lady-detective-yasmin-case-explanation-15

விசித்திரமான ஒரு வழக்கு குறித்து நம்மோடு துப்பறிவாளர் யாஸ்மின் பகிர்ந்துகொள்கிறார்

Advertisment

ஒரு பெண் எங்களிடம் வந்து கேஸ் கொடுத்தார். அவருடைய குடும்பம் நல்ல வசதி படைத்தது. அவருடைய கணவரின் தொழிலை மகன் கவனித்து வந்தான். அவருடைய மகன் மிகவும் அழகாக இருப்பான். அவன் தனக்கு சுமாரான தோற்றம் கொண்ட பெண்ணே வேண்டும் என்று அடம்பிடித்ததால் அப்படிப்பட்ட ஒரு பெண்ணையே அவனுக்கு பார்த்தனர். அந்தப் பெண்ணுக்கு வசதி, படிப்பு என்று அனைத்தும் குறைவுதான். ஆனால் நிச்சயம் செய்யும் சமயத்தில் பெண் வீட்டார் இந்தத் திருமணம் வேண்டாம் என்று கூறினர். அவர்களுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

Advertisment

அதற்கு முன் தங்களுடைய மகனுக்கு உயர்ந்த செல்வாக்கு பெற்ற குடும்பத்தில் திருமணம் செய்து வைத்து, அது சரியாக வராததால் மீண்டும் அதுபோன்று திருமணம் செய்துவைக்க அவருடைய குடும்பத்தினர் அஞ்சினர். எதனால் பெண்ணின் குடும்பத்தினர் திருமணம் வேண்டாம் என்று கூறினர் என்று பையனின் குடும்பத்தினர் தெரிந்துகொள்ள விரும்பினர். பெண்ணின் குடும்பம் மிகவும் சாதாரணமான ஒரு குடும்பம். அவருடைய பெற்றோர் கூலி வேலை செய்து வந்தனர். பெண்ணுக்கு எக்ஸ்போர்ட் கம்பெனியில் மாதம் 7 ஆயிரம் ரூபாய் சம்பளம். ஆனால் அவர் நல்ல பெண்ணாக இருந்தார். இவர்கள் ஏன் இந்த சம்பந்தத்தை நிராகரிக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினோம்.

அவருடைய கம்பெனிக்கு இயல்பாகச் செல்வது போல் சென்று அந்தப் பெண்ணிடம் பேசினேன். தனக்கு வந்த வரனில் தனக்கு விருப்பமில்லை என்று அவர் கூறினார். "அந்தப் பையனுக்கு இது இரண்டாவது திருமணம். அதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் பணக்காரப் பெண் தங்களுக்கு ஒத்துவராததால், என்னைப் போன்ற சாதாரண பெண்ணைத் திருமணம் செய்து வைத்தால் அனைத்திலும் அடங்கி இருப்பேன் என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட திருமணம் எனக்கு வேண்டாம். என்னை விரும்பி, புரிந்துகொண்டு செய்யப்படும் திருமணமே எனக்கு வேண்டும்" என்று அந்தப் பெண் கூறினார். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

இந்த விஷயங்களை பையனின் குடும்பத்தினரிடம் சொன்னேன். "பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பது எனக்குத் தெரியும். வசதியில்லாதவர்கள் எனக்கு அடங்கிப் போவார்கள் என்று நினைத்தது என்னுடைய தவறுதான். ஆனால் அவரை அடக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நல்ல வாழ்க்கைத் துணை வேண்டும் என்பதுதான் என்னுடைய தேவை" என்று அந்தப் பையன் கூறினார். அவர் மீதும் எனக்கு மரியாதையே ஏற்பட்டது. இரண்டு பக்கமுமே நியாயம் இருப்பதுபோல் தோன்றியது. மீண்டும் அந்தப் பெண்ணிடம் நான் பேசினேன். அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்று இப்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.