Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #28

Published on 27/05/2022 | Edited on 28/05/2022

 

maayapura part 28

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமா  கொடுத்த சாப்பாட்டை மல்லிகாவிற்கு கொடுத்தாள் சங்கவி. அந்த தட்டை கையில் வாங்கியதும் வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் மல்லிகா. அதைப்  பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. பசி என்ற உணர்வை உயிரினங்களுக்கு உருவாக்கிய இயற்கை தான் எத்தனை கொடியது என்று நினைத்தாள் சங்கவி. பசி என்ற உணர்வு மட்டும் இல்லை என்றால் பிரபஞ்சத்தின் செயல்களே தலைகீழாக இருக்கும். உயிரினங்களுக்கு உணவு என்ற ஒன்று தேவை இல்லை என்றால் காட்டில் சிங்கம் ராஜாவாக இருக்க முடியாது. அதுவும் மானும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும். மனிதன் உணவுக்காக அலைந்து திரிந்து இருக்க மாட்டான். சோம்பேறியாக காலம் கழித்தே காடுகளில் வாழ்ந்திருப்பான். மனித இனத்தின் இப்படி ஒரு அசுர வளர்ச்சி சாத்தியமற்றதாக இருந்திருக்கும். எது எதுக்கோ கருவிகள் கண்டுபிடித்த விஞ்ஞான வளர்ச்சியில் பசியைப் போக்க மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? பட்டினத்தார் அழகாக  சொல்வார் "அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே"என்று ஒரு குழந்தைப் பிறக்கும் போதே பசி என்ற உணர்வுடன்தான் பிறக்கிறது. மல்லிகா சாப்பிடுவதை பார்த்துக் கொண்டே சங்கவி இதையெல்லாம் நினைத்து கொண்டிருந்தாள். 

 

பக்கத்து அறையிலிருந்து இரண்டு பெண்கள் மல்லிகாவை எட்டிப் பார்த்தனர். "உன் உடம்புக்கு என்ன"? என்று நேரடியாக மல்லிகாவிடம் விசாரணையைத் தொடங்கினார்கள்.  அவர்களுக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா?

"அக்கா, நான் சொல்றேன் வாங்க" என்று அவர்களை வெளியே வராண்டாவிற்கு அழைத்து வந்து, "எங்க அக்காவுக்கு உடம்பில்  ரத்தம் இல்லையாம் அது தான் ஆஸ்பிடலில் தங்கி ரத்தம் ஏற்றுகிறோம் என்றாள் சங்கவி. "ஐயோ பாவம் இந்த சின்ன வயசிலேயே ரத்தம் இல்லை என்றால் இன்னும் குறை காலம் எப்படி தள்ளறது?ஆனால், ஆளைப்பார்த்தால் அப்படி தெரியலையே நல்லா மழமழன்னு தானே இருக்கா என்று பார்வையிலேயே நாடிபிடித்தாள் அந்தப் பெண்.

"அக்கா ஏற்கனவே இங்கு வந்து ரத்தம் ஏத்தி இருக்கு" என்று வந்த கோபத்தை பல்லுக்கிடையில் அடக்கிக்கொண்டு பதில் சொன்னாள் சங்கவி. இங்கிதமற்ற மனிதர்களின் சில தொல்லைகளை பொறுத்துக் கொண்டுதான் கடந்து செல்ல வேண்டும். இதற்குப் பெயர்தான் சமுதாய அமைப்பு. காரணமின்றி யாரையும் வெறுக்க கூடாது என்பதில் உறுதியுடன் இருந்தாள். ஒரு வழியாக வந்த பெண்களைப்  பேசி அனுப்பிவிட்டு மல்லிகாவையும் சாப்பிட வைத்தாள் சங்கவி.

" நீ சாப்பிடு சங்கவி" என்று அன்புடன் சொன்னாள் மல்லிகா.

" நான்  ரமா அம்மாவிடம் சென்று சாப்பிடுகிறேன்" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே நர்ஸ் வந்து மல்லிகாவிற்கு ஊசி போட்டார்கள்.

" மல்லிகாவை தூங்க வைப்பது தான் சிகிச்சைனா நாங்க வீட்டிலேயே செய்து இருப்போமே"என்று ஆதங்கத்துடன் சொன்னாள் சங்கவி.

" சரி மல்லிகாவிற்கு ஓய்வு கொடுக்கறீங்க கருவிலிருக்கும் குழந்தை கலையாமல் இருப்பதற்கு மருந்து யாரு தருவாங்க" என்று கிண்டலாக கேட்டாள் நர்ஸ்.

 

சில நேரங்களில் நம் இயலாமை அறிவை மறைத்து விடுகிறது என்று நினைத்துக் கொண்டாள் சங்கவி.

