Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #23

Published on 25/09/2021 | Edited on 25/09/2021

 

marana muhurtham part 23

 

அத்தியாயம் - 23

 

நடந்ததை எல்லாம் மறக்கத் தெரிந்தவரையும், நடக்கப்போவதை எல்லாம் அறியத் தெரிந்தவரையும் ஞானி என்பார்கள். நமக்கு ஞானிகளைவிட நல்ல செயல்களைச் செய்யும் மனிதர்கள்தான் தேவைப்படுகிறார்கள்.

’அப்பா வந்துவிட்டால் எப்படி வெளியே போவது?’ என்று கவி நினைக்கும்போதே, எஸ்.கே.எஸ்.சின் கார் கேட்டிற்குள்ளே நுழைந்தது. ஒருவேளை கவியும் ஞானியாகிவிட்டாளோ? 

 

சில நேரங்களில் அவளது செயல்கள் அவளை ஒரு ஞானி என்பது போல்தான் நினைக்க வைக்கிறது. பணக்கார வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் யதார்த்தங்கள் புரிந்தவள் அவள். தவறு என்று தெரிந்தால் தட்டிக்கேட்கத் தவறமாட்டாள்.

 

காரிலிருந்து இறங்கிய எஸ்.கே.எஸ். வேகவேகமாக உள்ளே வந்தார். வரும்போதே “கவி,..கவி..” என உச்ச ஸ்துதியில் அவர் குரல் உயர்ந்தது.

 

கவியின் மனம் ஒரு கணம் நடுங்கியது. எனினும் பலவீனத்தை வெளியே காட்டாமல் இருப்பதே மனதிற்குப் பெரிய பலம்தான். கவி இயல்பான குரலில் "என்னங்க டாடி, நான் இங்கே இருக்கேன்” என்றாள் உரக்கவே, அப்பாவிற்குக் கொஞ்சமும் சளைக்காத மகளாய்.

"ஈவ்னிங் ஒரு பிஸினஸ் மீட்டிங் இருக்கு. காலைல வச்சதை ஒத்தி வச்சிட்டாங்க. நீயும் வாயேன்... எனக்கு உதவியாக இருக்கும்” என்றார் நிதானமாக.

 

எஸ்.கே.எஸ் எதற்கோ வலை விரிக்கிறார் என்பதை உணர்ந்தவள்... என்ன பதில் சொல்றதுன்னு தெரியாமல் மெளனத்துடன்  கைகோத்தாள்.

 

அந்த நேரம் பார்த்து அம்மா இவளை அழைத்து, "கவி, வண்ணாரப்பேட்டையில் சாந்தி சேரீஸ்ல கலெக்ஷன்ஸ் நல்லாயிருக்காம். வர்ரீயா, போய்ட்டு வரலாம்" என்று  அழைத்ததும்...

"தெய்வமே" என ஓடிப்போய் அம்மாவைக் கட்டி அணைக்கத் தோன்றியது. அப்பாவிற்கு சந்தேகம் வரும் என்று அமைதியான குரலில், "அப்பா மீட்டிங் கூப்டிருக்காரே மா" என்றாள்.

 

சிறிது நேரம் யோசித்த எஸ்.கே.எஸ். "சரிம்மா, நீ அம்மா கூடவே போய்ட்டு  வா" என்று  அனுமதி அளித்தார்.

‘அப்பா, நீங்க என்னை வீட்டுக்குள்ளயே முடக்கனும்னு நினைக்கிறீங்க. வெளியெ எங்கும் போகக்கூடாதுன்னு எனக்கு உத்தரவு போட, உங்கள் மேல்தட்டு நாகரிகம் தடுக்குது. இவ்வளவு தூரம் என்னை தனியா வெளியில் அனுப்ப பயப்படுறதுக்குக் காரணம் எனக்குத் தெரியும். நான் தியா விசயத்தில் எதையும் கண்டுபிடிச்சிடக் கூடாதுன்னு  பயப்படறீங்க? நம் பள்ளியில் என்ன கோளாறுன்னு நான் தெரிஞ்சுக்கக்கூடாதுன்னு நடுங்கறீங்க. அப்பா உண்மையிலேயே நீங்க பழைய ஜெண்டில்மேனா? இல்லை, அண்டர்கிரவுண்ட் வில்லனா?’ என மனதிற்குள் ’நீயா..? நானா..?’ ரியாலிட்டி ஷோ நடத்தினாள் கவி.

 

அம்மாவுடன் வண்ணாரப்பேட்டை கிளம்புவதற்கு முன்,  டாக்டர் லேகாவிற்கு ஃபோன் போட்டாள் கவி.

