அத்தியாயம் -21
சூழ்நிலைதான் ஒரு செயலுக்கு பல்வேறு உணர்வுகளைக் கொடுக்கிறது. கவி அந்த இடத்தில் அப்பாவைப் பார்த்ததும் அதிர்ந்தாள். இதுவே வேறு சூழ்நிலையாக இருந்தால் "அப்பா"என்று துள்ளிக் குதித்திருப்பாள். ஆனால் இப்போது அவள் இருக்கும் நிலைமையோ வேறு. அவரிடம் என்ன சொல்லி சமாளிப்பது? என்று மனதளவில் நடுங்கினாள். அதை வெளிக்காட்டாமல், "ஹாய் டாடி நீங்க எங்க இந்தப் பக்கம்?" என்றாள் இயல்பாக.
நல்லவேளை, டிரைவர் மணியிடம், காரை 'குப்பண்ணா'வுக்கு சற்று முன்தான் அவள் எடுத்துவரச் சொல்லியிருந்தாள். "சும்மா... குப்பண்ணா கடை சிக்கன் பிரியாணி என்னைக் கூப்டுகிட்டேஇருந்தது. அதான் பார்த்துட்டு போலாம்னு வந்தேன்"னு சொன்னவர்.. “ மவளே, உன்னைப் படிக்க அனுப்பினால் இங்க ஊரை சுத்திகிட்டா இருக்க?’ என்று மனதிற்குள் கறுவினார்.
"டாடி, இவ என் ஃபிரண்டு ஆயிஷா. நாங்க இரண்டுபேரும் தான் தியா வீட்டிற்குப் போறோம்" என்று சொன்னவள் மனதில் ‘டாடி நீங்க என்னை வேவு பார்க்க வந்திருக்கீங்க கார் மட்டும் சுத்துதா இல்லை, நானும் காரில் இருக்கேனான்னு பார்க்க வந்திருக்கீங்க. எனக்கு குப்பண்ணா பிரியாணி பிடிக்கும் என்பதால், நான் இங்கே இருக்கேனா?ன்னு பார்க்க வந்துட்டு கோழி கூப்பிட்டுச்சுன்னு கதையா,சொல்றீங்க?”ன்னு மனதினுள் புலம்பினாள் கவி.
ஆயிஷாவை அறிமுகப் படுத்தியதும் ஆயிஷா கை கூப்பினாள். வாய்திறந்து வணக்கம் என்று சொல்லவில்லை. முகத்தை முழுதாக மூடியிருந்த ஆயிஷாவின் கண்களை மட்டும் பார்த்தார் எஸ்.கே.எஸ். இந்தக் கண்களை எங்கேயோ பார்த்திருக்கிறோமே எனக் குழம்பிக்கொண்டிருக்கும் நேரத்தில்,"டாடி நாங்க கிளம்பறோம், வீட்ல பேசிக்கலாம்" என்று அப்பாவின் பதிலுக்காகக் காத்திருக்காமல் கவி எஸ்கேப் ஆனாள்.
பர்தாப் பெண்ணை கந்தன் சாவடி பஸ் ஸ்டாண்டில் இறக்கிவிடும் போது, "நாம பிளான் பண்ணா மாதிரி சரியாத்தானே செய்தீங்க எதுவும் சொதப்பலை இல்லை, அந்த சம்பவம் நடக்கும் போது நீங்க பர்தா போடலை தானே, பர்தாவைக் கழற்றி வச்சிட்டீங்களா...? நாம மாட்டிக்க மாட்டோமே" எனக் கவி சந்தேகத்துடன் கேட்டாள். "கவி, பர்தாவைக் கழற்றி விட்டுத்தான் அதைச் செய்தேன், ஆனா கேமரா ஆங்கிள் அந்த இடத்தில் விழாது. உன்னுடைய தைரியமும், நேர்மையும் தான் அநீதிக்கு எதிரான பக்க பலம். பயப்படாமல் இரு" என்று தெரியப்படுத்தி விட்டு பர்தா பெண் கிளம்பினாள்.