 

ரமா அம்மா அறைக்கு வந்த சங்கவி அவர்கள் சாப்பிடாமல் கண்மூடி அமர்ந்து இருப்பதை பார்த்தாள்.

"அம்மா சாப்பிடலையா மா" என்றாள் கனிவான குரலில். 

"பிடிக்கலை மா விரக்தியா இருக்கு" என்று புலம்பினார். "அம்மா படிச்சவங்க நீங்களே இப்படி சொன்னா எப்படிம்மா?" என்றாள்.

" ஏன் சங்கவி படிச்சவங்களுக்கு உணர்வு இருக்காதா என்ன? படிப்பு அறிவை வளர்ப்பதற்காக தான்" என்று விவாதத்தை ஆரம்பித்தார் ரமா. "உண்மைதான்மா  அந்த அறிவுதான் சில உணர்வுகளைக் கண்ட்ரோல் பண்ற சுவிட்ச் மாதிரி இருக்கும்" என்று தனக்கு தெரிந்ததை சொன்னாள் சங்கவி.

" நீ சொல்றது சரிதான் தொடக்கம்னு  ஒன்று இருந்தால் முடிவு இருந்துதான் ஆகும். யாரும் முடிவை எழுதிவிட்டு பிறகு கதை எழுதுவது இல்லை.அப்படி எழுதினால் கதையில் ஆர்வம் இருக்காது.அது மாதிரிதான்  இது. என் முடிவு தெரிந்ததால் வரும் விரக்தி" என்று தன் உணர்வை விளக்கினார் ரமா  அம்மா.

 

ரமா அம்மா கேன்சரில் கீமோதெரபி ஸ்டேஜில் இருக்காங்க. இந்த சிகிச்சை வாழ்நாளை அதிகரிக்குமே தவிர நோயை நிரந்தரமாக குணமாக்கிடாது. அதுவும் ஒரு பெண்ணுக்கு வந்தால் வாழ்வில் அதைவிட நரகம் வேறு எதுவும் இல்லை. பெண் என்றாலே அழகு என்றுதான் அர்த்தம். அந்த அழகு தன் கண்முன்னே உருக்குலைந்து போவதை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். ரமா  அம்மா மட்டும் விதிவிலக்கா என்ன அவர்களை எப்படியாவது உற்சாகப்படுத்த வேண்டும் என்று மனதினுள் நினைத்துக் கொண்டாள் சங்கவி.

 

எப்போதும் ஒருவரின் பெருமைகளைப் பேசும் போது அவர்களின் மனம் உற்சாகம் அடையும். சங்கவி தட்டில் சாப்பாடு போட்டுக் கொண்டே "அம்மா ..நீங்க எவ்வளவு அறிவாளியாக இருக்கீங்க. எவ்வளவு நூல்கள் படிச்சிருக்கீங்க. பெரியாரின் கருத்துக்களைப் புரிந்து கொள்வதற்கே சீரிய சிந்தனை வேணும்மா" என்று பேசிக்கொண்டே சாப்பாட்டை உருண்டை உருட்டி அவர்கள் கையில் தந்தாள். அவர் புத்தகம் படிப்பதற்கே  இப்படி சொல்றே நான் அவருடன் நேரில் பேசி இருக்கேன் தெரியுமா? என் மேடைப்  பேச்சை அவர் பாராட்டி இருக்கிறார்" என்று உற்சாகம் பொங்க தன்னைப்  பற்றி பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தார். இப்போது ரமா அம்மாவின் முகத்தில் புதுப்பொலிவு வந்தது.

"அம்மா உங்களுக்கு  எந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்மா எந்த வேலையை செய்தால் நீங்க உங்களையே மறந்து அதில் ஈடுபடுவீங்கம்மா" என்று ஆர்வமுடன் கேட்டாள் சங்கவி. "எனக்கு ஓவியம் வரைய  ரொம்ப பிடிக்கும்மா  நான் சோகமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தாலும் அதை வெளிப்படுத்துவது ஓவியங்கள் மூலமாக தான்" என்று ஓவிய காதலுடன் சொன்னார் ரமா. 

 

மல்லிகாவையும், ரமா அம்மாவையும் கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சங்கவியிடம் வந்துவிட்டது. மல்லிகா அதிக நேரம் உறக்கத்தில் இருந்ததால் சங்கவி ரமா அம்மாவுடன் நேரத்தை செலவழித்தாள். ஒருநாள் ரமா அம்மாவின்  உணவை சாப்பிட்டாள். இப்படியே தொடர்ந்து சாப்பிட சங்கவிக்கு தன்மானம் இடம் தரவில்லை. என்ன செய்வது என்று யோசித்தாள். பூவிற்கும் முனியம்மாவை தேடி சென்றாள் சங்கவி.

" அக்கா எனக்கு பூ கட்டத் தெரியும் நான் உங்களுக்கு பூக்கட்டி தருகிறேன்" என்று கேட்டாள். முனியம்மாவும் சரி என்று ஒத்துக் கொண்டாள்.

 

மதியம் சாப்பிட்டதும் மல்லிகாவும், ரமா அம்மாவும் உறங்கும் நேரத்தில் முனியம்மா வீட்டிற்குச் சென்று பூ கட்டித் தந்தாள்.  முனியம்மா கொடுத்த காசில் இரவு உணவு இட்லி வாங்கிட்டு வந்தாள். ரமா அம்மாவிடம் அந்த இட்லியைக் கொடுத்து "அம்மா தினமும் வீட்டில் தானே சாப்பிடறீங்க இன்னைக்கு ஒரு நாள் இந்த இட்லியும் சட்னியும் சாப்பிட்டு பாருங்க உங்களுக்கு பிடிக்கும்" என்று கெஞ்சினாள்.

" நான்  இந்த மாதிரி இடத்தில் எல்லாம் வாங்க மாட்டேன். அந்த மக்கள் பேசுற பேச்சு, அந்த இடம் இதெல்லாம் எனக்குப் பிடிக்காது. இருந்தாலும் உனக்காகச் சாப்பிடறேன்" என்று  வாங்கி ஒரு வாய் சாப்பிட்டு,

"சங்கவி தேங்காய் சட்னி அருமையா இருக்கு" என்று பாராட்டினார்.

"அம்மா இதுல தேங்காவே இல்லைமா. வெறும் உடைத்த கடலை மட்டும்தான் தனியா இருக்கும்" என்று சங்கவி சொன்னாள்.

"சுவை அபாரம் இவ்வளவு நாள் எனக்கு தெரியாம போச்சு மா" என்று ஆதங்கப்பட்டார்.

"அம்மா எல்லாரும் அவங்க அவங்க இடத்துல இருந்து கிட்டு தான் அடுத்தவங்களை பார்க்கிறோம். மற்றவர்கள் இடத்திற்கு இறங்கி வரும்போது தாம்மா அன்பை உணர முடியும்" என சங்கவி சொன்னதும்  ரமா புன்னகைத்தார். அதன் அர்த்தம் என்றாவது ஒருநாள் சங்கவிக்கு தெரியவரும் என்று நினைத்தார்.

 

வெற்றிகரமாக இரண்டு நாள் சென்று விட்டது. சங்கவியும் 18 வயது பெண் தான். அவளுக்குள்ளும் மற்றவர்கள் மத்தியில் நேர்த்தியாக உடை அணிய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஊரில் இருந்து யார் இவர் துணியை எடுத்து வந்து தருவது. இங்கு இருக்கும் வரை ஒரே புடவையைத் துவைத்து தான் கட்ட வேண்டும் போல என நினைத்துக் கொண்டாள்.

 

அசோக்கைப்  பார்த்து இரண்டு நாட்கள் சென்றுவிட்டது. வெளியில் எல்லாருடனும் பேசிக்கொண்டு இருந்தாலும் மனம் என்னவோ அசோக்கை சுற்றியே கும்மி அடித்துக் கொண்டிருந்தது. முனியம்மா வீட்டில் பூ கட்டி  விட்டு மருத்துவமனை வந்த சங்கவிக்கு வாசலிலேயே இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அசோக்கைப் பார்த்ததும் சங்கவிக்கு 32 பல்லும் முழுமையாய் தெரிந்தது.  என்னவோ  பார்த்து பல யுகங்கள் ஆன உணர்வுடன் மொத்த அன்பையும் கண்களில் ஆண்டனா வைத்து அசோக்கின் நரம்புகளுக்கு கடத்திக் கொண்டிருந்தாள் சங்கவி.

"ஏய்...பொம்மி  உனக்கு இங்கே யாரையும் தெரியாது. எங்க போயிட்டு வர்ரே என்று ஆச்சரியத்துடன் கேட்டான் அசோக்.

" இருங்க அக்கா என்ன பண்றாங்கன்னு பார்த்துட்டு வரேன்னு உள்ளே ஓடினாள்.

