Skip to main content

மருமகளை கோவிலுக்கு அனுப்பும் மாமியார்; வீட்டுக்கு வரும் விருந்தாளி - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 07

Published on 29/06/2023 | Edited on 29/06/2023

 

 Lady Detective Yasmin  Case Explanation  07

 

திருமணம் தாண்டிய உறவு குறித்த ஒரு வழக்கு பற்றி துப்பறிவாளர் யாஸ்மின் நம்மிடம் விவரிக்கிறார்.

 

திருமணம் தாண்டிய உறவுகள் இப்போது சட்டப்பூர்வமாக மாறியதால் அவற்றைக் கள்ள உறவு என்றோ கள்ளத் தொடர்பு என்றோ நாம் கூற முடியாது. ஆனாலும் அவ்வாறான உறவுகளால் ஏற்படுகிற உளவியல் ரீதியான மன நெருக்கடிகள், உறவுகளுக்குள் ஏற்படுகிற விலகல்கள் இருக்கத்தான் செய்கிறது.  ஒரு பெண் எங்களிடம் கேஸ் கொடுக்க வந்தார். பல எதிர்ப்புகளைத் தாண்டி நடந்த காதல் திருமணம் அவருடையது. அவருக்கு மாமனார் இல்லை, மாமியார் இருக்கிறார். 

 

ஏதாவது ஒரு காரணம் சொல்லி அந்த மாமியார் இவரை அடிக்கடி வெளியே அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தார். வெளியே போக மறுத்ததால் உங்களுக்காக கோவிலுக்கு வேண்டுதல் வைத்திருக்கிறேன் என்று கூறி அடிக்கடி பல கோவில்களுக்கு அனுப்பினார். ஏன் அடிக்கடி வெளியே அனுப்புகிறார் என்றும் அதன் காரணத்தை கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் அந்தப் பெண் கேட்டார். அந்த வழக்கை நாங்கள் விசாரிக்க ஆரம்பித்தோம்.

 

தொடர்ந்து ஒருவர் அவர்களுடைய வீட்டுக்கு வருவதை அறிந்தோம். இந்தப் பெண் வெளியே செல்லும்போது மட்டும் அவர் வீட்டுக்கு வந்தார். மகனையும் மருமகளையும் தனிக்குடித்தனம் செல்லுமாறு பலமுறை மாமியார் அறிவுறுத்தியுள்ளார். 50 வயதைக் கடந்தவர் அவர். வீட்டுக்கு வருபவருக்கும் அவருக்கும் திருமணத்தை மீறிய உறவும் அதன் வழியாக ஒரு தொடர்பும் இருந்தது எங்களுக்குத் தெரிந்தது. ரிப்போர்ட் கொடுத்தோம். அனைவருக்கும் அதிர்ச்சி. 10 நாட்களிலேயே இதை நாங்கள் கண்டுபிடித்தோம்.

 

அந்த வயதான பெண்ணுக்கு நிச்சயமாக ஒரு துணை தேவைப்பட்டது. அதை அவரது மகன் மற்றும் மருமகள்களுக்கு சொல்லி புரிய வைத்தோம். சில காலத்தில் தப்பாகத் தெரியும் விஷயங்கள் அதன் பிறகு சரியாகத் தெரியும். சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு துணை தேவை என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆனால் அது எந்த வகையிலான உறவாக இருக்க வேண்டும் என்பதை அவரவர் தான் முடிவு செய்ய வேண்டும்.