Skip to main content

ஆபத்தான ஆன்லைன் உறவு; விவகாரமான வீடியோ கால் - டிடெக்டிவ் யாஸ்மின் புலனாய்வு: 04

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Lady Detective Yasmin  Case Explanation  04

 

தான் சந்தித்த வித்தியாசமான வழக்குகள் குறித்து நம்மோடு துப்பறிவாளர் யாஸ்மின் பகிர்ந்து கொள்கிறார். வீடியோ கால்கள் மூலம் பெண்களை சிக்க வைக்கிற ஒரு ஆணிடமிருந்து ஒரு பெண்ணை மீட்டு எடுத்தது பற்றி கூறுகிறார்.

 

பல க்ரைம் வழக்குகளையும் நாங்கள் விசாரித்துள்ளோம். வயதான ஒரு அம்மா அழுதுகொண்டே என்னிடம் கேஸ் கொடுக்க வந்தார். கையில் நிறைய நகைகள் கொண்டு வந்திருந்தார். என் பெண்ணை ஒரு பையனிடமிருந்து காப்பாற்றுங்கள் என்றார். 32 வயதான தன்னுடைய பெண் ஐந்து வருடங்களாக வேறு சாதியைச் சேர்ந்த ஒரு பையனைக் காதலித்து வருகிறார் என்றும் எவ்வளவு சொன்னாலும் கேட்கவில்லை என்றும் கூறினார். தன்னுடைய மூத்த பெண் காதல் திருமணம் செய்து கொண்டவர் என்றும் அதனால் குடும்பத்தில் அவளை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

 

அதன் பிறகு இளைய மகளின் காதலனிடம் தான் பேசிப் பார்த்த பிறகு அவன் நல்ல பையன் என்பதை அறிந்துகொண்டு திருமணத்துக்கு சம்மதித்ததாகக் கூறினார். ஒருநாள் தன்னுடைய பெண்ணின் ரூமுக்கு சென்றபோது ஸ்கைப் காலில் நிர்வாணமாக அந்தப் பையனோடு பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார். கல்யாணம் பண்ணிக்க போகிறவன் எதற்கு வீடியோ கால் பேச வேண்டும் என சந்தேகப்பட்டு அவன் நல்லவனா இருப்பானா என்பதை தெரிந்து கொள்ள விசாரிக்க சொன்னார். அவன் வெளிநாட்டில் வேலை செய்து வந்தான். எங்களுடைய டீமோடு வெளிநாடு சென்றோம். விசாரிக்கத் தொடங்கினோம். அவன் வேலை முடிந்த பிறகு நான்கு வீடுகளுக்கு அவன் அடிக்கடி சென்றான். 

 

அந்த வீடுகளை அவன் குத்தகைக்கு எடுத்து அவற்றை வாடகைக்கு விட்டு வந்தான். ஒரு பெண்ணோடு அவன் நெருக்கமாகப் பழகினான். அங்கு வருபவர்களின் பாலியல் இச்சைக்குப் பெண்களை சட்ட விரோதமாக அனுப்பும் வேலையையும் செய்து வந்தான். ஒரு பாலியல் தொழிலாளியோடு நெருக்கம் ஏற்பட்டு திருமணமும் செய்திருந்தான். அவன் ஆபத்தானவன் என்றும் எதோ ஒரு வகையில் உங்களது பெண்ணையும் இது போல் ஆக்கி விடலாம் என்பதை அந்தப் பெண்ணின் தாயிடம் ரிப்போர்ட் கொடுத்தோம். ஆன்லைன் மூலம் காதல் செய்பவர்களும் ஒருமுறை நேரில் சென்று உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 


 

 

Next Story

குடும்பச் சுமை தாங்காமல் இல்லத்தரசி எடுத்த அதிர்ச்சி முடிவு - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 44

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Detective malathis investigation 44

முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த சுவாரசியமான விசயங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டு வருகிறார். அந்த வகையில், மகளும் அப்பாவும் அம்மாவை துப்பறியச் சொன்ன ஒரு வழக்கு குறித்து நம்மிடையே விவரிக்கிறார்.

