தான் கொடுத்த கவுன்சிலிங் பற்றி ’மனங்களும் மனிதர்களும்’ என்னும் தொடரின் வழியே ஜெய் ஜென் பகிர்ந்து கொள்கிறார்.
பேசாமலே அமைதியாக இருப்பதே குறையாக ஒருவர் மீது பழி சுமத்த, அதனால் பாதிக்கப்பட்டு என்னை ஒருவர் பார்க்க வந்தார். இதுபோன்று தேவைக்கு மட்டுமே பேசி கூச்ச இயல்புடைய, தனிமையை நாடுகிற ஒருவர், உள்முகச் சிந்தனையாளராக இருப்பர். அவரை ஆங்கிலத்தில் இண்ட்ரோவேர்ட் என்று சொல்வர். இவர்களை பெரும்பாலும் பேசாமல் ஒதுங்கி போகும் வகை என்றே தவறாக நினைப்பார்கள். ஆனால், தேவையின்றி எதுக்கு பேசவேண்டும் என்று அமைதியாக இருக்கும் குணமுடையவர். தான், பேசாமல் இருப்பதால் யாருக்கும் எந்த வித குறையும் இல்லை எனும்போது அவரை எப்படியாவது பேசவைக்க வேண்டும் என்று முயல்வது சரி ஆகாது.
என்னைப் பார்க்க வந்தவருக்கு இதே விஷயம் தான். அவர் முதலில் வந்து பேச்சை ஆரம்பிக்கவே பத்து நிமிடம் எடுத்துக்கொண்டார். அமைதியாக மென்மையாகத்தான் அவருடைய நடவடிக்கை இருந்தது. மெல்ல ஆரம்பித்தார். அவர் எந்த வித கெட்ட பழக்கம் இல்லாத, நண்பர்கள் என்று சுற்றுவது என தேவையில்லாத விஷயங்கள் என்று இல்லாமல், தான் உண்டு தன் குடும்பம் உண்டு என இருக்கும் மிக சிறந்த நபராக இருக்கிறார். தன் மனைவி நூறு தடவை சிரித்தால் கூட மூன்று தடவை சிரிக்கும் அளவான மனிதர். அவருக்கு திருமணம் ஆன வரைக்கும் எந்த விதப் பிரச்னையும் இல்லை. என் மகன் இப்படி தான் அமைதியான டைப் என்று அவரது பெற்றோரும், என் அண்ணன் இப்படி தான் என்று தங்கையும் பேசவில்லையா சரி போ என்று இயல்பாக அவரது குணத்தை ஏற்று கொண்டு விட்டார்கள். ஆனால், எப்போது திருமணம் ஆகி மனைவி, மாமனார், மாமியார் என்று குடும்பம் ஆனதும், அவர்கள் மாப்பிள்ளை பேசமாட்டாரா என்று கேட்க கேட்க இவர்களது பெற்றோருக்கும் இவருக்கும் அது பிரச்னையாக ஆகி, இவரை பேசு பேசு என்று தொந்தரவு செய்கின்றனர். இவ்வளவு நாள் பேசாத நான் திடீரென்று எப்படி பேசமுடியும். இப்போ நான் என்ன சார் செய்யணும் என்றார்.
அவர் பேசும்போது கூட தனக்கு மணிரத்னம் படங்கள் தான் பிடிக்கும் என்றார். தேவைக்கு மட்டும் அழகாக ரெண்டு வார்த்தைகள். காதலித்தால் கூட பிடிச்சிருக்கு என்று சிறிய சிறிய டயலாக். அது போதுமே பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு. அதை விட்டுவிட்டு உன்னை ஏன் பிடித்திருக்கிறது தெரியுமா என்று, அதற்கு ஏன் சார் ஒருமணி நேரம் பேசவேண்டும் என்றார். இவரிடம் பேசுவதை விட இவரது குடும்பத்திடம் தான் பேசவேண்டும் என்று அவர்கள் அனைவரையும் வரசொல்லி பேசினேன். முதலில் எல்லோரும் இவர் பேசமாட்டேங்கிறார் என்று தான் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக சொன்னார்கள். அவர்களிடம் கவுன்சிலிங் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவர்களிடம் ஒரு கதையைச் சொன்னேன். ஒரு காட்டில் சிங்கம் இருக்கிறது. மனிதர்கள் நாம் அது இருக்கும் இடத்திற்கு சென்று அதன் வழியில் குறுக்கே வரும்போது தனது உணவு என நினைத்து கொன்று தின்று விடுகிறது. சிங்கத்தை மக்கள் பாதுகாப்புக்காக வனத்துறை அதிகாரிகள் பிடிக்க வருகின்றனர். ஆனால், போன இடத்தில ஒரு அதிகாரியை காணவில்லை. சிங்கத்தையும் காணவில்லை. அவரைத் தேடி சென்றால், ஒரு மரத்தின் கீழே கரடி முன்பு நின்று கையில் கம்பு வைத்து சிங்கம் என்று ஒத்துக்கொள் என்று அடித்து கொண்டிருக்கிறார். மற்ற அதிகாரிகள் என்னவென்று விசாரிக்க, சிங்கம் கிடைக்கவில்லையே, இருப்பதை சிங்கம் ஆக்கி விடுவோம் என்றான். இந்தக் கதையை சொல்லி, இவர் பேசமாட்டார், என்பதைத் தள்ளிவைத்து விட்டு இவரிடம் வேற என்ன பிரச்சனை இருக்கிறது என்றேன்.
மாமனார், மாமியார் என்று அனைவரும் ஒரு குறையும் இல்லை என்று சொல்லிவிட்டனர். அடுத்து எதிர்பாராமல் அவரை பற்றி குறையாக சொல்லிக்கொண்டிருந்த, திட்டிக்கொண்டிருந்த தங்கையே, சரி அண்ணனிடம் வேற குறை இல்லை நல்லவர் என்று எல்லாருமே சொல்கிறீர்களே, பின் பேசவில்லை என்று ஏன் குறையாக அதை மட்டும் சொல்ரீங்க என்றார். அண்ணன் பக்கமும் நியாயம் இருப்பதை உணர்ந்து கொள்கிறார். அதுவரை எல்லாரும் பேசிக்கொண்டிருந்தார்கள் அதன் பின் மாமனார், மாமியார் மனைவி மட்டுமே அடுத்தடுத்து பேசுகிறார்கள். நான் அவரது மனைவியிடம் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கூட பணி புரியும் ஆண்களிடம் ஏதேனும் பிடிக்காத விஷயம் இருக்கிறதா என்று கேட்டேன், யோசித்து தேவையில்லாமல் பேசுவார்கள், எல்லை தாண்டி பேசுவார்கள், பெண்களிடம் வாய்ப்பு அமையுமா என்ற பாணியில் பேசுவார்கள் என்றார். சரி இந்தக் குணமெல்லாம் உங்கள் கணவரிடம் இருக்கிறதா என்றேன். அவசரமாக கண்டிப்பாக இல்லை அவர் நல்லவர் என்றார்.
எதெல்லாம் பேச்சு இல்லை என்று புரியவைத்தேன். அவர் என்னிடம், சரி சார். தேவையில்லாததற்கு பேசவேண்டாம். ஆனால் நல்ல விஷயத்திற்கு பேசலாமே, ஒரு நாள் கிழமையில் கூட தீபாவளி வாழ்த்து சொன்னால் அரைமணி நேரம் கழித்து தலையை மட்டும் ஆட்டிவிட்டு போவார் என்றார். அதுவரை அமைதியாக இருந்தவர் , என்ன சார் நல்ல விஷயம். புதிதாக ஏதும் நடந்து இருக்கிறதா. அவரவர் வாழ்க்கையில் படிப்பு, தொழில் என்று ஏதேனும் புதிதாக நடந்து இருக்கிறதா. குடும்பம் என்றால் தேவையில்லாதது தான் பேசவேண்டும் என்று இருக்கிறதா சார்?. பொதுவான பேச்சுவார்த்தைக்குத்தான் இந்தக் குடும்பத்தில் 15 பேர் இருக்கிறார்களே. நான் எதுக்கு சார் என்றார். யாரவது வீட்டிற்கு வந்தால் வாங்க பெரியப்பா வாங்க மாமா என்று அத்தனைப் பேரும் அத்தனை முறை கூப்பிடுவதன் அவசியம் என்ன சார். வாங்க என்று ஒரு முறை சொன்னால் வந்து விட போகிறார். அவர் இளம் வயதுக்காரர் என்றாலும், அவர் பேச்சில் அத்தனை முதிர்ச்சி. ஒவ்வொரு வருடமும் தீபாவளி வரத்தான் செய்கிறது, எல்லாரும் ஒரே மாதிரி சந்தித்து, சாப்பிட்டு, அந்த நேரம் மட்டும் எதையாவது அவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதே போல் நானும் பேசவில்லை என்று மட்டும் எல்லாரும் என்னை சொல்கிறார்கள். இந்தக் கடைசி ஐந்து வருடம் என்ன புதிதாக செய்து இருக்கிறீர்கள்? என்ன நடந்து இருக்கிறது என்றார். நானும் எதுவும் இந்த ஐந்து வருடத்தில் செய்யவில்லை. பின்னே எதுக்கு நான் பேசவேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் பேசி இருப்பார். அதையே அவர் இவ்வளவு பேசுகிறாரே என்று எல்லாரும் ஆச்சரியமாக பார்த்தனர்.
எதையாவது ஒன்றை சாதிக்க வேண்டும் சார், அதை குடும்பத்துடன் பகிர வேண்டும். நான் பேசவேண்டும் என்றால் நான் எதையாவது செய்ய வேண்டும், அதற்கு பின் தான் என்னால் பேசமுடியும். எனக்கும் நிறைய பேசவேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது என்று கண் கலங்குகிறார். அதைப் பார்த்து எல்லாருக்கும் புரியவில்லை. நாம் வாழ்க்கையில் சும்மா இருப்பதால் தான் சார் பேசி கொண்டு இருக்கிறோம். அதைக் குடும்பம் என்றோ அன்பு என்றோ சொல்லி கொள்கிறோம். அவர் கடைசியாக தன் நண்பர்களுடன் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வெற்றி பெற்ற அன்று, ஒரு பதினைந்து நிமிடம் பேசியதாகவும், அதுதான் கடைசியாக தான் பேசிய சிறந்த பேச்சு. அதுபோல எதையாவது செய்துவிட்டுத்தான் பேசவேண்டும் என்றார். சும்மா எதையாவது பேசிக்கொண்டு இருப்பதற்கு பெயர் அன்பா சார் என்றார். இதுவரை நான் இந்தக் கேள்வியை கேட்கவில்லை இப்போது இவர்களிடம் கேட்கிறேன் சார். இவ்வளவு பேசுகிறார்களே யாரவது அவர்களிடம் இருக்கும் பிரச்னையை பேசுவார்களா என்றதும் எல்லாரிடத்திலும் அப்படி ஒரு அமைதி. மற்றவர் பிரச்சனை, ஊர் பிரச்சனை முதல் சினிமாவில் நடிகர்கள் வரை பேசுவார்கள். அதில் நானும் கலந்து கொள்ளவில்லை என்று வேறு என் மீது வருத்தம் கொள்வார்கள் என்றார்.
குடும்பத்தில் நிறைய பேர் இந்தத் தவறு செய்கின்றனர். ஒருவர் மட்டும் பேசாமல் இருந்தால் அவரை எப்படியாவது பேச வைத்து விடவேண்டும் என்று படாத பாடுபடுவர். அது தவறு. அவரால் அந்தக் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய நல்ல விஷயங்கள் கிடைக்கும் வரைக்கும், அவரால் வேறு தொந்தரவு இல்லை எனும்போது அவரை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. இங்கு அனைவரும் கவுன்சிலிங் முடியும்போது அவரது மாமனார் தான் முதன் முதலில் புரிந்து எழுந்து நின்று பேசினார். நான் இப்போது தான் புரிந்து கொண்டேன். நம்மைப் போல இல்லமால் மாப்பிளை எதையாவது சாதித்து விட்டு பேசவேண்டும் என்று நினைக்கிறார். அதுவரை நாங்கள் ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் பேசும்போது அன்று தான் சாதித்து இருக்கிறீர்கள் என்று நாங்கள் எடுத்து கொள்கிறோம் என்று பேசிவிட்டு நகர்ந்து விட்டார். எல்லாரும் அதையே ஒத்து போயினர்.
எப்படி நாம் பேசுவதற்கு நியாயம் இருக்கிறதோ அதே போல பேசாமல் இருப்பதற்கும் அவர்களிடத்தில் ஒரு நியாயம் இருக்கும். அதை மதிப்பதில் தவறு ஒன்றும் இல்லையே. அவர் மேலும் ஒரு விஷயம் சொன்னார். காரைக்குடி பக்கம் அந்த மனிதர்கள் சொல்லும் வார்த்தை ரொம்ப முக்கியம் சார். வார்த்தைகள் இலவசமாக கிடைக்கிறதே என்று நிறைய செலவு செய்யாதே என்று சொல்வார்கள். வளரும் நாடுகள் பேச்சைக் குறைக்க வேண்டும் சார் என்றெல்லாம் சொன்னார். எதையாவது பேசி முட்டாளாக இருப்பதற்கு, எதுவுமே பேசாமல் புத்திசாலியாக இருப்பதே மேல் என்று ஒரு மேதை சொன்ன வரிகள் தான் எனக்கு ஞாபகம் வந்தது.