணம் எல்லாம் தன் மனைவிக்கு வந்திருந்தது என்பதை அறியாமல் இருந்திருக்கிறார்.
பொதுவாகப் பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனில் நிறைய மாற்றங்கள் உடலில் ஏற்படும். அதைக் குடும்பத்தில் நிறையப் பேர் புரிந்து கொள்கின்றனர். சில நேரங்களில் உதவி தேவை என்றால் நமது கணவனிடம் நாம்தான் எடுத்து சொல்லவேண்டும். அப்படி சில வருடங்கள் தொடர்ந்து தாக்கப்பட்டதே இது ஒரு வகை விளைவு என்று சொல்லலாம். இதை உணராத அந்தக் கணவரிடம் அவருடைய மனைவிக்கு என்று ஏதும் செய்து கொடுக்குமாறும், கூட சிறிய நடைப்பயிற்சி, அவருக்கு போக நினைத்த வேலைக்கென்று அனுப்பி வைக்குமாறு சொன்னேன். ஆரம்ப காலங்களில் வேலைக்கு செல்லவேண்டாம் என்று கூறியிருந்த அவர், இப்போது தன் மனைவியின் நிலை அறிந்து வேலைக்கு அனுப்ப ஒத்துக்கொண்டார். அந்தப் பெண்மணிக்கு கல்லூரியில் பேராசரியாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. எனவே அதற்கு ஆதரிப்பதாக சொன்னார்.
இவருக்கு மூன்று செஷனுடன் முடிந்தது. வாரம் ஒருமுறை பாலோ அப் மட்டும் செய்து வருகிறேன். குழந்தைகளுடன் நேரம் ஒதுக்கவேண்டும்தான். ஆனால், குழந்தைகளிடம் மட்டுமே நேரம் ஒதுக்க வேண்டும் என்பது தான் தவறு. தன்னால் முடியாத போது அதைக் குழந்தைகளுக்கும் கணவருக்கும் எடுத்து சொல்லலாம். அவர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். குழந்தைகள் உலகத்தில் தங்கள் உலகத்தை இழந்து விடாமல் தனக்கென்று சிறிது மீ டைம் எடுத்துக்கொள்ளுதல் பெற்றோர்களுக்கு அவசியம்.