தான் சந்தித்த பல்வேறு கவுன்சிலிங் பற்றியும், பல வகையான மனிதர்களுக்கு அவர் கொடுத்த கவுன்சிலிங் குறித்தும் ‘மனங்களும் மனிதர்களும்’ தொடரின் வழியாக ஜெய் ஜென் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில், மனைவியை மென்மையாக மதமாற்றம் செய்யும் கணவர் வீட்டாருக்கு கொடுத்த கவுன்சிலிங் பற்றி விளக்குகிறார்.
ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பெண், வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். வீட்டுக்குள், இரண்டு மதத்தைச் சேர்ந்த கடவுள்களும் இருக்க வேண்டும் என்ற புரிதல் இவர்களுக்குள் திருமணத்தின் போதே இருந்திருக்கிறது. வீட்டுக்குள் சின்ன சின்ன சடங்குகள் வரும் போது, தன்னுடைய மதத்தில் இது இல்லை, இருந்தாலும் பரவாயில்லை என்று கணவன் வீட்டார் ஆரம்பித்தில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். எல்லோரும் பேசி பேசி, தன்னை இன்னொரு மதத்திற்குள் நகர்த்திவிடுவார்களோ என்று பயம் இருப்பதாக தான் அந்த பெண் என்னிடம் வந்தார்.
தங்களுடைய வீட்டுக்காக இதை செய்யலாமே? என கொஞ்ச கொஞ்சமாக அந்த மதத்திற்கு நகர கணவர் சொல்லாமல் சொல்கிறார். தன்னுடைய நம்பிக்கையின் மீது அந்நியப்பட்டுவிட்டோனோ என்ற பயம் இருப்பதாகவும், மதத்திற்கு உண்மையாக இருக்கிறேனா என்ற குற்ற உணர்ச்சி வருவதாகவும் அந்த பெண் சொன்னார். தங்களுடைய மதத்திற்கு மாற வேண்டும் என்று வாய் வார்த்தையால் சொல்லாமல், தங்களுக்காக இதை செய்யலாமே என்று கணவர் வீட்டார் சொல்கின்றனர். கணவர் மீது உள்ள காதல் கொஞ்ச கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கிறது. குறிப்பால், நீ எங்கள் ஆள், என அந்த பெண்ணிடம் இன்டேராக்ட்டாக நிறுவ முயற்சி செய்கிறார்கள். இது மாதிரி கணவரிடம் தன்னுடைய மதக் கடவுளை வழிபடு என்று சொல்ல முடியவில்லையே?, நான் தன் மத சார்பாக எந்த கோரிக்கையை விடுவிக்கவில்லையே? என்று தான் அந்த பெண்ணின் கேள்வியாக இருக்கிறது.
இதை தான் நான், மென்மையான தீவிரவாதம் என்பேன். உங்களுடைய நம்பிக்கைக்கு எதிராக இயங்க வைப்பது தானே தீவிரவாதம். ஆரம்பத்தில், தன்னை பற்றி புரிந்துகொண்ட கணவன், கொஞ்ச கொஞ்சமாக தன் மதம் சார்பாக நகர ஆரம்பிக்கிறார். வீட்டில் மைனாரிட்டியாக இருப்பதால், வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் இருக்கிறது. கொஞ்ச கொஞ்சமாக கணவரின் மத சம்பிரதாயத்தை வேண்டா வெறுப்பின்றி கடைப்பிடிக்க ஆரம்பிக்கிறேன். தன்னுடைய அடையாளம் இழப்பது மாதிரி தெரிகிறது. என்ன செய்வதென்று புரியவில்லை? என்று தான் அவர் என்னிடம் சொன்னார்.