ஒரு வித்தியாசமான வழக்கு இது. ஒரு அப்பாவும் பெண்ணும் என்னை சந்திக்க வருகிறார்கள். அம்மா தங்களை விட்டு சென்று விட்டார் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்தப் பெண், அம்மாவுக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அவர் ஒரு ஆசிரமத்தில் தங்கி இருப்பதாகவும், இனிமே வரமாட்டார் என்று சொன்னதாகவும் சொன்னார்.

நான் அந்தப் பெண்ணிடமும், அப்பாவிடமும் சில கேள்விகள் கேட்டு அம்மாவின் குணம், வீட்டின் நிலைமை, அம்மாவிற்கும் அப்பாவிற்கும் இருக்கும் உறவுமுறை என்று பிரச்சினைக்கான காரணிகள் ஏதும் இருக்கிறதா என்று கேட்டு அறிகிறேன். ஆனால், எல்லாவிதமான கேள்விகளுக்கும் ஒன்றுமே இல்லை என்றும் தன் அம்மா ரொம்ப அமைதியானவர், குடும்பத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம் என்றும் சொல்கின்றனர். அந்த அம்மாவிற்கும் பேரன், பேத்திகள் எடுத்து இரண்டு வயது ஆனதும் வளர்த்து தன் கடமைகளை முடித்து விட்டுதான்  திடீரென்று ஆசிரமத்திற்கு சென்று இருக்கிறார்.

ஆனால், இப்பொழுது மீண்டும் வர சொல்லி கூப்பிட்டாலும் வருவதில்லை என்று அவர் வராததற்கு காரணம் கண்டுபிடித்து கொடுக்குமாறு கேட்டார்கள். ஒருவேளை அம்மாவிற்கு வேறு எதுவும் தொடர்பு இருந்தது என்றால் ஆசிரமத்தில் இருக்க மாட்டார்கள் அல்லது ஆசிரமத்தில் அவருக்கு தெரிந்தவர் இருக்கலாம் என்று கூட யூகித்தோம். இருந்தாலும் எதுவும் புரியவில்லை. சரி என்று நாங்கள் இந்த வழக்கை எடுத்து கொண்டு ஆசிரமம் சென்று அந்த அம்மாவின் நடவடிக்கையை கண்காணித்தோம். ஆசிரமம் என்பதால் சுலபமாக எங்களால் உள்ளே செல்ல முடிந்தது. ஆனால், அவரை கவனித்த வரை ஒரு குறையும் சொல்லும்படி இல்லை. மிக சாதாரணமாக குடும்பத்தை விட்டு வந்து விட்டோம் என்ற குற்ற உணர்வு கூட அவரிடம் இல்லை.

பொதுவாக ஒரு வழக்கை நாங்கள் முடிக்க முப்பது நாட்கள் எடுத்து கொண்டு ரிப்போர்ட்டை கொடுத்து விடுவோம். ஆனால், இது காரணம் கண்டுபிடிக்க முடியாததால் ஒரு மாதம் தாண்டியது. வெளியே வேறு ஏதும் தொடர்பு இல்லை என்பதால் யாரையும் பின்தொடர்ந்து செல்ல முடியவில்லை. எங்களால் அவரது கணவரையும் பெண்ணையும் மட்டுமே மீண்டும் கூப்பிட்டு விசாரிக்க முடிந்தது. கேட்டதில் தன் அம்மா குடும்பத்தில் நிறைய கவனம் கொண்டு குடும்பத்திற்கு ஏற்ப வேளாவேளை விதவிதமாக சமைத்துக் கொடுத்து அன்பாகத்தான் பார்த்துக் கொண்டார்கள் என்று இருவருமே கூறினர். எனவே, மேலும் இதற்கு மேல் வெளியே தேடி ஒரு பலனும் இல்லை என்று அவரிடமே ஆசிரமத்தில் சென்று விசாரிப்பது என்று முடிவு எடுத்து அனுமதி வாங்கிக்கொண்டு அந்த அம்மாவை சந்தித்தேன்.

