Skip to main content

வெளிநாட்டு மாப்பிள்ளை; சீரழிந்த புதுப்பெண்ணின் வாழ்க்கை - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 14

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

lady-detective-yasmin-case-explanation-14

 

வெளிநாட்டு மாப்பிள்ளையால் ஏமாற்றப்பட்ட பெண் வழக்கு குறித்து துப்பறிவாளர் யாஸ்மின் விவரிக்கிறார்

 

சமீப காலங்களில் வெளிநாடு சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகம் வருகின்றன. அனைத்து விதமான சடங்கு சம்பிரதாயங்களையும் செய்து, வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு இங்கிருக்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். சில காலம் கழித்து பெண்ணையும் அங்கு அழைத்துச் செல்வதாக பையன் தெரிவித்தான். ஆனால், நீண்ட காலமாகியும் அந்தப் பெண்ணை அவன் அழைக்கவே இல்லை. ஒரு வருட காலம் கடந்ததால் அந்தப் பெண் நம்மிடம் வந்தார். தான் சார்ந்த வேலைகள் அந்த நாட்டில் நிறைய இருந்தாலும், கணவர் இன்னும் தன்னை அழைக்கவில்லை என்றார். 

 

ஆனால் போனில் அந்தப் பையன் அவளுடன் தினமும் பேசி வந்தார். அவ்வப்போது பணமும் அனுப்பி வந்தார். ஆனால் வெளிநாட்டுக்கு மட்டும் அழைத்துச் செல்லவில்லை. அந்தப் பையன் குறித்து அந்த நாட்டில் விசாரித்தபோது தான் தெரிந்தது, அவனுக்கு ஏற்கனவே அங்கு திருமணமாகி குழந்தையும் இருந்த விஷயம். அதை மறைத்து தான் இங்கு அவன் பெற்றோர் மீதுள்ள பயத்தால் திருமணம் செய்துகொண்டான். பெண் வீட்டார் தரப்பில் சரியாக விசாரிக்காமல் அவசர அவசரமாக கல்யாணத்தை நடத்தியதன் விளைவுதான் இது. இதுபோல் இப்போது நிறைய பேர் சுற்றி வருகின்றனர். அவன் செய்தது நிச்சயம் துரோகம் தான். 

 

இப்படியான வழக்குகள் இப்போது நிறைய வருகின்றன. இதேபோல் இந்தியாவில் இருக்கும் ஒரு ஆணுக்கு வெளிநாட்டில் இருக்கும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் இருவருக்கும் ஒத்துவராமல் விவாகரத்து வரை சென்றது. அந்தப் பெண்ணை இந்தியா அழைத்து வர அவன் விரும்பவில்லை. அவன் வெளிநாடு சென்று செட்டிலாக வேண்டும் என்றுதான் நினைத்தான். அவன் மாடர்ன் டைப்பாக இருந்தான். பெண்ணின் தரப்பில் இந்திய கலாச்சாரத்தை அதிகம் விரும்பினர். அதனால் இருவருக்கும் ஒத்துவரவில்லை. 

 

வெளிநாட்டு மாப்பிள்ளை, பெண் என்று செல்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். முழுமையாக விசாரிக்க வேண்டும். ஊருக்காக திருமணம் செய்து கொண்டு இன்னொருவரின் வாழ்க்கையை சீரழிப்பது தவறு. இப்படிப்பட்ட ஆட்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத்தர வேண்டும். அனுசரித்து வாழுங்கள் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் அட்வைஸ் செய்யக்கூடாது.

 


 

 

Next Story

70 நாட்களுக்கு மேலாகியும் கிடைக்காத விடை; தொடர் விசாரணையில் சிபிசிஐடி

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
No response after more than 70 days; CBCID in further investigation

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் 04.05.2024 அன்று சடலமாக மீட்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டு பல நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜெயக்குமாரின் மனைவி, மகன்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் நடைபெற்று 70 நாட்களாகியும் தற்போது வரை சம்பவத்தின் பின்னணி குறித்து எந்த துப்பும் கிடைக்காததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று மதியம் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்ற சிபிசிஐடி போலீசார் இரவு 9 மணி வரை குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

கொலையாளியைத் தேடிச் சென்ற மோப்ப நாய். நொடிப் பொழுதில் நடந்த திடீர் திருப்பம்!

Published on 19/07/2024 | Edited on 19/07/2024
The sniffer dog that went looking for the culprit in karnataka

கர்நாடகா மாநிலம், சன்னகிரி தாலுகா, சந்தேபென்னூர் பகுதியில் உள்ள சாலையோர பெட்ரோல் பங்க் அருகே ஆண் சடலம் ஒன்று கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளது. இதனைக் கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இது குறித்து உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த எஸ்.பி உமா பிரசாந்த், பிற காவல்துறையினருடன், ‘துங்கா 2’ என்ற மோப்ப நாய் மற்றும் அதை கையாளுபவர் ஆகியரோடு சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு சென்ற போது, ஆண் சடலத்தின் சட்டையை மோப்பமிட்ட துங்கா 2 என்ற மோப்ப நாய், கொலையாளி இருக்கும் இடத்தை நோக்கி ஓடியது. துங்கா 2 மற்றும் அதைக் கையாளுபவர், சுமார் 8 கி.மீ தூரம் ஓடிய பின்பு, பெரிய சத்தம் கேட்ட ஒரு வீட்டில் நாய் நின்றது. இதன் மூலம், அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், ஒரு நபர் ஒரு பெண்ணை இரக்கமின்றி அடித்து கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பெண்ணைக் கொலை செய்ய முயன்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், போலீசார் தேடி வந்த கொலையாளி அந்த நபர் தான் என்றும் அவரது பெயர் ரங்கசாமி என்றும் தெரியவந்தது. மேலும், கொலை செய்யப்பட்ட சந்தேபென்னூரைச் சேர்ந்த சந்தோஷும், ரங்கசாமியின் மனைவியும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் ரங்கசாமிக்கு தெரியவர, ஆத்திரமடைந்து சந்தோஷை அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு, தனது மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். 

அதன்படி, வீட்டிற்கு வந்த ரங்கசாமி, தனது மனைவியை அடித்து கொலை செய்யும் நேரத்தில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது தெரியவந்தது. கொலையாளியைக் கண்டுபிடிக்க மழையில் 8 கி.மீ ஓடி நொடி பொழுதில் பெண் ஒருவரின் உயிரைக் காப்பாற்றிய துங்கா 2 என்ற மோப்ப நாயை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.