வழக்கம் போல், கணவரை வரவழைத்து பேச ஆரம்பிக்கிறேன். தனக்கும் இதன் மீது விருப்பமில்லை, அப்பா அம்மாவுக்காக இதை செய்ய சொல்கிறேன் என்று கணவர் இந்த விஷயத்தை கைகழுவ பார்க்கிறார். காதலிக்கும் போதும், விரும்பும் போதும் நாம் முடிவு எடுக்கிறோம். திருமணம் ஆன பிறகு அதை மெதுவாக பெற்றோர் பக்கம் நகர்த்துகிறோம். ஏனென்றால், மனைவி எங்கு போய்விட முடியும் என்ற நினைப்பு தான். ஆனால், உங்கள் மனைவி நினைத்தால் உங்களைவிட்டு போய்விடுவார்கள். போவதற்கான சரியான காரணம் இதுவா? என்று தான் உங்களுடைய மனைவி இங்கு வந்து பேசுகிறார். இதை நீங்கள் யோசிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன். இதை சொல்லும் போதே அவருடைய முகம் கொஞ்ச கொஞ்சமாக மாறுகிறது. மனைவியின் மதத்தைச் சேர்ந்த ஆடையையோ, கடவுளை வழிபடவோ உங்களை செய்ய சொல்லியிருக்கிறாரா? உங்களுக்கு அந்த கம்ஃபோர்ட் இருக்கிறது. அதனால், உங்களுக்கு இது பெரிய விஷயமாக தெரியவில்லை என்று சொன்னேன். இந்த விஷயம் இனிமே என்னால் நடக்காது, ஆனால் பேரண்ட்ஸ் தான் மாற வேண்டும் என்று சொன்னார்.
இதையடுத்து, கணவரின் அப்பா அம்மாவிடம் பேச ஆரம்பிக்கிறேன். அவர்களிடம், நான் சொன்ன அனைத்து விஷயங்களையும் பையன் சொல்லி கூட்டிட்டி வந்திருந்தார். அவர்களுக்கு எது சரியோ அதை சொல்லிக்கொண்டு இருந்தார்கள். மருமகளுக்காக அவருடைய அம்மா அப்பா போட்டிருக்கும் ஆடையை நீங்கள் அணிய சம்மதமா? விரதம் இருக்கலாமா? நமாஸ் செய்யலாமா? என்று கேட்டதற்கு அவர்களுடைய முகத்தில் திகைப்பு இருக்கிறது. திருமணத்திற்கு முன்பாகவே, அவரவர் நம்பிக்கையில் தலையிட மாட்டோம் என்று கணவன் மனைவி தங்களுக்குள் புரிந்து உறுதியோடு தான் திருமணம் செய்திருக்கிறார்கள். இந்த விஷயத்தை பையன் உங்களிடம் சொல்லவில்லை. உங்களிடம் மறுப்பு பேச முடியாததால் பையன் அமைதியாகிவிட்டார் என்று சொன்ன போது கொஞ்சம் யோசித்தார்கள். நமது இடத்திற்கு அவர் வந்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக நாம் சொல்வதையெல்லாம் அவர் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றேன். வீட்டில் ஒரு அறையில் உங்களுடைய மதம் சார்ந்த கடவுளும், இன்னொரு அறையில் மருமகளின் மதம் சார்ந்த கடவுளும் வைத்துக்கொண்டு இரு பண்டிகைகளின் போது மாறி மாறி அந்த அறைக்கு சென்று விழாவை சிறப்பிக்கலாமே என்றேன். நான் ஒவ்வொன்றையும் சொல்ல சொல்ல அந்த தீவிரத்தன்மை அவர்களுக்கு புரிய வருகிறது. இறுதியில், அவர்கள் தன் தவறை உணர்கிறார்கள். அதன் பிறகு அந்த குடும்பம் சரியாகிவிட்டது. நான் சொன்னது போல், ஒவ்வொரு அறையிலும் அவரவர் கடவுளை வைத்து பண்டிகையின் போது விழாவை சிறப்பிப்பதாக பின் நாட்களில் அவர்கள் சொன்னார்கள்.