Skip to main content

சாம்பவி சங்கர் எழுதும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தொடர்! ‘மாயப் புறா’ #24

Published on 06/05/2022 | Edited on 06/05/2022

 

maayapura part 24

 

மாயப் புறா - முந்தைய பகுதிகள்

 

கடற்கரை மணல் பரப்பு எண்ணிலடங்கா மணல் துகள்களைக் கொண்டுள்ளது. மணல் துகள்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வடிவங்களில் மனிதர்களின் எண்ணங்களைப்  போன்று காணப்படுகின்றன. கடல் அலைகளில் கால் நனைக்கும் போது பாதத்தில் இருக்கும் மண்ணை அடித்துச் செல்லும். பாதத்திற்கு  பிடிமானம் இல்லாமல்  நாம் விழுந்து விடுவது போல நிலை தடுமாறும். அடுத்த அலை வருவதற்குள் பாதத்தை மீண்டும் அந்த மணலில் அழுத்தி வைப்போம். மனித வாழ்க்கையும் அப்படித்தான் ஒரு துன்பம் வரும்போது துவளாமல் அந்த இடத்தில் அமைதியாக வலிமையாக செயல்பட வேண்டும். மணல் பரப்பில் நடக்கும்போது கால்களில் மணல் துகள்கள் ஒட்டிக் கொள்ளும். ஈரம் காயக்காய கால்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் அந்த மணல் துகள்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்துவிடும்.

 

மனித உறவுகளும் அப்படித்தான் ஏதோ ஒரு தேவை என்னும் ஈரம் இருந்தால் தான் நம்மிடம் ஒட்டிக்கொள்வார்கள். அந்த தேவை முடிந்துவிட்டதும் மணல் துகள்கள் கொட்டுவது போல இவர்களும் நம்மிடமிருந்து விலகி கொண்டே இருப்பார்கள். இது மனித இனத்தின் நிதர்சனமான உண்மை.

 

கடற்கரையில் உப்புக் காற்று தான் வீசும் அந்த உப்பானது நம் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் நம் முகத்தில் நாம் மட்டுமே உணரக்கூடிய உப்பு என்ற அந்த பிசுபிசு உணர்வு இருந்து கொண்டிருக்கும். நாமே முகத்தை கழுவினால் தான் நம்மை விட்டுப் போகும். இப்படியும் சில அன்பானவர்கள் இருக்கிறார்கள் நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் உப்புக்காற்று மாதிரி நம்முடனே ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.

 

தன் அண்ணி நாகம்மாவை,  தங்கம் உதவிக்குக்  கூப்பிட்டார். நாகம்மா புவனாவை அந்த வீட்டில் திருமணம் செய்து கொடுத்து இருந்தால் தங்கத்திற்கு உதவிக்கு வந்திருப்பார். தங்கத்தின் தேவை நாகம்மாவிற்கு இல்லை என்பதால் மணல் துகள் மாதிரி உதிர்ந்து விட்டார். 

 

அந்த அவசர சிகிச்சை  பிரிவு அறைக்கு  எதிரில் நால்வரும் மருத்துவர் வந்து சொல்லப்போகும் பதிலுக்காக உறைந்து போய் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்திற்கு வயல்வெளியில் வேலை செய்த அழுக்கான வேட்டியுடன் பெருமாள் பதற்றத்துடன் வந்தார். கூடவே அலமேலுவும் முந்தானை ஓரம் கிழிந்த கண்டாங்கி சேலை உடனும் கோடாலி முடிச்சு போட்ட கொண்டையுடனும் வந்தார். முகத்தில் வழிந்த வியர்வைத் துளிகள் அவர்களின் உள்ளத்தின் படபடப்பை சொட்டு சொட்டாக வெளியேற்றியது. முந்தானையால் வியர்வைத் துளிகளை துடைத்துக் கொண்டே தங்கத்தின் அருகே வந்தார் அலமேலு.

 

இவர்களைப் பார்த்ததும் தங்கமும்  மணியும் ஆச்சரியப்பட்டார்கள். இவர்கள் எப்படி இங்கே வந்தனர் என்று நினைத்தனர். பெருமாளு அலமேலு அன்பு உப்புக்காற்று போன்றது. அந்த அன்பை வெகுவிரைவில் தங்கம் உணரத்தான் போகிறார். 

