Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #42

Published on 01/12/2021 | Edited on 01/12/2021

 

 

marana muhurtham part-42

 

 

இன்ஸ்பெக்டர் கண்ணன்  விசாரணை நடத்திய பாணி, நிரபராதிகளையும் நடுங்க வைப்பதாக இருந்தது. அதுதான் போலீஸுக்கே உரிய கூர்மை.  பொதுவாக எதிர் எதிர்த் தரப்புகள், புத்திக் கூர்மை என்னும் ஆயுதத்தை எடுத்துச் சுழற்றும் போது, ஒரு பக்கம் இழப்பும் இன்னொரு பக்கம் நிறைவும் நிகழ்ந்தே தீரும்.  அவரவர் தரப்பு நியாயங்கள்தான் அவரவர்களுக்கான வெற்றி.

 

லில்லியின் விபத்து திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டது என்ற சந்தேகத்தில், தனது கூர்மையான புத்தியை ஆயுதமாக்குகிறார் இன்ஸ்பெக்டர் கண்ணன். அந்த ஈட்டி யார் மீது படப்போகிறது என்பதுதான் இங்கே கேள்வி. அந்த லேப் லிஸ்ட் நோட்டில் ஒவ்வொரு பொருளாகக் கூர்மையாகப் பார்க்கிறார் இன்ஸ்பெக்டர். வீட்டில் வரவேற்பறையில் சோபா, நாற்காலி, போன்ற அலங்கார பொருட்கள் இருப்பது போல, லேப் அறையில் மனித எலும்புக்கூடு, இயற்பியல் தராசு, உடலின் பாகங்கள் என்று அறிவியல் அலங்காரத் தோரணங்கள்  தொங்கி  ஒரு வித மிரட்சியையும் ஒவ்வாமையையும் ஏற்படுத்தின. எல்லாப் பொருட்களின் பெயர்களையும் படித்துக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்.

 

"கவி..., இன்ஸ்பெக்டர் சாருக்கு உன்மேல எவ்வளவு அன்பு தெரியுமா?” என்று பீடிகையைப் போட்டான் ராம்.

 

"என்னடா சொல்ற? என்மீது எதுக்கு அன்பு வரப்போகுது? அவர் மகள் வயது இருப்பதால் இருக்குமோ?" என்று அவள் அசராமல் சொன்னாள்.

 

"உன்னை சிறார் ஜெயிலுக்கு அனுப்பாம இந்த ஸ்கூல விட்டுப் போகமாட்டேன்னு புங்காத்தம்மன் மேல சத்தியம் பண்ணியிருக்காராம்" என்று கிண்டலாகச் சொல்லி, கவியின் மன அழுத்தத்தில் ஜெலட்டின் குச்சிகளை வைத்தான்.

 

"அடப்பாவி... நான் என்னடா பண்ணேன்? டிசம்பர் மழையில உனக்கு மொட்டை மாடியில ஹெலிகாப்டரில் தான் சாப்பாடு" - என்று சாபம் விட்டாள்.

 

"பரவாயில்லை... பரவாயில்லை. எனக்கு ஹெலிகாப்டரிலாவது சாப்பாடு வரும். உனக்குக் களி தான்" என்று மீண்டும் வம்பளந்தான். இவர்களின் கிண்டல் பேச்சைக் கேட்டு எஸ்.கே.எஸ். முறைத்தார். அதைப் பார்த்ததும் அமைதியானார்கள்.

 

அந்த லிஸ்டில் நிறையப் பொருட்கள் இருந்தது. கல்யாணத்துக்கு வாங்கும் மளிகைப் பொருள்கள் போல அமிலங்கள், காரங்கள், உப்புகள் என்று வரிசைக்கட்டி நின்றன. அதில் பிக்ரிக் அமிலத்தைத் தேடுவது, கோலத்தில் புள்ளியைத் தேடுவது போல. கையெழுத்தும் தெளிவில்லாமல் இருந்தது. ஒரு வழியாகக் கடைசியில் பிக்ரிக் அமிலம் என்று இருந்தது. ஆர்க்கிமிடிஸ் யுரேகா என்று கத்தியதைப் போல இவரும் நாற்காலியிலிருந்து துள்ளிக் குதித்து எழுந்தார், "பிக்ரிக் அமிலத்தின் பெயர் இருக்கிறது" என்று கத்தினார்.

 

லிஸ்டில் பெயர் இல்லையென்றால் யாரோ திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தியிருப்பார்கள் என அனைவரும் நினைத்தனர். லிஸ்டில் பெயர் இருக்கிறதே. அதனால் இது தற்செயல் விபத்து தான் என அனைவரும் முடிவுக்கு வந்தனர். "பாலில் உறை ஊற்றுவது போல, உங்கள் வேலை சுலபமாக முடிந்துவிட்டது" என்று இன்ஸ்பெக்டருக்கு கை குலுக்கினார் எஸ்.கே.எஸ்.

 

"இல்லைங்க சார் இனிமே தான் நிறைய வேலை இருக்கு” என்று தொடரும் போட்டார் இன்ஸ்பெக்டர்.