" மேம் உங்க வீடு எங்க இருக்கு?"

"கவி மவுண்ட் ரோடில், தவ்சண்ட் லைட் பக்கத்துலதான். நீ வீட்டிற்கு வந்து பென்டிரைவ் வாங்கிக்கிறியா..?" என்றாள் லேகா.

" சாரி மேம், நான் சொல்ற இடத்துக்கு ப்ளீஸ் கொஞ்சம் வரமுடியுமா?"?

"கவி.. வர வர சினிமா டயலாக் மாதிரி என்னென்னவோ சொல்ற, திரிலிங்காத்தான் இருக்கு, கூடவே பயமாகவும் இருக்கு" என்று உண்மையைச் சொன்னாள் லேகா.

"நீட்டுக்குப் பயந்தா டாக்டராக முடியுமா? அதுக்கே பயப்படாமல் டாக்டர் ஆயிட்டீங்க. இது என்ன சிம்பிள் மேட்டர்" என்று தைரியம் சொன்னாள் கவி.

"ஒகே கவி.. நீ கால் பண்ற  இடத்துக்கு  நான் வரேன்” என்று சொல்லி ஃபோனை கட் பண்ணினாள் லேகா.

 

கவியும், அம்மாவும் வண்ணாரப்பேட்டை கிளம்பினார்கள். கிளம்புவதற்கு முன் அப்பா ஃபோன் பண்ணச் சொன்னார் என்பதற்காக அப்பாவிற்கு ஃபோன் பண்ணி கிளம்பிட்டேன் என்று சொல்லிவிட்டு, காரை ஸ்டார்ட் பண்ணினாள்.  

 

அதேநேரம் எஸ்.கே.எஸ். செல்லில் ஜி.பி.எஸ்.சை ஓப்பன் பண்ணினார். நுங்கம்பாக்கத்தில் இருந்து கார் மவுண்ட்ரோடை நோக்கி  விரைந்தது. 

"அம்மா தலைவலிக்கிது. தவ்சண்ட் லைட் சரவணபவன்ல ஒரு  காபி குடிச்சிட்டுப் போகலாம் வா” என்று காரை அந்த ஓட்டலை நோக்கி செலுத்தினாள் கவி.

"ஓகேடா.. சேம் ஃபீல். வா போகலாம்" என்று திலகா க்ரீன் சிக்னலைப் போடும்போதே ஓட்டல் வந்துவிட்டது.

 

சாலை ஓரத்திலேயே காரை பார்க் பண்ணிட்டு, ஓட்டலுக்குள் அம்மாவுடன் நுழைந்தாள். அங்கே கூட்டமான கூட்டம். அதில் நுழைந்து காபி குடித்துவிட்டு வெளியே வந்தால், மறுபடியும் காபி தேவைப்படும் போல் இருந்தது.

 

ஓட்டலில் நுழைந்த கவியின் கண்கள் லேகாவைத் தேடியது. இவர்கள் பிளான் பண்ணியபடியே லேகா வாஷ்பேசினுக்கு போகும் வழியில் இருக்கும் டேபிளில் அமர்ந்திருந்தாள்.

 

கவியும் திலகாவும்  மூலையாக ஒரு டேபிளில் இடம் பிடித்து அமர்ந்தவுடன்,

"அம்மா, நான் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வரேன்" என்று சொல்லிவிட்டு லேகா அமர்ந்திருந்த டேபிளின் அருகே வந்தாள்.

 

லேகா பென் டிரைவ்வை கர்ச்சிப்பில் சுற்றி கவியின் பார்வைக்கு வைத்தாள்.. 

 

அந்த டேபிள் அருகில் வந்த கவி, அவளுடைய கர்ச்சிப்பை தவறவிடுவது போல நடித்து லேகாவின் கர்ச்சிப்பை எடுத்துக்கொண்டாள். 

 

ரெஸ்ட் ரூம் சென்ற கவி பென் டிரைவ்வை உள்ளாடையில் மறைத்து வைத்துக்கொண்டாள்.

 

எதுவும் நடக்காதது போல் வெளியில் வந்த கவி, அவள்  லேகாவின் டேபிள் அருகே வந்தது முதல் இந்த நிமிடம் வரை ஒரு ஜோடிக் கழுகுக் கண்கள் தன்னைக் கவனிப்பதை அறியவில்லை..

 

(திக் திக்... தொடரும்)
 

 

சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... ‘மரண முகூர்த்தம்’ #22