" ஏய் ..இந்தா உனக்கு புடவை ஜாக்கெட் எல்லாம் எடுத்து வந்து இருக்கேன், ஒரே புடவையோட எத்தனை நாளைக்கு இருப்ப.  அதான் ஏதோ என் கண்களில் பட்டதை எடுத்துட்டு வந்தேன்" என்று அக்கறையுடன் கொடுத்தான். அந்தத் துணிப் பையை பிரித்து பார்த்தால் சங்கவி எந்த புடவைக்கு எந்த ஜாக்கெட் போடுவாளோ அதை அப்படியே எடுத்து வந்திருந்தான். அசோக் தன்னை எந்த அளவு ரசித்து இருக்கிறான் என்பதை உணரும்போது சங்கவிக்கு வெட்கத்துடன் பெருமிதம் வந்தது. கணவன் மனைவி அன்பானது மனதளவில்  செம்மண்ணில் கலந்த நீர் போல இருந்தாலும் மற்றவர்கள் பார்வைக்கு தாமரை இலை நீர் போல நடந்து கொள்வார்கள். உள்ளே போய்  மல்லிகாவிற்கு ஏதாவது தேவையா? என்று கேட்டுவிட்டு அசோக்கும் சங்கவியும் வெளியில் இருந்த மரத்தடியில் அமர்ந்தனர். சங்கவி குழந்தை மாதிரி மாயப்புறாவின் 26, 27ஆவது பகுதியை மீண்டும் ரீபிளே பண்ணி ஒவ்வொன்றாக அவளின் கொஞ்சும் குரலில் சொல்லி முடித்தாள்.

"மாமா ..உங்க கிட்ட காசு இருக்குமா? ஒரு கோடு போடாத நோட்டும் கலர் பென்சிலும் வாங்கணும்" என்று கேட்டதும் அசோக் வாங்கி வந்து தந்தான். அவனை அழைத்துச் சென்று ரமா அம்மாவிடம் அறிமுகப்படுத்தினாள் சங்கவி. நோட்டையும் கலர் பென்சிலையும் கொடுத்து "உங்க விருப்பம் போல படம் வரைந்து எனக்கு அன்பளிப்பாக தாங்கம்மா" என்று அன்புடன் கேட்டதால் சரி என்று ஒத்துக் கொண்டார். அசோக்கும் சங்கவியைப் பிரிய மனமில்லாமல் ஊருக்குச் சென்றான்.

 

ரமா அம்மாவிற்கு தனிமை கஷ்டமாக இருக்கிறது என்று  மல்லிகா இருக்கும் அறைக்கு மெதுவாக நடந்து வந்து மல்லிகாவை நலம் விசாரித்தார். 

"ரமா அம்மா ஏன் உங்களைப் பார்க்க யாரும் வரலை? ஏன் உங்களுக்கு  சொந்த பந்தம் யாரும் இல்லையா?" என்று நாகரீகம் தெரியாமல் தேவையில்லாத விஷயங்களைப் பேசினாள் மல்லிகா. சங்கவிக்கு எரிச்சலாக வந்தது. வெளிக்காட்ட முடியாமல் அமைதியானாள்.

"எனக்கு  பையன் இருக்கான் அவனுக்கு வேலை அதிகம். அதான் வர முடியவில்லை" என்றார் ரமா. பெத்தவங்களைப் பார்த்துகறதைவிட என்ன பெரிய கலெக்டர் வேலை பார்க்கிறார்" என்று தண்ணீர் குடித்துக் கொண்டே கேட்டாள் சங்கவி.

"ரமா அம்மா மகனின் வேலையைச்  சொன்னதும் சங்கவிக்கு அதிர்ச்சியில் தண்ணீர் நாசியில் ஏறி புரையேறியது.

 

( சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #34

Published on 28/06/2022 | Edited on 28/06/2022

 

maayapura part 34

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

ரமாவின் வரவிற்கு பிறகு சிறு மாற்றங்களுடன் காலநதி சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. மல்லிகாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் மருத்துவமனையில் வந்து பார்த்து விட்டுப் போன மல்லிகாவின் அண்ணன்களும் அம்மா அப்பாவுடன் மீண்டும் இப்போது தான் இங்கு வருகிறார்கள். இவ்வளவு நாட்கள் காசிக்கு சென்றிருந்த அப்பா அம்மா இப்போதுதான் திரும்பி இருந்தார்கள்.

 

மல்லிகாவின் அம்மா வந்து இறங்கியதுமே புராணத்தை ஆரம்பித்துவிட்டார். 

"மானூத்து தோப்புல பாடித்திரிந்த குயிலு, வண்ணாத்தி பாறையில் ஆடி திரிந்த மயிலு, வாடி வதங்கி கட்டில்ல கிடக்கறா.. அதை பார்க்கையில வடக்கால போன பாவி மக  நான் கங்கையிலேயே போயிருக்கக் கூடாதா" என்று ஒப்பாரி  வைத்துக் கொண்டிருந்தார்.

"என்னங்க பண்றது நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. அதுவரைக்கும் அரும்பாடுபட்டு ரெண்டு உயிரையும் காப்பாற்றி ஆச்சு"ன்னு தங்கம் சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். "நீங்க என்ன பண்ணுவீங்க சொந்தம் ஆச்சே உங்க சின்ன மருமகளை விட்டுக் கொடுப்பீங்களான்னு" குத்தி காட்டினார் மல்லிகாவின் அம்மா ரஞ்சிதம்.