 

"மேடம்.. எனக்கு இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகளாக லேபுக்கு வாங்கிய பொருட்களின் லிஸ்ட் கிடைக்குமா?” என்று கண்ணன் கேட்டார்.

 

வனிதா தயங்கினார் "சார்... அது பழைய லிஸ்ட் ஆச்சே கிடைக்கிறது கஷ்டம்" என்றார்.

 

"மேடம்..... நீங்க பயன்படுத்தும் பொருட்களில் எத்தனை வருடப் பொருட்கள், நினைவுக்காக வச்சிருக்கீங்க" என்று தொடர்பில்லா கேள்விக்கு மாறினார் இன்ஸ்பெக்டர்.

 

"ஒரு பத்து வருடத்திற்கு முந்தைய சுவர் கடிகாரம் நினைவுக்காக வச்சிருக்கேன் சார்" என்று பெருமிதத்துடன் சொன்னார் வனிதா.

 

"ஆஹா... எலி மசால் வடை இல்லாமல் பொறியில் மாட்டுதே" என்று நினைத்தாள் கவி.

 

"மேடம் உடைந்து போன கடிகாரத்தையே பத்திரமா வச்சிருக்கும் போது, பள்ளி புள்ளிவிவரங்களைப் பத்திரமாக வச்சிருக்க வேண்டாமா?... இதிலிருந்தே பள்ளி நிர்வாகம் சரியில்லைன்னு தோணுது" என்று ஆதங்கத்துடனும், கண்டிப்புடனும் பேசினார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

 

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் சாதனா அலுவலக அறைக்குச் சென்று தேடி, இரண்டு ஆண்டுகளுக்குரிய  லேப் பர்சேசிங் நோட்டை எடுத்துவந்தாள். அதைப் பார்த்ததும் வனிதாவின் முகம் வாடியது.

 

அந்தந்த ஆண்டுக்குரிய லிஸ்ட்டை தெளிவாக வைத்திருந்தார் லில்லி. "தேர்தல் சமயத்தில் தேர்தல் அதிகாரியிடம் தேர்தல் முடிந்ததும் வாக்குப் பெட்டி ஒப்படைக்கும் போது, உபயோகப்படுத்திய பொருள்கள், டேமேஜ் பொருள்கள் என்று, குண்டூசி முதற்கொண்டு ஒப்படைப்பார்கள். என்னவோ இந்திய பொருளாதாரத்தையே இந்த குண்டூசி தான் தாங்கி நிறுத்துவது போல கேட்டு வாங்கிச் செல்வார்கள். அதுமாதிரி  தெளிவாக எழுதியிருந்தார் லில்லி மேடம்.

 

எல்லா அமிங்களும், காரங்களும் வேதியியல் பொருள்களும் சோதனைக்குப் பயன்படுத்தியது போக மீதி இருந்தது. ஆனால் சோதனைக்குப் பயன்படுத்தாத பிக்ரிக் அமிலம் மட்டும் மீதியே இல்லை. விலை உயர்ந்த அந்த அமிலம் எங்கே போயிற்று? என்று தனக்குள் சந்தேக விதையை ஊன்றினார் கண்ணன். 

 

அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அந்த லேப்பிற்குள் சென்றார். அங்கு எல்லா அறிவியல் உபகரணங்களும் மியூசியம் மாதிரி அழகாக இருந்தது. ஆபத்தான அமிலங்கள் பாதுகாப்பாக கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூட்டப்பட்டிருந்தன.


 
"மேடம்... இந்த லேப் ரூம் சாவி யாரிடம் இருக்கும்?" என்று கேட்டார் இன்ஸ்பெக்டர் கண்ணன்.

 

"அலுவலக அறையில் ஆணியில் மாட்டி இருக்கும். லேப்பை பயன்படுத்தும் அறிவியல் ஆசிரியர்கள் இங்கிருந்து சாவியை எடுத்துக் கொள்வார்கள்" என்றார் வனிதா.

 

"என்னவோ  பொருட்காட்சியை சுற்றிப் பார்ப்பதைப் போல அவர் பள்ளி ஆய்வகத்தையே அதிசயமாகப் பார்த்துக்கொண்டே சுற்றி வந்தார் எஸ்.கே.எஸ்.

 

இவ்வளவு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் அமிலம்  எப்படி கால் முளைத்து வெளியே வந்தது? பிக்ரிக் அமிலத்தை வெப்பப்படுத்தினால் வெடிக்கும் என்பது ஒரு வேதியியல் ஆசிரியருக்கு தெரியாமல் இருக்குமா? இத்தனை ஆண்டுகள் வாங்கிய பிக்ரிக் அமிலம் எங்கே? என்று அடுக்கடுக்கான கேள்விகளுடன் குழம்பிக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கண்ணன், ஏதோ நினைத்தவராக,

 

“மேடம்,  லில்லி டீச்சர் வீட்டு அட்ரஸ் கொடுங்க” என்று கேட்டார். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்தனர்.

 

"சிறுத்தையை அதன் குகையிலேயே சந்திக்க கிளம்பிடுச்சிடா சிங்கம்" என்று ராம் கவியின் காதில் முணுமுணுத்தான்.

 

(திக் திக் தொடரும் )

 

முந்தையப் பகுதி : சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #41