உளவியல் ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பணம் மட்டுமே முக்கியம் என்று நினைத்தவருக்குக் கொடுத்த கவுன்சிலிங்கைப் பற்றி விவரிக்கிறார்.
லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் கணவர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், அந்த நபர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளிடம் நேரத்தை செலவிடாமல் பணத்தை செலவிடுவதையும், சம்பாதிப்பதையும் குறிக்கோளாக இருந்து வருகிறார். அவரது குழந்தைகள் என்னிடம் பேசுகையில், அப்பாவுடன் காலணி வாங்கச் சென்றால் கூட நல்ல கம்பெனி தயாரிப்பில் உருவானதா? அந்த கம்பெனிக்கு எத்தனை கிளைகள் அருகில் உள்ளது? என்று கடைக்காரரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கிறார். அவருடன் சின்ன பொருளை வாங்கச் சென்றாலும் கோபம் வருகிறது என்று புலம்பினர். காய்கறி கடைக்குச் சென்றால், காய்கறி விற்பதால் எவ்வளவு லாபம் வரும். அந்த வியாபாரத்தை எப்படிச் செய்வது என்று முழுக்க முழுக்க பணம் சார்த்தே யோசித்து வந்துள்ளார்.
கணவரும் மனையும் சேர்ந்து ஒரு ஹோட்டலுக்கு சென்று தங்கியிருக்கின்றனர். அப்போது அங்குள்ள படுக்கை மெத்தையைப் பார்த்த அவர் நன்றாக இருப்பதாகக் கூறி என்ன பிராண்டு? எங்கு சென்றால் வாங்க முடியும் என்பதைப் பற்றித் தீவிரமாக யோசித்து இருக்கிறார். இந்த விஷயத்தை அவரது மனைவி என்னிடம் கூறும்போது, தனியாக சென்ற இடத்தில் என்னுடன் நேரத்தைக் செலவிடாமல் மெத்தை வாங்குவதில் கவனம் செலுத்துகிறார். அது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது என்றார். இதையடுத்து அவரின் கணவர் என்னிடம் பேசும்போது, நான் யார் தெரியுமா? என்ற தற்பெருமையை நீண்ட நேரம் பேசினார். அதன் பிறகு அவர் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் இடையேயுள்ள பிரச்சனையைக் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, குடும்பத்தில் உள்ளவர்களுக்காகத்தான் பணம் சம்பாதிக்கின்றேன். இதில் என்ன பிரச்சனை? என்னை என்னுடைய குடும்பத்தினரே தவறாக ஏன் நினைக்கிறார்கள்? என்று தனக்குச் சரி என்று தோன்றுவதைப் பற்றிப் பேசினார். அதன் பிறகு நான் அவரிடம், உங்களைச் சரியில்லையென்று உங்கள் குடும்பத்தினர் சொல்லவில்லை நீங்கள் சம்பாதிக்கும் பணத்தைத்தான் குறை சொல்கின்றனர். இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது என்றேன். அவர் அதற்கு பணம் இல்லாமல் எப்படி சார் வாழ்வது? என்றார். பின்பு நான் ‘பொருளில்லார்க்கு’ என்ற திருக்குறள் வரியை சொன்னபோது சிரித்தபடி ‘இவ்வுலகம் இல்லை’ என்றார். அதற்கு முன்பு இருக்கும் வரிகள் என்னவென்று கேட்டேன். அவர் முழித்தபடி பார்த்தார். பின்பு நான் ‘அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை’ என்ற வரியை அவருக்கு ஞாபகப்படுத்தினேன். அதோடு அருள் என்பதை ஆன்மிக ரீதியாக நினைக்காமல் அன்பு என்று வைத்துக்கொண்டு அவ்வுலகம் என்பதை குடும்பம் என நினைத்துக்கொள்ளுங்கள் சொல்லிவிட்டு கவுன்சிலிங்கை தொடங்க ஆரம்பித்தேன்.
பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு உழைத்து வந்த அவரிடம், பணத்தை முதன்மையாக வைத்து சம்பாதித்து வந்து விட்டீர்கள். அப்போது உங்கள் மனநிலை பணம் இருந்தால் மட்டும் போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. இப்போது உங்களிடம் பணம் இருக்கிறது எல்லோரும் வேண்டும் என்ற மனநிலைக்கு திரும்புங்கள் என்றேன். மேலும் கடைசியா ஐ.பி.எல். மேட்ச் பார்க்க சென்றுள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர் கடந்த ஐ.பி.எல். சீசனில் போட்டியைப் பார்த்தாக கூறினார். அதோடு உங்கள் தொழிலாளர்கள் வீட்டிற்கு எப்போது போனீர்கள் என்று கேட்டேன். அவர் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தார். பின்பு யோசித்து பணம் மட்டுமே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன் என்றார். அதன் பிறகு நான் பேசும்போது பணம் இப்போது உங்களிடம் இருக்கிறது. ஆனால் மற்றவர்களை மறந்துவிட்டீர்கள். கடைசியாகக் குழந்தைகளை எப்போது பள்ளியில் விட்டீர்களென்று கேட்க, அதற்கு பள்ளியில் குழந்தைகளை விட யோசித்திருக்கிறேன். ஆனால் மற்ற வேலைகளில் கவனம் செலுத்திவிட்டேன் என்றார்.
அவரிடம் உங்களுடைய அடுத்த இலக்கு என்னவென்று கேட்டேன். கோடிக்கணக்கில் சம்பாதிக்க வேண்டும் என்றார். அப்போது அவரிடம் பூஜ்ஜியத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வரை யாரிடமும் பேச நேரமில்லை சரி இப்போது கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது பேச நேரமில்லையென்றால் நீங்கள் வாழும் வாழ்க்கைக்குப் பெயர் என்ன? என்று கேட்டேன். அவரால் பேச முடியாமல் அமைதியாக இருந்தார். அதன் பிறகு செய்யும் தொழிலில் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டு விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு இலகுவாக மீண்டும் சம்பாதித்துவிடுவேன் என்று கூறினார். பின்பு நான் அவரிடம் தெரியாமல் நஷ்டம் ஏற்படுவதைச் சம்பாதிக்கத் திராணி இருக்கும் உங்களுக்கு ஏன் அந்த பணத்தை இல்லாதவர்களுக்குத் தெரிந்தே கொடுத்து உதவக் கூடாது என்றேன். மெல்ல மெல்லத் தான் எப்படிப்பட்ட மனநிலையில் இருக்கின்றேன் என்பதை அவர் புரிந்து கொண்டார். இப்போது தன்னுடைய மனநிலையை மாற்றிக்கொண்டு சம்பாதித்த பணத்தை போதுமான அளவு வைத்துக்கொண்டு இல்லாதவர்களுக்கு உதவி அதில் கிடைக்கும் சந்தோஷத்தோடு தன் குடும்பத்தினருடன் நிம்மதியாக மனநிறைவுடன் வாழ்ந்து வருகிறார். இது போல பணம் அதிகளவில் பணம் சம்பாதிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் குழந்தைகள்தான். அவர்களிடம் குச்சி மிட்டாய்யை(பணத்தை) கொடுத்தால் தொடர்ந்து வேண்டுமென்று கேட்பார்கள். அதனால் குழந்தைகளாக இருக்காமல் பக்குமான மனநிலையுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்றார்.