" அம்மா நான் வேணும்னே செய்யலை தெரியாம நடந்திருச்சு மன்னிச்சுடுங்க" என்று சங்கவி கெஞ்சும் குரலில் சொன்னாள்.

"உன் பசப்பு வார்த்தை எல்லாம் மத்தவங்க நம்பலாம். நான் நம்ப மாட்டேன் நீ முதல்ல உண்டாகலைன்னு தண்ணி ஊத்தி விழ வச்சிருக்க" என்று கோபமாக பேசினார் ரஞ்சிதம்.

"த.. ஏதோ பொண்ணை பெத்தவளுக்கு ஆதங்கம் இருக்கும்னு சும்மா இருந்தா நீ என்னடான்னா அதிகமா பேசுற. இது உன் வீட்ல நடந்திருந்தா உன் மருமக பொறாமையில் செய்தாள்னு நீ சொல்வாயா. போகாத ஊர் எல்லாம் போயி கண்ணுறக்கம் இல்லாம காலிலெல்லாம் விழுந்து உன் மவளைக் காப்பாற்றினால் வசவு பேசுற இனிமே இப்படி பேசினா அவ்வளவுதான்" என்று கோபமாக கத்தினார் தனம்மா பாட்டி.

"ஏதோ மகளை பெற்றவங்க ஆதங்கத்தில் நாலு வார்த்தை பேசி விட்டேன். அதுக்குப் போயி இப்படி கோபிக்கறீங்க" என்று குழைந்தாள் ரஞ்சிதம்.

" அம்மா புரியாம பேசாத.. சங்கவி இல்லன்னா நான் உயிரோடவே இருந்திருக்க மாட்டேன். அவளை திட்டாத மா" என்று சங்கவிக்கு பரிந்து பேசினார் மல்லிகா.

 

சங்கவி எதையும் காதில் வாங்காமல் விருந்தாளிக்கு சமைப்பதற்காக கோழி அடித்து குழம்பு வைக்க சென்றாள்.

 

மணியை அழைத்துக்கொண்டு மச்சான்கள் வயக்காட்டு பக்கம் போனார்கள்.

"மாப்ள  எவ்வளவு நாளைக்குதான் வாய்க்கா வரப்புன்னு மல்லுகட்றது உங்களுக்குன்னு தொழில் வேணாமா?எப்ப தான் நீங்க கெத்தா கார்ல வந்து இறங்கறது. நாங்க கார் கதவை திறந்து விடுவது" என்று மணிக்கு புகழ் போதையை கோப்பையில் ஊற்றி கொடுத்துக் கொண்டிருந்தனர்.

"அட போங்க மச்சான் விவசாயத்திற்கு முதல் போட முடியாம மூச்சு முட்டுது. இதுல எங்க இருந்து தொழிலுக்கு முதல் போடறது" என்று ஆதங்கப்பட்டான் மணி.

 

ஒரு மனிதனுக்கு புகழை போல போதை தரக்கூடியது வேறு எதுவும் இல்லை. அதில் மிதக்கும் வரையில் அவன் வாழ்வு தப்பியது. மூழ்க ஆரம்பித்தால் அவனும் சேர்ந்து மூழ்கி விட வேண்டியதுதான். லேசாக துளிர்விட்டு இருந்த தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள் மல்லிகாவின் அண்ணன்கள். "மாப்பிள்ளை எங்க ஊர்ல டூரிங் டாக்கீஸ் லீசுக்கு வருது அதை எடுத்து நடத்துவோம். ஜம்முனு தியேட்டர் ஓனர் மாதிரி காரில் வந்து இறங்கி கல்லாப்பெட்டியில பணத்தை எண்ணிக்கிட்டு இரு. நாங்க உனக்கு உழைச்சி தர்ரோம் மாப்பிள்ளை" என்று ரீல் விட்டுக் கொண்டிருந்தனர் மல்லிகாவின் அண்ணன்கள்.

"அப்படியா சொல்றீங்க கேட்க நல்லாத்தான் இருக்கு பணத்துக்கு எங்கே போறதுன்னு" புலம்பினான் மணி.

"அது உங்க பாடு மாப்பிள்ளை. 2 நாளில் 10 ஆயிரம் ரூபாய் எடுத்துகிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க நாம லீசுக்கு வாங்கி முடிச்சிடலாம் " என்று மணியின்  நாக்கில் தேனை தடவினார்கள். "மல்லிகா இன்னும் எத்தனை நாளைக்கு தான் கூட்டுக்குடும்பத்தில் இருக்க போற? புள்ள பொறக்க போறான். உன் புருஷன் உழைச்சி எல்லாரும் அனுபவிக்கிறார்கள்" என்று நெருப்பில்லாமல் பத்த வைத்துக் கொண்டிருந்தார் ரஞ்சிதம்.

