உளவியல் ஆலோசகர் ஜெய ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்குக் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் சிறப்புக் குழந்தைகளிடமிருந்து தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.
எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் இருக்கக்கூடிய ஒருவர் சிறப்புக் குழந்தைகளுக்காக(special children) பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். அந்த பள்ளிக்கு ஒருமுறை நான் சென்றிருந்தேன். எனக்குப் புதுவிதமான அனுபவம் கிடைத்தது. நான் முதலில் சிங்கம் படத்திலிருக்கும் சூர்யா போல மீசை வைத்திருப்பேன். அதை அங்குள்ள ஒரு சிறப்புக் குழந்தை பார்த்து துரை சிங்கம் என்று ஆனந்தமாகக் கத்தி சந்தோசப்பட்டது. அப்போது அவர்களுக்குள்ளும் ஒரு விஷயத்தைப் புரிந்து அதை தங்களுடைய உலகத்தில் வேறு விதமாகப் புரிந்துகொள்வார்கள் என்று உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு அந்த படத்தில் வரும் சூர்யா போல் யார் மீசை வைத்து வந்தாலும் அந்த குழந்தைக்கு அவர் துரை சிங்கம் தான். அந்த குழந்தைகளின் உலகத்தில் தனியாக எதையும் வகைப்படுத்திப் பார்க்க மாட்டார்கள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அவர்களாலும் சில உணர்வுகளை வகைப்படுத்திப் பார்க்க முடியும்.
சில குழந்தைகள் ஓடிக்கொண்டு இருப்பார்கள், சிலர் கோபமாக இருப்பார்கள், சிலர் சிரித்துக்கொண்டிருப்பர். இதுபோன்ற பல உணர்வுகள் அவர்களிடமிருந்து வெளிப்படும். மற்றபடி அவர்கள் அழகான குழந்தைகள்தான். அவர்களை சரி செய்யவும் அதிக வாய்ப்பிருக்கிறது. அதற்கான பள்ளிதான் அது. பள்ளிக்குள் சுற்றிப் பார்க்கும்போது, மற்றொரு ஆச்சரியமான விஷயம் நடந்து. அங்குள்ள சிறப்புக் குழந்தைகள் மளிகைக் கடையை நடத்தி வருகின்றனர். முதலில் நானும் நம்ப முடியாமல் பார்த்தேன். ஆனால் அதுதான் உண்மை. பொதுவாக வெளியில் இருக்கும் மளிகை கடைக்காரர்கள் லாபத்திற்காக அதைச் செய்வார்கள். ஆனால் அங்குள்ள குழந்தைகளுக்குப் பணம் சம்பாதிக்க வேண்டும், தொழில் போட்டி என எதுவும் தெரியாது. சில பொருட்களைச் சுத்தமுடன் செய்து விற்பார்கள். அதற்கேற்ப அங்குள்ள ஆசியர்கள் சொல்லிக்கொடுத்தபடி அழகாக அவர்கள் மொழியில் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு வேலை செய்வார்கள். அது நமக்குச் சுத்தமாகப் புரியாது.
அந்த குழந்தைகள் அவர்கள் உலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். தங்களுக்குப் பிடித்த ஒரு ஆசிரியர் அவர்களுடன் இருந்தால் போதும் எளிமையாகச் சொல்வதைப் புரிந்து கொள்வார்கள். அந்த ஆசிரியரை விடச் சிறந்த ஆசியர் வந்தாலும் அவருடனும் நன்றாகப் பழகுவார்கள். பிடித்த ஆசிரியர்கள் போனாலும் வருத்தப்பட மாட்டார்கள். இதுபோல பல குழந்தைகளை வளர்க்க முடியாமல் தவிக்கும் மாணவர்கள் ஒருமுறையாவது அங்குச் சென்று பார்க்க வேண்டும். அந்தளவிற்கு அற்புதமான பள்ளி அது. அங்கு சென்று வந்த பிறகு எனக்கே மன மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்ற இடங்களுக்குக் கண்டிப்பாகச் செல்லுங்கள் மன நிம்மதியும் தைரியமும் வாழ்வதற்கான ஊக்கமும் கிடைக்கும் என்றார்.