Skip to main content

கணவனை பறிகொடுத்த பெண்; மகனுக்கு செய்த செயலால் நேர்ந்த விளைவு - ஆஷா பாக்யராஜ் பகிரும் குழந்தை வளர்ப்பு ஆலோசனை :16

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
parenting-counselor-asha-bhagyaraj-advice-16

சிங்கிள் பேரன்டிங் மற்றும் குழந்தைக்கும் இடையே ஏற்படும் சிக்கல்களுக்கு கொடுக்கப்படும் கவுன்சிலிங் பற்றி நம்மிடையே குழந்தை வளர்ப்பு ஆலோசனை சிறப்பு நிபுணர் ஆஷா பாக்யராஜ் பகிர்ந்து கொள்கிறார்.

நல்ல ஒரு சந்தோஷமான அம்மா, அப்பா, பையன் என்று இருந்த குடும்பம். அப்பா கோவிட்ல இறந்துபோக, அம்மாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஹவுஸ்வைஃப் என்பதால் வேலையும் பெரிதாக இல்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத சூழ்நிலை. அது அந்த குழந்தையை பாதித்து இருக்கிறது. குழந்தையிடம் எதுவும் பேசாமல், குழந்தை எது கேட்டாலும் திட்டுவது, அடிப்பது, அளவுக்கு அதிகமாக வரும் கோபத்தினால் அவரே அவரது முடியை வெட்டிக் கொள்வது என்று இருந்திருக்கிறார். சுய பராமரிப்பு என்று எதுவும் இல்லாமல் இருக்கக் காரணம், இந்த சமூகம் மற்றும் கடவுள் மீது அவ்வளவு கோபம். ஏன் எனக்கு இப்படி, நான் என்ன செய்தேன் என்று. இப்பொழுது அந்த குழந்தைக்கு 12 வயது. இவ்வளவு நாள் அம்மா அடித்தபோது வாங்கிய பையன், இப்போ திருப்பி அம்மாவையே பதிலுக்கு அடிக்கிறான். அது மட்டுமில்லாமல் கத்தி எடுத்து குத்திக் கொள்வேன் என்று மிரட்டுவது, போன், டிவியை போட்டு உடைப்பது என்று நடக்க ஆரம்பிக்கிறது. 

அவங்க அம்மாவே எனக்கு கால் பண்ணி எல்லாம் சொல்லியதோடு, ''என்னால என் கணவனை இழந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிறு குழந்தையிலிருந்து அவனை அடித்ததோ திட்டியதோ கூட கிடையாது. கடந்த 3 வருடங்களாக, கோவிட் வந்த பிறகு தான் இந்த மாற்றம். என்னால் என் குழந்தையை இப்படி பார்க்க முடியவில்லை. அவனுக்கும் அப்பா இல்லை என்று தெரிகிறது. ஆனால் அதையும் மீறி நானே என் குழந்தையை கெடுத்துவிட்டேன்" என்று ஒரே அழுகை. இதையெல்லாம் கேட்ட பிறகு அவரிடம் முதலில் நான் சொன்னது, "உங்களுக்கு எப்படி கணவன் இல்லை என்ற அந்த வலியை, வயதில் பெரியவரான உங்களுக்கே அதை ஏற்றுக்கொண்டு தாண்டி வர முடியவில்லை என்றால், அந்த 12 வயது குழந்தைக்கு என்ன தெரியும்? அப்பா திடீர்னு இல்லையே என்னாச்சு நாளைக்கு அப்பா வரமாட்டார்களா என்று அந்த குழந்தைக்கு எவ்வளவு கேள்வி இருந்திருக்கும் வலி இருந்திருக்கும்? நீங்கள் ஒரு 5 நிமிடம் யோசித்து இருந்தீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த அளவுக்கு வந்திருக்காது" என்று கூறினேன். 

மேலும், அம்மாவும் பல முறை தற்கொலை முயற்சி எடுத்திருப்பதாகவும், அதிலிருந்து அவரை மற்றவர்கள் காப்பாற்றிவிட்டதாகவும் அறிந்து கொண்டேன். "நாங்க 2 பேர் மட்டும்தான் இப்போது இருக்கிறோம். எப்போதாவது அம்மா, அப்பா வருவார்கள். தற்போது நான் ஒரு வேலையும் தேடிக் கொண்டேன். இப்பொழுது என் பையனை பார்க்கும்பொழுது, முழுமையாக ஒழுக்கம் இழந்து, சாப்பாடு தட்டுத் தூக்கி வீசுவது என்று, கெட்ட வார்த்தைகள் நிறைய பேசுவது என்று மாறிவிட்டான். முன்னாடி பள்ளிக்கு அழகாக போய் வந்து, நான் என்ன திட்டினாலும் அடித்தாலும் அமைதியாக அவன் வேலைகள் சரியாகச் செய்வான். இப்பொழுது  எல்லாமே மாறிப் போய்விட்டது" என்றார் அந்த மகனின் அம்மா.