 

ஆண்களுக்கு புகழ் போதை என்றால் பெண்களுக்கு எது சுதந்திரம் என்பது தெரியாத போதை. கூட்டுக் குடும்பத்தில் இருந்தால் அடிமை தனியாக இருந்தால் சுதந்திரம் என்னும் தவறான எண்ணம் பெண்கள் மனதில் வேரூன்றி உள்ளது. தன் மகன் தன்னுடன் இருக்க வேண்டும் மருமகள் தனிக்குடித்தனம் போக கூடாது. மகள் மட்டும் தனிக்குடித்தனம் வந்துவிடவேண்டும். இந்த அம்மாக்களின் லாஜிக் என்னவென்று புரியவில்லை. ரஞ்சிதம் தன் மகளுக்கு அப்படித்தான் உரு ஏற்றி கொண்டிருந்தாள். பாவம் மல்லிகா சின்ன பெண் தானே வாழ்வில் நல்லது கெட்டது அறியாதவள். அம்மா சொல்லை வேதவாக்காக நினைத்துக் கொண்டு மண்டையை ஆட்டிக் கொண்டிருந்தாள். மணிக்கு மச்சான்கள் வேப்பிலை அடித்தார்கள். மல்லிகாவிற்கு அவள் அம்மா பாடம் படித்தாள். 

"வெடக்கோழி விருந்தை விரலிடுக்கில் கூட விடாமல் வழித்து சாப்பிட்டுவிட்டு மணிக்கும் மல்லிகாவிற்கும் மூளைச்சலவை செய்து விட்டு கிளம்பினார்கள் மல்லிகாவின் குடும்பத்தினர். 

 

சினிமாவில் வில்லன்  பாம் வைப்பதுபோல வைத்து விட்டு சென்றுள்ளனர். எப்போது வெடிக்கும் என்று தான் தெரியவில்லை. மணி ரெண்டு நாளா மந்திரிச்சி விட்ட கோழி மாதிரியே சுற்றிக் கொண்டிருந்தான். பத்தாயிரம் ரூபாய்க்கு என்ன செய்வது என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருந்தது. ரமா அம்மாவை கேட்கலாம் என்று நினைத்தால் அவர்கள் நிச்சயம் வீட்டில் சொல்லி விடுவார் என பயந்து அந்த திட்டத்தை கைவிட்டான். பணத்துக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த மணி ஒரு முடிவுக்கு வந்தவனாக வீட்டிலிருக்கும் அலமாரியைத் திறந்து ஏதோ எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

 

(சிறகுகள் படபடக்கும்)

 

 

Next Story

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #33

Published on 19/06/2022 | Edited on 19/06/2022

 

maayapura part 33

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

"என் வாழ்க்கைப் பயணத்தில் கடைசி ஸ்டேஷனை எதிர்பார்த்துப் பயணிக்கிறேன். எப்பொழுது வரும் என்று தான் தெரியவில்லை" என்று ரமா சொல்லி விட்டு  வாசலைத் தாண்டும்போது "த..நில்லு" என்று ஒரு குரல் அதட்டலாக வந்தது.

"என்ன தனம்மா" என்று சொல்லிக்கொண்டே அவரைப் பார்த்தார் ரமா,

"எனக்கு மருவாதையா பேசத் தெரியாது மனசில் இருக்குறதை பட்டு பட்டுன்னு கேட்டு விடுவேன். ஆனால் பாசக்காரி பிடிச்சிருந்தா பாசம் காட்டுவேன். வேஷம் போடத் தெரியாது. ரமா எங்க அன்புள்ள என்ன குறையைக் கண்ட இப்படிக் கிளம்பி போற" என்று உரிமையாகக் கேட்டாள் தனம்மா. "என்னால எந்த பயனும் இல்லை நான் அடுத்தவங்களுக்கு ஏன் பாரமா இருக்கணும். அதான் கிளம்பி போறேன்னு" சோகமாகச் சொன்னார் ரமா.