என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினேன். ஆனால், அவரிடம் எந்தவித சலனமும் இல்லை. அதற்குப் பின் மெதுவாக அவரிடம் குடும்பம் என்று இருக்கும் பொழுது  எதற்காக தனிமையைத் தேடி வந்திருக்கிறீர்கள் என்று கேட்டவுடன் மெல்ல அவர் பேச ஆரம்பித்தார். என்னால் முடியவில்லை மேடம். என்னால் இனி அவருடன் வாழ முடியாது என்று சொன்னார். அவரது குடும்பம் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என்று எந்த ஒரு காரணம் சொன்னார்களோ அதே காரணத்தை மனைவி தனக்கு மிகவும் வெறுப்பாக இருக்கிறது என்றார். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரையும் யோசித்து விதவிதமாக தினசரி சமைத்துப்போட்டு, தன்னை பற்றி யோசிக்க முடியாமல் அவர் வெறுமையை உணர்ந்திருக்கிறார்.

தன்னுடைய கணவர் எந்த ஒரு உதவியும் செய்வதும் இல்லை மேலும் இப்படித்தான் உணவு இருக்க வேண்டும் என்று கண்டிஷன் வேறு.. நான் பெற்றெடுத்ததோ பெண் குழந்தை. அதை ஒரு இடத்தில் கட்டிக் கொடுக்கும் வரை பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் சகித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது என் கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு தனக்கு என்று நேரம் வேண்டுமென்று உணர்ந்து இங்கே வந்திருக்கிறேன் என்று சொன்னார். இப்பொழுது தான் தனக்கு விடுதலை கிடைத்திருக்கிறது நிம்மதியாக இருக்கிறேன் என்று ஆத்மார்த்தமாக சொன்னார். அவர் பேசியவுடன் அவர் எப்படிப்பட்ட மன வேதனையுடன் இத்தனைக் காலம் வாழ்ந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடிந்தது.

அடுத்ததாக அந்தப் பெண்ணை கூப்பிட்டு அழைத்து விஷயத்தை சொன்னேன். அந்த அம்மாவின் மனநிலையும் எடுத்து சொன்னேன். அந்தப் பெண்ணும் இதையெல்லாம் எங்க அம்மா எங்களிடமே நேரடியாக சொல்லி இருக்கலாமே என்றார். சொல்லியிருந்தாலும் நீங்கள் புரிந்து கொள்ள வாய்ப்பில்லை. முதலில் பிரச்சனை யாரிடம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி உன் அப்பாவிடம் தான் முதலில் நீ எடுத்து சொல்ல வேண்டும். எனவே இருவரையும் சேர்த்து வைக்கும் வழியை பார் என்று ரிப்போர்ட்டை கொடுத்து  அனுப்பினேன்.

ஒரு குடும்பத்தைப் பேணி பராமரிக்கும் பெண்ணை குடும்பத் ‘தலைவி’ என்று உயர்ந்த அங்கீகாரம் கொடுத்து அவர்களை வைத்திருக்கிறோமே தவிர, அவர்களை தலைவியாகவோ குறைந்தது அவர்களுக்கென்று ஒரு உணர்வும்  தனிப்பட்ட தேவை, ஆசை என்று இருக்கும் என்று பெரும்பாலும் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் பொருட்படுத்துவதில்லை. இப்படியே சென்றால் ஆசிரமங்கள் அநாதை குழந்தைகள், ஆதரவற்ற முதியவர்களுக்கு என்று இல்லாமல் இப்படி அநாதையாகவும், ஆதரவற்றோர் வரிசையிலும் குடும்ப தலைவிகள் போய்ச் சேர்வதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றும் இல்லை.

Next Story

காணாமல் போன வீட்டிலிருந்த மனைவி; காரணம் தெரிந்ததும் நொறுங்கிய கணவன்! - டிடெக்டிவ் மாலதியின் புலனாய்வு: 43

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Detective malathis investigation 43

வீட்டில் தனியாக இருந்த மனைவியைக் காணவில்லை என்று வந்தவரின் வழக்கு பற்றி முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.