அம்மாவும் தற்கொலை முயற்சி என்று அதிக மன அழுத்தம் கொண்டு இருக்க, 2 பேருக்கும் கவுன்சிலிங் தேவைப்பட்டது. யாராக இருந்தாலும் ஒரு 5 நிமிடம் நாம் யோசித்தோம் என்றால் நிறைய தீர்வுகள் கிடைக்கும். மற்றவர்கள் நிலையிலிருந்து யோசிக்கும் திறன் நிறைய வேண்டும். ஆனால் நாம் கோபம் வந்தால் யோசிப்பதே கிடையாது. நான் ஒரு புத்தகத்தில் படித்தேன். அதாவது டாக்டர் வந்து உங்களுக்கு ஒருநாள் தான் இருக்கிறது என்றும் நாளைக்கே இறந்து விடுவீர்கள் என்றும் கூறினால், நம் மனதில் என்னவெல்லாம் தோன்றும்? குடும்பத்தை நிலை நிறுத்த வேண்டும், இதுவரை நான் காயப்படுத்தியவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், எனக்கு உதவி பண்ணியவரிடம் நன்றி கூற வேண்டும், என்று இந்த ஒரு நாளில் நாம் எவ்வளவு யோசிப்போம்? ஆனால், இதுவே நாம் ஆரோக்கியமாக இருக்கும்போது ஏன் யோசிப்பதில்லை என்று அந்த புத்தக ஆசிரியர் எழுதி இருந்தார். இதைத்தான் அந்த தாயிடம் நான் கூறினேன். 

"இதை நீங்கள் ஒரு 5 நிமிடம் யோசியுங்கள். உங்களுக்கு கணவன் இல்லை என்றும் எனக்கு யாருமே இல்லையே என் தாய் தந்தை இருவரும் வயதானவர்களாக இருக்கிறார்களே அவர்களும் போய்விட்டால் என் நிலைமை என்ன என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். ஆனால், 12 வயது பையன் நிலையில் இருந்து பாருங்கள். நீங்களும் இல்லை என்றால் அந்த பையனின் நிலை சமூகத்தில் என்னவென்று. ஒரு 5 நிமிடம் யோசித்து இருந்தால் தற்கொலை என்ற எண்ணம் வந்திருக்குமா" என்றேன். குழந்தை வளர்ப்பு என்று வரும்போது யாருமே சரி என்று கிடையாது. குழந்தை வளர்ப்பு ஆலோசகரான என்னிடமே வந்து நீ சரியான பெற்றோரா  என்று கேட்டால் இல்லை என்றுதான் கூறுவேன். எனக்கும் கோபம் வரும். ஆனால் என் மகள், மகனுக்கேற்றார் போல என்னை நான் மாற்றிக் கொள்வேன், திருத்திக் கொள்வேன். நான் செய்த தவறை அந்த நாள் முடிவில் யோசித்து பார்ப்பேன். மன்னிப்பும் கேட்பேன். 

ஆனால் தவறு செய்து விட்டேன் என்று குழந்தையை பற்றி யோசிக்காமல் தற்கொலை செய்ய முனைவது பற்றி யோசிப்பதே கிடையாது. இப்படி வயதில் பெரியவர்கள் செய்வதை பார்த்துத் தான் குழந்தைகளும் அதற்கு ஏற்றாற்போல, ஒரு சாதாரண முடி வெட்ட சொல்லிவிட்டார்கள் என்று தற்கொலை செய்து கொள்ளும் செய்தியை நாம் தினசரி பார்க்கிறோம். மேலும் குழந்தைகள் கஷ்டப்படக் கூடாது. குழந்தைகளுக்கு தோல்வி என்பதையே காட்டாமல்  மாடர்ன் பேரண்டாக  காட்டிக் கொள்கிறோம். நாம் ஒருவேளை பட்டினி இருந்தாலும், குழந்தைகள் 3 வேளை உணவு கொடுத்து விடுகிறோம். நம் பெற்றோர்களும் இதெல்லாம் செய்திருக்கிறார்கள் தான். ஆனால் கஷ்டத்தையும் காட்டியிருக்கிறார்கள். ஆனால் இன்றைய பெற்றோர்கள் மறைக்கிறார்கள். ஐந்து பேர் முன்னாடி திட்டிவிட்டார்கள் என்றால், அந்த குழந்தையால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 

என்னிடம் வரும் நிறைய பெற்றோர்கள் கேட்பார்கள், எங்கள் காலத்தில் இப்படி ஆலோசகர் தேவைப்படவில்லையே என்று. ஏனென்றால் இன்றைய குழந்தைகள் அப்படி இருக்கிறார்கள். நாமும் அதற்கு தூண்டுகோலாக இருந்துவிட்டோம்.  சின்ன வயதிலேயே ஆப்பிள் ஐபாட், போன் என்று காண்பித்து விடுகிறோம். நாளைக்கே  அது கிடைக்கவில்லை என்றால் ஏதாவது செய்து கொள்வேன் என்றுதான் நினைக்கிறார்கள். பெற்றோர்கள் அடிப்பது திட்டும் சூழ்நிலை என்று வரும்போது, மூன்றாவது படிக்கும் சிறுவர்கள் சாதாரணமாக "இன்று உன் வீட்டிலிருந்து வந்துவிடு, அம்மா அப்பா பயந்து விடுவார்கள் அடிக்க மாட்டார்கள்" என்று அறிவுரை கூறுவது நடக்கிறது. 

இப்படி சிங்கிள் பேரண்டிங்கில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. குழந்தையிடம் உங்கள் கஷ்டத்தை நிறைய பேச வேண்டும். அப்பா இல்லாமல் மிக கஷ்டப்படுகிறேன் என்றும் ஆனால் உனக்காக மீண்டு வருவேன் என்றும் எடுத்து கூற வேண்டும். என்னை விட உனக்கு இருமடங்காக அந்த துயரம் இருக்கும் என்று புரிகிறது என்று கூற வேண்டும். ஆனால் எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும் என்று கூறுங்கள். செல்ஃப் ஹீலிங் என்பதை நிறைய பெற்றோர் செய்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அதன் விளைவாக அழுத்தம் சேர சேரத்தான் அது குழந்தையிடம் செல்கிறது. நம்மிடமிருந்து தான் அந்த குழந்தை வருகிறது என்பது மட்டுமில்லாமல், அதை சரியாக வளர்ப்பதும் நம் கடமை தான் என்று அந்த அம்மாவிற்கு நிறைய கவுன்சிலிங் கொடுத்தேன். 

அவர் இயல்பாக புத்தக வாசிப்பாளர் தான் என்பதால், நிறைய புத்தகங்கள் பரிந்துரைத்து படிக்க கொடுத்தேன். மேலும், அவர் ஹீல் ஆக நிறைய நேரம் கொடுத்த பின், அவரின் மகனிடம் எதிர்ப்பு வந்தாலும் நிறைய பேசுங்கள் என்றும், பிறகு நான் பேசுகிறேன் என்று கூறினேன். அவனது பாசிட்டிவ் குணங்களை கடிதம் மூலம் எழுதிக் கொடுங்கள், கணவர் இறப்பதற்கு முன் உங்கள் மூவருக்கும் இருந்த நல்ல நினைவுகளை குறித்து எழுதுங்கள். படிக்கும்போது கண்டிப்பாக அந்த குழந்தைக்கு தன்னை மீறி ஒரு உணர்வு வரும். அதாவது தனக்கென்று அம்மா இருக்கிறார்கள் என்று தோன்றும். தினமும் ஒரு பதினைந்து நிமிடம் குடும்ப நேரம் என்று இருவரும் உட்கார்ந்து பேசி ஒரு வாரம் தவறுகளை பற்றி உரையாடுங்கள். அடுத்த வாரம் அந்த தவறுகளை மாற்றிக் கொள்ளும் வழிகளை எடுத்துச் சொல்லுங்கள். பிடித்த இடத்திற்கு கூட்டிச் சென்று நேரம் செலவழியுங்கள். அதற்கு பிறகு 2,3 வாரம் கழித்து என்னை உங்கள் தோழியாக மகனிடம் அறிமுகப்படுத்துங்கள். அதிலிருந்து நான் கவனம் எடுத்துக் கொள்வதாக கூறினேன்.

என்னிடம் வந்த பிறகு நிறைய ஆக்டிவிட்டீஸ் கொடுத்தேன். பொதுவாக மனம் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு என்னவெல்லாம் பிடித்த ஆக்டிவிட்டீஸ் என்று தெரிந்து அதன் மூலமாக மனதை ஈடுபடுத்தினாலே போதுமானது. நாம் கூட உட்கார வேண்டும் என்பதே அடுத்த கட்டம் தான். அந்த குழந்தை, தன் அம்மா நிறைய புத்தகம் படிப்பார் என்றும், தனக்கும் படிக்க வேண்டும் ஆனால் என்ன புத்தகம் படிக்க வேண்டும் என்று தெரியவில்லை என்று சொல்லியபோது, இருவரும் ஒன்றாக படிக்குமாறு கூறி, இருவரையும் ஒன்றிணைத்து இப்பொழுது அவர்கள் சீராக இருக்கிறார்கள்.