"பொம்பளை சுமக்கிற கருவை பாரமா நினைத்திருந்தால் இந்த உலகம் உருவாகி இருக்குமா? நம்ம கூட வாழ உறவை பாரமா நினைச்சா உறவுகள் எல்லாம் சுமக்க முடியாத சுமையாகத்  தான் இருக்கும். நல்லதோ கெட்டதோ அது தான் நான் வாங்கி வந்த வரம் என்று நினைத்துப் பார்த்தால் வாழ்க்கை சுகமாக இருக்கும் இவ்வளவு பேரைச் சுமக்கிற இந்த ஆல மரக் கிளைக்கு ஒரு கிளியைச் சுமப்பதா பாரம்" என்று தத்துவமாகப் பேசினார் தனம்மா. குடும்பத்தினர் அனைவரும் வாயடைத்து நின்றனர். தனம்மா பாட்டிக்கு அன்பாகவும் பேசத் தெரியுமா? என்று மல்லிகாவும் சங்கவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

"இல்ல தனம்மா  நீங்க என்னதான் சொன்னாலும் அது சரிவராது. புது கிராமம் பழக்கமில்லாத மக்கள். என் கடைசிக் காலம் வரை இங்கேயே என்பது எனக்குத் தயக்கமாக இருக்கு" என்று சொன்னார் ரமா. "வெள்ளைக்காரன் அடி எடுத்து வைக்கும் போது இப்படி நினைக்கலையே மொழி தெரியாத வேற நாட்டுக்காரன் பல வருஷமா நம்பள அதிகாரம் பண்ணி வந்திருக்கான். அன்பால நம்மாள ஒன்றா வாழ முடியாதா?" என்று தனம்மா உதாரணம் எல்லாம் சொல்லிப் பேசியதைக் கேட்டதும் அனைவரும் எலி ஹெலிகாப்டர் ஓட்டுவதைப் பார்ப்பது போல அதிசயத்து நின்றனர். தனம்மாவின் வேறு பரிமாணங்கள் மின்ன ஆரம்பித்தது. அனைவர் மனதிலும் எண்ணக் குவியல்கள் இருக்கத்தான் செய்கின்றன. அதைக் கொத்திக் கிளற மனித கோழிகளுக்குத் தான் வாய்ப்பு இல்லை.

"எங்கம்மா சொல்வதிலும் நியாயம் இருக்கு. அடம்பிடிக்காம எங்களுடனே தங்கிடுங்க என்று தங்கமும் சொன்னாள்.

"சரி பக்கத்தில் எதற்கு இந்த குடிசையைக்  கட்ட சொன்னே என்று தனம்மா சரியான பாயிண்டை பிடித்தார்கள்.

"என் காலத்துக்குப் பிறகு நான் படித்த புத்தகங்களை எல்லாம் சின்னதா நூலகம் மாதிரி வைக்கலாம்னு சொன்னேன். அசோக் தான் நான் இப்பவே கட்றேன். நீங்க பார்த்து மனம் மகிழ்ச்சியாய் இருங்கள். இங்கு உங்கள் கண்கள் தேடிய உலகம் மக்களின் விடியலாய் இருக்கும் என்ற நினைவோடு இருப்பீங்கன்னு சொல்லிட்டு கட்டினான்" என்று நெகிழ்ச்சியாகச் சொன்னார் ரமா.  

"அம்மா உயிரற்ற எழுத்துகளுக்கு உணர்வுகளால் உயிர் கொடுப்பதைவிட, உயிரான அறிவு எங்களுக்கு வழிகாட்டுவது எவ்வளவு சிறப்பாக இருக்கும். நீங்கள் இந்த குடிலிலேயே தங்குங்கம்மா" என்று சற்று கெஞ்சலுடன் சொன்னாள் சங்கவி. 

"நீங்க சுதந்திரமா அந்த குடிசையிலே இருங்க. உங்களுக்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்கிறோம்" என்று மணியும் அவன் பங்குக்கு வாய்திறந்து சொன்னான்.

 

அடிப்படையில் மனிதர்கள் அனைவரும் அன்பானவர்கள் தான் பல உணர்வுகளின் கலவை சேரும்போது அன்பு வெளிப்படையாகக் கண்ணில் தெரிவதில்லை. பிறர் காட்டும் அன்பு சில நேரங்களில் நம்மை நாமாக வாழ விடுவதில்லை. பிறரின் முடிவுகளுக்கு நம்மை வாழவைக்கிறது. அதுபோலத்தான் ரமாவும் அந்த குடிசையில் தங்குவது என்று முடிவு செய்தாள்.

"நான் அன்புக்காக ஏங்குகிறவள். உங்க அன்பும் எனக்கு தேவைப்படுகிறது. நான் உங்களுடனேயே தங்கிக் கொள்கிறேன்" என்று ரமா முகத்தில் பொலிவுடன் சொன்னார்.