இருபத்தி எட்டு வயது நபர் ஒருவர், என்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன் மனைவியை காணவில்லை என்றும், கண்டுபிடித்து தருமாறும் வழக்கு கொடுத்தார். வழக்கம் போல இருவரின் தகவல்களை வாங்கினோம். அவர்களது திருமணம் காதல் திருமணம். வீட்டில் சம்மதிக்கவில்லை. தனியாக வந்து பதிவு திருமணம் செய்து எட்டு மாதங்கள் ஆகி இருக்கிறது. வழக்கமாக இவர் அலுவலகம் சென்று வீடு திரும்புகையில், அங்கு மனைவியைக் காணவில்லை. சரி என்று அவர் மனைவியின் மொபைல் நம்பரைக் கேட்டோம். அந்தப் பெண்ணின் மொபைலை அவரது பெற்றோர் காதலித்த நாட்களிலே வாங்கி வைத்திருந்தனர். எனவே இவரின் பெயரில் மொபைல் வாங்கி இருந்ததால் நல்ல வேளையாக தேட வசதியாக இருந்தது.

இந்தப் பெண் காணாமல் போனதற்கு ஒன்று பெற்றோர் காரணம் அல்லது வேறு யாருடனும் தொடர்பு இருக்கிறதா? என்று இரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தோம். நாங்கள் கால் ஹிஸ்டரியைப் பார்த்ததில் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. திருமணத்திற்கு முன்னர், பெற்றோருடன் நிறைய வாக்குவாதங்கள் ஆகியிருக்கிறது என்று தெரிய வந்தது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாதியினால் பிரச்சனை இல்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது. அடுத்து இருவரது வசதி பற்றி கேட்டதில், இந்த நபரை விட அவரது மனைவி வீட்டில் வசதி அதிகம் என்று தெரிந்தது.

இந்தப் பெண்ணின் மொபைல் கடைசியாக எங்கே சுவிட்ச் ஆஃப் ஆகி இருக்கிறது என்று ஐ.எம்.இ.ஐ. ஐ.டியை வைத்து பார்த்தால் அது ஒரு நெடுஞ்சாலையில் கடைசியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவரிடம்  சொந்த ஊர் மற்றும் சொந்தங்கள் பற்றிக் கேட்டு அங்கு சென்று பார்த்தோம். இவர்களது பெற்றோர் வீட்டில் இந்தப் பெண் இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று கண்காணித்ததில் தெரிந்தது. அடுத்ததாக அந்தப் பெண்ணின் அக்கா தான் பேசி மனதை மாற்றச் செய்து வேறொரு ஊரில்  தன்னுடன் வீட்டில் காவல் வைத்திருப்பது தெரிந்தது. உறுதி செய்தபின் அவரைக் கூப்பிட்டு, விஷயத்தைச் சொல்லி இதை ஹேபியஸ் கார்பஸ் மூலமாகத்  தீர்வு காணலாம் என்று ஆலோசனை கொடுக்கப்பட்டது.

அந்தப் பெண்ணை இவர் தொடர்பு கொண்ட போது வர மறுத்து விட்டாள். அந்தப் பெண்ணின் உறவினர்களுக்கு தங்களை விட வசதி குறைவான இடத்தில் அவர் வாழ்வது பிடிக்கவில்லை. பேசி மனதை மாற்றிக் கொண்டு போய் விட்டார்கள். இங்கு நாம் சமூகம் சார்ந்து வாழும் வாழ்வியலாக இருக்கிறது. வெளிநாடுகளில் பதினெட்டு வயது ஆனவுடன், பெண், ஆண் இருவரில் யாராக இருந்தாலும் சரி, சம்பாதித்து நீயே வாழ்ந்து கொள் என்று அனுப்பி விடுவார்கள். பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கு என்று சேர்த்து வைக்கமாட்டார்கள். ஆனால் நம் பக்கம் அப்படி இல்லை. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென்றே சொத்தை சேர்த்து வைக்கின்றனர். எனவே பிள்ளை தங்களை மீறி வேறொரு வாழ்க்கையை தேடிச் சென்றுவிட்டால், அவர்கள் பிள்ளைக்கென்று உழைத்த உழைப்பை எண்ணி, இத்தனை செய்தும் வெளியே சென்று விட்டார்களே என்று பொறுக்கமுடியவில்லை. ஒன்று தன் பிள்ளைக்கென்று என்ன செய்கிறோம், எவ்வளவு முக்கியம் என்று புரிய வைத்து வளர்க்க வேண்டும், இல்லை தனித்து போய்விட்டார்கள் என்றால் அவர்களை விட்டு விட வேண்டும்.