மனநல ஆலோசகர் ஜெய் ஜென், தன் வாழ்வில் சந்தித்த பல்வேறு மனிதர்களைப் பற்றியும், அவர்களுக்கு கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.
அந்த வகையில் இன்று சாமானிய மனிதர்களிடம் தனக்கு கிடைத்த நல்ல அனுபவங்களை பற்றி விளக்குகிறார். மற்ற மனிதர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதோடு நிறைய இடங்களுக்கும் ட்ராவல் செய்யும் பழக்கம் எனக்கு இருக்கிறது. ஒருமுறை மகாராஷ்டிராவில் அஜந்தா குகை ஓவியங்களை பார்ப்பதற்காக சென்றுகொண்டிருந்தேன். போகும் வழியில் ஒரு பெரிய மலை இருந்தது. அந்த மலையின் அமைப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள மேகங்கள் என்னை ஈர்த்தது. உடனே அங்கு இறங்கி புகைப்படம் எடுக்கத் தொடங்கினேன். அந்த நேரத்தில் மாடு மேய்க்கும் ஒரு நபர் வந்தார். அவரிடம் மொழி தெரியாமல் சைகை செய்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது ஓரளவிற்கு ஆங்கிலம் தெரிந்த ஒரு நபர் பைக்கில் வந்து எங்களை விசாரிக்க தொடங்கினார். அப்போது நான் புகைப்படம் எடுப்பதை கூறினேன். அதை அருகிலிருந்த மாடு மேய்க்க வந்த நபரிடமும் அவர் விவரித்தார். பின்பு மூன்று பேரும் ஒன்றாக பேச ஆரம்பித்தோம் எனக்கும் அந்த மாடு மேய்ப்பவருக்கும் இடையில் ட்ரான்லேட்டராக பைக்கில் வந்தவர் மாறிவிட்டார்.
அப்போது மாடு மேய்த்துகொண்டிருந்தவர், இங்கு என்ன இருக்கிறதென்று புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்? என்றார். அதற்கு நான், இந்த இடத்திலிருக்கும் இயற்கை பிடிந்திருந்தது. அதனால் புகைப்படம் எடுக்கின்றேன். நீங்கள் இங்கேயே இருப்பதால் உங்களுக்கு தெரியவில்லை என்றேன். அதற்கு அவர் இடம்விட்டு இடம் மாறும்போது யதார்த்தமாக இருப்பதும் பிரம்மிப்பாக இருக்கும் என்றார். அவர் பேச்சில் ஒரு சுவாரஸ்யம் இருந்ததால் தொடர்ந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன். அதன் பின்பு நான் அந்த மாடு மேய்த்துக் கொண்டிப்பவரிடம் மாடுகளைப் பற்றி கேட்டேன். அவரும் மாட்டில் நிறைய வகைகளிருப்பதை சொன்னார். எப்போதும் மாடு கூடவே இருப்பீர்களா? என்று கேட்டதற்கு அவர், பேசுகிற மனிதன் பக்கத்தில்தான் காவலுக்கு நிற்க வேண்டும். மாடு சொல்வதை புரிந்துகொள்ளும் என்றார். உடனே நான், வேறு இடத்திற்கு மாடு போய்விட்டால் என்ன செய்வீர்கள்? என்று கேட்க, நம்ம சரியாக கவனிக்கவில்லையென்றால்தான் போகும் நல்ல புற்களுள்ள இடத்தைக் காட்டிவிட்டால் மாடு வேறு இடத்திற்கு செல்லாது என்று கூறி இது வாழ்க்கைக்கும் பொருந்தும், உங்களுக்கு புரிந்ததா? என்றார். கணவன், மனைவி உறவைப் பற்றி அவர் சூசகமாக சொன்னதை நானும் புரிந்துகொண்டேன்.
பின்பு நான் அவரிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தேன். அப்போது அந்த ட்ரான்ஸ்லேட் செய்துகொண்டிருந்தவர் பார்த்து போய்ட்டுவாங்க என்றார். அதற்கு அந்த மாடு மேய்ப்பவர், அவர் இங்க வர வேண்டும் என்று எழுதியிருக்கிறது. நம்மை பார்க்க வேண்டுமென்று எழுதியிருக்கிறது. அஜந்தா போக வேண்டும் என்று எழுதியிருக்கிறது. திரும்பி ஊருக்கு போக நினைத்தால் அதுவும் எழுதியிருந்து. அதை ஏன் பெரிதாக நினைத்து, பார்த்து பத்திரமாக போங்கனு சொல்ற? என்று அந்த ட்ரான்ஸ்லேட் செய்பவரிடம் கூறினார். அவர் சொன்னதைக் கேட்டதும், தன்னை சாமியார் என்று பெருமைபேசி வரும் சிலருக்கு மத்தியில் இதுபோல் சாலையில் யதார்த்தமாக வாழ்க்கையை புரிய வைக்கும் ஆயிரம் சாமியார்கள்(சாமானிய மனிதர்கள்) இருக்கின்றனர் என்று ஆச்சர்யமாக இருந்தது.
அதன் பின்பு அந்த மாடு மேய்ப்பவரிடம் செல்ஃபி எடுத்துகொள்ளலாம் என்று நினைத்து அவரிடம் அதற்கு அனுமதி கேட்டேன். அவர் சரி என்று சொன்ன பிறகு செல்ஃபி எடுத்தேன். அதை அவரிடம் காண்பிக்கும்போது பிடிக்காத மாதிரி ரியாக்ஷன் கொடுத்தார். உங்களுக்கு செல்ஃபி பிடிக்கவில்லையா? என்றேன். அதற்கு அவர் செல்ஃபி எடுக்கின்றவரை நன்றாக இருந்தோம். ஆனால் போஸ் கொடுக்க ஆரம்பித்ததும் முகத்தை மாற்றிவிட்டோம் என்று கூறி எதற்காக இந்த செல்ஃபியை எடுத்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு நான், சும்மா பார்ப்பதற்காக எடுத்தேன் என பதிலளித்தேன். அதற்கு அவர், நீங்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்ததால் தான் நான் அசிங்கமாக இருக்கிறேன் என்றார். ஒருவர் பார்க்க வேண்டும் என்பதற்காக எடுக்கும் புகைப்படத்தில் நம் முகம் அழகாக இல்லையென்றால் நம்மை பற்றி மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் வாழ்க்கை அழகாக இருக்குமா? என்ற புரிதலை அந்த செல்ஃபி மூலம் உணர்ந்தேன். அப்படியே தொடர்ந்து அவரிடம் பேசிக்கொண்டிருக்கும் மாடுகளை அழைப்பதற்கு நாவை சுழற்றி சத்தம்போட்டார். உடனே அங்கிருந்த இரண்டு மாடுகள் அவரை நோக்கி வந்தது. இதைப் பார்த்த அந்த ட்ரான்ஸ்லேட்டர், இப்போது என்ன பண்ணினீர்கள் மாடு எப்படி வந்தது? என்று அவரிடம் கேட்ட, மனிதனுக்கு எப்போதுமே தனக்கு ஒன்று புரியவில்லையென்றால் பார்பதையெல்லாம் நம்பிவிடுவான் அதுபோலதான் இருக்கிறது நீங்கள் கேட்பதும் என்று அந்த ட்ரான்ஸ்லேட்டரை கிண்டல் செய்தார்.
பின்பு என்னைப் பார்த்த அவர் பொதுவாக நான் யாரிடமும் பேச மாட்டேன். டி.என் என்று உங்கள் வண்டியின் பின்னால் இருந்ததால்தான் பேசினேன். தமிழ்நாட்டு மக்கள் நன்றாக படிப்பார்கள் உண்மையாக இருப்பார்கள் அதனால்தான் பேசினேன் என்றார். இதை கேட்டுக்கொண்டிருந்த அந்த ட்ரான்ஸ்லேட்டர், நீ அங்கு சென்று பார்த்தாயா? சும்மா எதாவது பேசக்கூடாது என்று முன்பு அவர் கிண்டல் செய்ததற்கு பழிவாங்கினார். இதற்கு அவர் தவறாக கூட இருக்கலாம். ஆனால் அதை சரியாக நினைத்து நான் சந்தோஷமாக இருக்கின்றேன் என்றார். பின்பு என்னை பார்த்து உனக்கு வேறு எதாவது செல்ஃபி வேண்டுமா என்றார். நான் சிரித்துக்கொண்டே வேண்டாம் என்று கூறி அவர் சிரிப்பதைப் பார்த்து அழகாக இருக்கிறது என்றேன். பதிலுக்கு அவர் நீங்கள் வேண்டாம் என்று சிரித்துக்கொண்டே சொன்னது அழகாக இருந்தது என்றார். நானும் சிரித்தபடியே அங்கிருந்து சென்றுவிட்டேன். ஏனென்றால் சில உரையாடல்களை அழகாக முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு மேல் அந்த உரையாடல் சென்றால் அதில் செயற்கைத்தனம் வந்துவிடும்.