 

ரமாவின் வாழ்க்கை பயணம் வேறு ஒரு உலகில் தொடங்கியது போலப் புதிதாக மகிழ்வுடன் தொடங்கியது. கும்மட்டி அடுப்பு என்று சொல்லக்கூடிய அடுப்பில் அவளுக்குத் தேவையான உணவைத் தயார் செய்து கொண்டாள். என்ன பெரிய உணவு வெண்கல குண்டில் சிறிது சாப்பாட்டைப் பொங்க வைத்து உண்பாள். ரமாவின் ஆகச்சிறந்த உணவே இதுதான். ஊருக்குத் தகவல் சொல்லி ரமாவின் வக்கீல் வந்தார். அவர் வரும்போது சூட்கேஸ் நிறைய ரமா வாசித்த புத்தகங்களை எடுத்து வந்திருந்தார். அதில் தி.ஜா, ஜெயகாந்தன், அம்பை, கி.ரா.,கண்ணதாசன், பாரதிதாசன், பெரியார், மார்க்ஸ், லெனின் இப்படிப் பல எழுத்தாளர்களின் புத்தகங்களைப் பார்க்கும்போது மெலிதாக புன்னகைத்தார்.

"ஏன் சிரிக்கிறீங்க? என்று வக்கீல் புரியாமல் கேட்டார். "இவ்வளவு நாட்கள் இந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் உடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். இந்த கிராமத்திற்கு வந்த பிறகு இவர்களோடு வாழ்வது போன்ற உணர்வு இருக்குங்க சார்" என்று தன் அனுபவத்தைச் சொன்னார். நான் சொன்னது போல உயில் ரெடி பண்ணி விடுங்க அதை ரிஜிஸ்டர் பண்ணி என்னிடம் கொடுத்து விடுங்கள்" என்று சொன்னார் ரமா.சிறிது நேரம் பேசி விட்டுக் கிளம்பினார் வக்கீல்.

 

ரமாவின் குடிலுக்கு எதிரே மிகப்பெரிய இடம் இருந்தது. அதன் பிறகு ஓணான் கொடியால் வேலி போடப்பட்டது. மாலை நேரங்களில்  ஈசி சேர் போட்டு அங்கே அமர்ந்திருப்பார் வயல் வேலைகளை முடித்துவிட்டுப் போகும் பெண்கள் ஆரம்பத்தில் ரமாவை ஏதோ சந்திரமண்டலத்திலிருந்து வந்த பெண் போல அதிசயமாகப் பார்த்தனர்.

 

ரமாவே அவர்களை அழைத்துப் பேசுவார். பிறகு பெண்கள் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அவர்களின் குடும்ப கஷ்டங்களை எல்லாம் ரமாவிடம் சொல்ல ஆரம்பித்தார்கள். ரமாவும் அவர்களுக்கு எழுத்து கற்பித்து தன்னம்பிக்கை எண்ணங்களைத் தூண்டினார். ஒவ்வொரு மனிதனுக்கும் சுயம் என்ற ஒன்று ரொம்ப முக்கியம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சுடர் விளக்கைத் தூண்டும் போது அந்த தூண்டு குச்சி மீதும் விரல் மீதும் அனல் படத்தான் செய்யும் தூண்டுகோல் அதைப் பொறுத்துக் கொண்டால் தான் விளக்கு பிரகாசமாக எரியும். அது போலப் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட ஆண்கள் ரமாவிடம் சண்டைக்கு வந்தார்கள். அப்போதெல்லாம் அசோக் தான் அரணாக இருந்து ரமாவைப் பாதுகாத்தான். தங்கள் பெயரை எழுத  கற்றுக் கொண்ட பெண்கள் வேலி நாச்சியார் மாதிரி இடுப்பில் அரிவாளைச் சொருகிக் கொண்டு களையெடுப்பதற்குக் கம்பீரமாக நடந்தார்கள். அவர்கள் வீட்டு அடுக்களை சுவரெல்லாம் கரியால் இவர்கள் பெயர்கள் ஓவியமாக வரையப்பட்டது. பொருளாதார உதவி தேவைப்படும் பெண்களுக்கு இடது கைக்குத் தெரியாமல் உதவி செய்தார் ரமா. தனம்மா பாட்டியின் பாக்கு உரலும் சுண்ணாம்பால் பெயர் பொறிக்கப்பட்டு தனம்மாவின் கல்வெட்டானது.

 

பெண்களிடம் பேசப் பேச இப்படி ஒரு அறிவு உலகம் இருக்கா என்று வியந்தனர். உங்கள் உழைப்பு உங்களுக்கான தேவைகளுக்கு எல்லாம் பிறரிடம் கையேந்தக் கூடாது. கொஞ்சம் சேமிப்பு உங்களிடம் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார். ரமாவிற்கு அந்த கிராமம் மிகவும் பிடித்துவிட்டது. கிராம மக்கள் ரமாவிடம் மிகவும் அன்பாக இருந்தனர். 

 

காலநதி எந்த சலனமும் இல்லாமல் சென்றால் எப்படி? நதியில் ஒரு முதலை அடித்து வந்தது.

 

( சிறகுகள் படபடக்கும்)