"அண்ணி.. என்ன ஆச்சு கேள்விப்பட்டதும் என் ஈரக் குலையே நடுங்கிடுச்சி மல்லிகா எப்படி இருக்கா? கருவுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே"? என்று தங்கத்தை கேள்வி கேட்டு பாடாய் படுத்திக் கொண்டிருந்தார்.

"டாக்டர் வந்தா தான் தெரியும்" என்று வெடுக்கென்று சொல்லிவிட்டு" நீங்க எப்படி வந்தீங்க யார் செய்தி சொன்னது" என்று குழப்பமாக கேட்டார்   தங்கம். 

"காசி செட்டியார் தான் நம்ம ஊருக்கு வரவங்ககிட்ட செய்தி சொல்லி அனுப்பினார்" என்று பெருமாள் அமைதியாக சொன்னார்.

"அடியே.. கூறு கெட்டவளே புள்ளத்தாச்சி இருக்கிற வீட்டில பார்த்து கவனமாக வேலை செய்ய வேண்டாமா? இப்ப பாரு பழி  உன் மேல விழுது". என்று மகளையே வெள்ளந்தியாக திட்டினாள் அலமேலு.

"அம்மா.. நான் கவனமா தான் இருந்தேன் எப்படியோ அக்கா விழுந்துட்டாங்க" என்று அலுப்புடன் சொன்னாள் சங்கவி.  இவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே அந்த அவசர சிகிச்சைப் பிரிவின் கதவைத் திறந்துகொண்டு  ஒரு பெண் டாக்டர் வெளியே வந்தார். டாக்டரைப்  பார்த்ததும் மண்ணெண்ணெய்  வாங்குவதற்கு நிற்கும் கூட்டம் போல  அனைவரும் அவரை சுற்றி  நின்றுகொண்டே 

"மல்லிகாவுக்கு எப்படி இருக்குங்க டாக்டர்"? என்று ஒரே குரலில் கேட்டு குடும்ப ஒற்றுமையை நிலைநாட்டினார்கள். 

 

நான்  எவ்வளவோ முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன். அபார்ஷன் பண்ணாதான் பெரிய உயிரை காப்பாற்ற முடியும் என நினைக்கிறேன்" என்று டாக்டர் சொன்னதும், "நீங்களே இப்படி சொன்னா எப்படி டாக்டர்  எப்படியாவது கருவை காப்பாற்றிக் கொடுங்கள்" என்று கெஞ்சினான் மணி."நாங்களும் மனுஷங்கதானே எங்களால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்தோம் முடியலைன்னும் போது என்ன செய்யறது" என்று சொல்லிக் கொண்டே நடக்க ஆரம்பித்தார். சங்கவி  டாக்டர் பின்னாடியே ஓடி போய்  கரு கலையாமல் இருக்க என்ன பண்றதுன்னு சொல்லுங்க மேடம் உங்களைத்தான் நம்பி இருக்கோம்" என்று டாக்டரின் காலில் விழுந்தாள் சங்கவி" டாக்டருக்கு என்ன செய்யறதுன்னு புரியலை "முதலில் எழுந்திரு" என்று தவிப்புடன் கூறினார். "நீங்க வசதியானவர்களாக இருந்தால் ஒரு வழி இருக்கு சென்னையில் பெரிய டாக்டர் இருக்கிறார். அவருக்கு ஒரு லெட்டர் தரேன் அவரிடம் காட்டி பாருங்க. ஆனால் எந்த அளவுக்கு சரி வரும்னு தெரியல" என்று தயக்கமாக கூறினார்.

"டாக்டர் நீங்க எந்த டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போகச் சொன்னாலும் அழைச்சிட்டு போறோம்"என்று கெஞ்சினாள் சங்கவி.

 

சங்கவி டாக்டர் காலில் விழுந்ததை பார்த்ததும் மணியும் தங்கமும் அதிர்ச்சி அடைந்தனர். நமக்காக சங்கவி எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்று மணிக்கும் தங்கத்திற்கும் சங்கவி மீது லேசாக அன்பு  அரும்ப ஆரம்பித்தது. அது மலராக மலருமா, இல்லை கருகி விடுமா என்பது காலத்தின் கையில் உள்ளது. சங்கவி டாக்டரிடம் பேசிக் கொண்டிருப்பதை பார்த்ததும் மீண்டும் அனைவரும் டாக்டர் அருகில் வந்தனர்.

" சென்னை எல்லாம் போய் மருத்துவம் பாக்குறதுன்னா நிறைய பணம் செலவாகுமே. உங்களால செலவு பண்ண முடியுமா? அந்த அளவு பணம் இருக்கா என்று டாக்டர் கேட்டதும் தங்கமும் மணியும் அமைதியாக இருந்தனர். அசோக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தவித்தான்.

"பணத்தை பற்றி பாக்காதீங்க டாக்டர் என் உயிரைக் கொடுத்தாவது நான் பணத்தை ரெடி பண்றேன்"என்று ஏதோ நேற்றுதான் வீட்டில் பணம் காய்ச்சி மரத்தை நட்டு வைத்தது  மாதிரி பேசினாள் சங்கவி.

"எதுவா இருந்தாலும் சீக்கிரம் முடிவு பண்ணி சொல்லுங்க நேரம் ஆக ஆக பெரிய உயிருக்கு ஆபத்தாக முடியும்" என்று பயமுறுத்தி விட்டு  டாக்டர் அங்கிருந்து சென்றார். "நம்மகிட்ட அவ்வளவு வசதி இல்ல பேசாம கருவை கலைத்துவிடலாம் என்று தங்கம் சொன்னதும் மணியின் முகம் வாடி விட்டது .

"அத்தை எப்படியாவது பட்டணத்துக்கு அழைச்சிட்டு போய் கருவை காப்பாற்றிவிடலாம்" என்று சங்கவி சொன்னதும், அலமேலு  சங்கவி கையைப்   பிடித்து தனியே அழைத்துச் சென்றாள். 

"விளங்காதவளே  உன் மாமியாரே தயங்கறாங்க  நீ என்னடான்னா உயிரைக் கொடுக்கறேன்னு வாயாலேயே வடை சுடுற உன் மேல பழி வரும்னு பயப்படாத, அந்த பொண்ணு தான் கவனமாக நடந்து வந்து இருக்கணும். 

"ஏழு ஜென்மமாய் ஒரே ரத்தத்தில் ஊறி ஒட்டிப்பிறந்த  இரட்டையும் ஒன்னோடு ஒன்னா மண்ணோடு மண்ணா வளர்ந்தாலும் பங்காளி சண்டையில பல்ல பேத்துகிட்டு நிப்பாங்க. நீ என்னடான்னா ஒரே வீட்டில் வாழ்க்கைப் பட்டத்துக்காக மல்லிகா குழந்தையை காப்பாற்ற இந்த பாடுபடற" என்று கோபப்பட்டார் அலமேலு.

"அம்மா ஒரே வீட்டில் வாழறத்துக்காக இல்ல அந்த குழந்தையை எத்தனை கனவுடன் மல்லிகா சுமந்து கொண்டிருக்கிறார். அந்த குழந்தை இல்லன்னா அவள் மனம் என்ன வேதனைப்படும் கருவுல மூன்று மாதம் சுமந்தாலும் 30  வருஷம் வளர்த்தாலும் அம்மாவுக்கு அது குழந்தை தானே அம்மா. எப்பவும் மனசுல அந்த வலி இருந்துகொண்டே இருக்கும் மா. இது எல்லாத்துக்கும் மேல என் மனசாட்சி என்னை கொல்லுமே முகம் தெரியாத அந்த குழந்தை  என்னைப்  பார்த்து " சித்தி என்னை ஏன் கொலை பண்ணீங்க அப்படின்னு கேட்கற சத்தம்  என்  மனசுகுள்ள  கேட்குமே அதுக்கு நான் என்ன பதில் சொல்வது?" என்று கண் கலங்கினாள் சங்கவி.

 

சங்கவியின் உணர்வுகளை அசோக் புரிந்து கொண்டான். "சரி சங்கவி அண்ணியை சென்னைக்கு அழைத்து போகலாம். காரில் போனால் அதிக செலவாகும். மருத்துவமனை ஆம்புலன்சில் அழைச்சிட்டு  போகலாம்" என கூறி அசோக் மருத்துவமனை ஊழியர்களிடம் பேச சென்று விட்டான்.

 

கோபப்பட்ட  அம்மாவை சமாதானப்படுத்தி உண்மையை புரிய வைத்தாள் சங்கவி. மணிக்கும் தங்கத்திற்கும் மனசும் உடம்பும் ரொம்ப சோர்ந்து போக ஒரு மூலையில் அமர்ந்து கொண்டனர். அசோக்கும் ஆம்புலன்ஸ் தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தான். 

 

பணத்திற்கு என்ன செய்வது என அடுத்த பிரச்சனைக்கு சென்றனர். விவசாய குடும்பத்தில் பிறந்த பெண்கள் தான்  வங்கியின் சேப்டி லாக்கர் போன்றவர்கள் அவசரத்திற்கு தேவைப்படும்போது அடகு வைப்பதற்கு அந்த நகைகள்தான் பயன்படும். "அம்மா இங்கேயே இருங்க இதோ வந்துடுறேன்" என்று சொல்லிவிட்டு அசோக்கை அழைத்துக்கொண்டு ஆஸ்பிட்டல் தாண்டி செங்கல்பட்டு  நகருக்குள் வந்தார்கள்.  சங்கவி போட்டிருந்த தங்ககம்மலையும், கழுத்தில் போட்டிருந்த செயினையும் கழற்றி நகை கடையில் விற்றுவிட்டு ,கவரிங் வாங்கிப் போட்டுக் கொண்டாள்.

"சங்கவி என்னை உனக்கு ரொம்ப பிடிக்குமா? என்று கேட்டான் அசோக்.

"ஏன் மாமா திடீர்னு இந்த கேள்வி? என்று குழந்தையாக கேட்டாள் சங்கவி.

" என்னை உனக்கு ரொம்ப பிடிச்சதாலதான்   என் குடும்பத்தாரையும் உனக்கு பிடிக்குது. அதனால் தானே நீ இவ்வளவு வேதனையை அனுபவிக்கிறாய்" என்று கம்மிய குரலில் சொன்னான் அசோக்.

"மாமா நீங்க என் கழுத்துல தாலி கட்டும் போது என்ன நடக்குது என்று தெரியாமல் குழம்பிப் போய் இருந்தேன். இப்ப உங்க  மேல ரொம்ப அன்பா இருக்கேன். அதனால்தான் நீங்க நேசிக்கிற உங்க குடும்பத்தையும் என்னால  நேசிக்க முடியுது" என்று  சங்கவி  சொல்லும்போது இருவரின் கண்களும் கண்ணீருடன் பேசின.

 

ஆஸ்பிட்டல் வந்தவர்கள் மருத்துவரிடம் ரிப்போர்ட் வாங்கிக் கொண்டார்கள். மல்லிகாவை டிஸ்சார்ஜ் செய்து  சென்னை அழைத்துச் செல்ல தயாரானார்கள்.

"அண்ணி நான் வேணும்னா வீட்டை பார்த்துக்கறேன். நீங்க சென்னை போயிட்டு வாங்க" என்று அலமேலு சொன்னார். அலமேலு பொறுப்பாக வீட்டைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தங்கத்திற்கு வந்ததும்  நிம்மதியாக இருந்தார்.

 

சென்னையில் போரூர் தாண்டி இருக்கக்கூடிய அந்த மகளிருக்கான மருத்துவமனையில் கூட்டம் அலைமோதியது மல்லிகாவை ஆம்புலன்சில் அழைத்து வந்ததால் நேரடியாக அட்மிஷன் போட்டுக்கொண்டார்கள் நடந்த விஷயங்களை கேட்டு அறிந்தனர். மல்லிகாவையும் சோதித்தனர். அந்த ஆஸ்பிட்டலின்  தலைமை மருத்துவர்,குடும்பத்தினரை அழைத்து மல்லிகாவின் உடல்நிலை குறித்து இனி வரும் காலங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும்.  எவ்வளவு செலவாகும் என்று விளக்கமாக சொல்லிக்கொண்டிருந்தார். அவர் சொல்லச் சொல்ல அனைவரின் முகங்களிலும் அதிர்ச்சி ரேகைகள் சுனாமி போல அலை அடித்தது.

 

(சிறகுகள் படபடக்கும்)