Skip to main content

இல்லற வாழ்வில் நோயும் துரோகமும்; இளம்பெண்ணின் கண்ணீர் கதை - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 12

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

lady-detective-yasmin-case-explanation-12

 

எச்ஐவி  தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் குறித்த வழக்கு ஒன்றை பற்றிய தகவல்களை நம்மோடு துப்பறிவாளர் யாஸ்மின் பகிர்ந்து கொள்கிறார்.

 

அந்தப் பெண்ணுக்கு எச்ஐவி நோய் இருந்தது. தனக்கு ஏற்கனவே திருமணமானபோது கணவருக்கு எச்ஐவி இருந்தது குறித்து தனக்கு தெரிவிக்காமல் திருமணம் செய்து வைத்ததால் தனக்கும் அந்த நோய் பரவியதாக அவர் தெரிவித்தார். தற்போது கணவர் உயிருடன் இல்லை. அதன் பிறகு அந்தப் பெண் எச்ஐவி நோய் இருக்கும் இன்னொருவரைத் திருமணம் செய்துகொண்டார். ஆனால் பாசமாக இருக்கும் கணவர் தன்னிடம் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில்லை என்று அவர் கூறினார். 

 

வீட்டில் வயாகரா மாத்திரைகள், காண்டம் ஆகியவை இருந்ததை இவர் பார்த்திருக்கிறார். ஆனால் தன்னுடன் சந்தோசமாக இல்லாமல் இதை வைத்து என்ன செய்கிறார் என்று சந்தேகித்து நம்மிடம் வந்தார். அவருடைய கணவரை நாங்கள் பின்தொடர ஆரம்பித்தோம். வேலை தொடர்பாக அவர் எப்போதும் பிசியாகவே இருந்தார். அந்தப் பெண்ணுடைய மாமியாரும் நாத்தனாரும் அடிக்கடி மருந்தகத்துக்கு சென்று ஏதோ வாங்கி வருவதை நாங்கள் கவனித்தோம். காண்டம் மற்றும் வயாகரா மாத்திரைகளை அவர்கள் தான் வாங்கிச் செல்கிறார்கள் என்பது எங்கள் விசாரணையில் தெரிந்தது. 

 

ஆனால் இதை எதற்காக அவர்கள் செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. கணவருக்கு நிறைய சொத்துகள் இருந்தன. விருப்பமில்லாமல் தான் அவருடைய தாய் அவருக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். கணவன் மனைவிக்குள் பிரச்சனையை ஏற்படுத்தி தன்னுடைய மகளுக்கு சொத்துக்களை கொடுப்பதற்காகத் தான் தாய் அனைத்தையும் செய்தார் என்பது அதன் பிறகு தெரிந்தது. கணவரிடம் உட்கார்ந்து அனைத்தையும் பொறுமையாகப் பேசும்படி நாங்கள் அந்தப் பெண்ணுக்கு அறிவுரை வழங்கினோம். அதன் பிறகு அந்த பெண்ணின் வாழ்க்கையை அவரே பார்த்துக் கொண்டார்.

 

 

Next Story

கெளதமியின் நில மோசடி வழக்கு; அழகப்பன் மீது குண்டாஸ்

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
 Kundas on Alagappan for Gauthami's land fraud case

நடிகை கௌதமி பாஜகவில் இணைந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் தனது ரூ. 25 கோடி மதிப்பிலான சொத்துகளை பாஜகவைச் சேர்ந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அபகரித்துவிட்டதாக மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், “நான் திரைத்துறையில் சம்பாதித்த பணத்தின் மூலம் சில இடங்களில் நிலம் வாங்கினேன். கடந்த 2004 ஆம் ஆண்டு நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோது, எனது மகளின் பராமரிப்பு செலவுக்காகவும், எனது மருத்துவச் செலவுக்காகவும் அந்த இடங்களை விற்க முடிவு செய்தேன். அதற்கு பாஜகவைச் சேர்ந்த கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அழகப்பன் என்பவர் உதவி செய்வதாக கூறினார். அதனால் எனது சொத்துகளை விற்கும் உரிமையை அவருக்கு கொடுத்தேன். அதற்காக என்னிடம் பல பத்திரங்களில் கையெழுத்து வாங்கினார். ஆனால் அதன் மூலம் போலி பத்திரங்களைத் தயார் செய்து, அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது சொத்துகளை அபகரித்துவிட்டனர். இது குறித்துக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனிடையே, நடிகை கெளதமி பா.ஜ.க.வில் இருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். 

இதையடுத்து கௌதமி கொடுத்த புகாரின் அடிப்படையில், பாஜக பிரமுகர் அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, சதீஷ்குமார் ஆகிய 5 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல நாட்கள் தலைமறைவாக இருந்து வந்ததால், மூன்றுக்கும் மேற்பட்ட தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். மேலும் அவர்களின் இடங்களிலும் போலீஸார் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்கள் மற்றும் பணத்தை மீட்டனர். பின்பு லுக்கவுட் நோட்டீஸும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன் ஜாமீன் கோரிய நிலையில், அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு தனிப்படை போலீஸார், கேரளா திருச்சூருக்கு சென்று அழகப்பன், அவரது மனைவி நாச்சாள் அழகப்பன், மகன் சிவா, மருமகள் ஆர்த்தி, கார் ஓட்டுநர் சதீஸ்குமார் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்திருந்தனர். இதனையடுத்து, அழகப்பனை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க போலீசாருக்கு எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

இந்த நிலையில், கெளதமியிடம் மோசடி செய்த அழகப்பனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், சென்னையில் மட்டும் கடந்த 7 நாட்களில் அழகப்பன் மற்றும் வெவ்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என மொத்தம் 19 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. 

Next Story

வேங்கைவயல் வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி மாற்றம்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Change of investigating officer investigating VenkgaiVayal case

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் இன்று வரை 394 வது நாளாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். 2 பேரிடமும் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. அடுத்தகட்டமாக 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த டிஎஸ்பி பால்பாண்டி தலைமையில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் மூலம் இந்த விவகாரத்தில் 221 நபர்களிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் வேங்கைவயல் வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரி மாற்றப்பட்டுள்ளார். அதன்படி பால்பாண்டி மாற்றப்பட்டு டி.எஸ்.பி. கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளார்.