காரில் வரும் போது கவியின் மனம் வலித்தது "அப்பாவின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருக்கின்றன. ஏதோ தப்பாக மனதிற்குப் படுகிறது" என்று குழம்பினாள். "எல்லாக் குழந்தைகளுக்கும் தன்னுடைய அப்பாதான் ஹுரோ. தன்னைப் பற்றியும் சமுதாயத்தைப் பற்றியும் அறியாத 15 வயது வரை. அதன்பிறகு ஏனோ அப்பாவின் நடவடிக்கையில் லேசாக வில்லத்தனம் இருப்பதாக ஒரு மாயை ஏற்படும். சிலருக்கு அந்த மாயை நிஜமாகிவிடும் கொடுமையும் உண்டு. சிலருக்கு அது மாயையாகவே மறைந்து விடும் அதிர்ஷ்டமும் உண்டு’ கவியும் இப்போது தன் அப்பாவிடம் வில்லத்தனத்தின் சாயலை உணர்ந்தாள்.
அப்பா மீதான அதீத அன்பில் எந்த மாற்றமும் இல்லை. ஏதோ நினைத்தவளாக மணிஅண்ணனிடம் பேச்சுக் கொடுத்தாள். "மணி அண்ணா, அப்பாக் கூட ரொம்ப வருசமா இருக்கீங்க, அப்பா அன்பானவர், பண்பானவர்ன்னு தெரியும். ஒரு மகள் என்ற உறவையும் தாண்டி அவரைப் பத்தித் தெரிஞ்சிக்க விரும்புறேன் அண்ணா" என்று அவளுக்கே புரியாத மாதிரி நாசுக்காக கேட்டாள்.
"கவிம்மா உங்களுக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை., நீங்க சின்னப் பொண்ணு. வாழ்வின் நெளிவு சுளிவு தெரியாது எதையாவது குழப்பிக்க வேண்டாம்" என்று தத்துவமழை பொழிந்தார் மணி.
"அண்ணா நான் கேட்டதுக்கு, பதில் இது இல்லையே" என்று அவள் போட்ட தூண்டிலில் கண்ணாக இருந்தாள்.
"கண்ணதாசன் ஒரு பாடலில் பாடியிருப்பார். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, ஒரு கோலமயில் என் துணையிருப்புன்னு. அதனால கண்ணதாசனின் புகழ் கெட்டுப்போச்சா என்ன..? இன்னும் மக்கள் மத்தியில புகழோடு தானே இருக்கார்” என்று மழுப்பலான பதில் சொன்னார் மணி.
கவிக்கு மணி அண்ணா சொன்னது புரியவில்லை. இருந்தாலும் இந்த டாப்பிக்கை இனி பேசவேண்டாம் என மெளனமானாள்.
கவியின் செயல்களால் ரொம்பவும் குழம்பிப் போயிருந்த எஸ்.கே.எஸ். கவி ஆஸ்பிட்டலுக்கு மீண்டும் போயிருப்பாளோ என்ற சந்தேகத்தில் , காரை ராகவ் ஆஸ்பிட்டலுக்கு விரட்டினார். டாக்டர் ராஜே,ஷ் அறையில் லேகாதான் பேஷன்ட்டை பார்த்துக்கொண்டிருந்தாள். எஸ்.கே.எஸ்.சைப் பார்த்ததும் எழுந்து, பணிவுடன் ”டாக்டர் இரண்டாவது மாடியில் 10 நெம்பர் அறையில் இருக்கார்” என்றாள் லேகா. எஸ்.கே.எஸ். 10 நெம்பர் அறைக்குச் சென்றார். அங்கு டாக்டர் ராஜேஷ் இருந்த கோலத்தைப் பார்த்ததும் எஸ்.கே.எஸ் அதிர்ந்தார்.
( திக் திக் தொடரும்)
சாம்பவி சங்கர் எழுதும் விறுவிறு க்ரைம் திரில்லர் தொடர்... மரண முகூர்த்தம் #20