இரவல் எதிரி - முந்தைய பகுதிகள்
“பாலுக்கு பூனை காவலுங்கிற மாதிரி அவனுக்கு நீ உதவியாடா? சந்தேக கேஸிலே உள்ளே வந்ததுக்கே 4 வருஷம் தீட்டிட்டாங்க, நீ என்னடான்னா பெரிய சண்டியர் மாதிரி துள்ளிகிட்டு கிடக்கே.... இதாபாரு சொன்ன வேலையைச் செஞ்சிகிட்டு போட்டதை தின்னுட்டு இருக்கிற இடம் தெரியாம கிடக்கணும். இல்லைன்னா ஆயுசுக்கும் வெளியே போவ முடியாதபடி பண்ணிடுவேன். இன்னைக்கு மாதிரி திடீர்னு கலவரம்னு சொல்லி கத்திப் போட்டுகிட்டு போயிடுவேன் ஜாக்கிரதை. கதையடிக்காம காலாகாலத்திலே தூங்கு நாளைக்கு நீதான் டாய்லெட்டை எல்லாம் கழுவணும் ஆமா...” எச்சரித்துவிட்டு நகர்ந்தான் வார்டன்.
மைக்கேலின் காயத்திலிருந்து வந்த உதிரம் உறைந்துபோய் இருந்தது. ராகேஷ் மெல்ல நிமிர்ந்து பார்த்து சிரித்தான்.
“அதிகாரம் வந்திட்டா புல் கூட அறைக்கூவல் விடுன்னுங்கிறது சரியாத்தான் இருக்கு.”
“அவனை விடுப்பா, அந்த மாரி காசு கொடுக்கிறான் ஜால்ரா போடறான்.”
“உன் பேரு மைக்கேலா... எப்படி இங்கே வந்தே?”
“விதின்னு சொல்லலாம் நம்பிய மனிதர்களின் சதின்னு கூட சொல்லாம். எனக்கு வரலாறு ரொம்ப பிடிக்கும் ஆனா நான் படிச்சது அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங். எல்லா சாம்ராஜ்ஜியங்களும் வீழ்ந்தது துரோகத்தினால்தான். அப்படித்தான் என் அப்பாவும்...” மைக்கேல் கதை சொல்லத் தயாரானான். ஏனோ ராகேஷைப் பார்த்ததும் அவனிடம் எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது மைக்கேலுக்கு !
“ஏன்னு தெரியலை ராகேஷ் உன்கிட்டே எதையும் மறைக்க வேண்டான்னு தோணுது. பார்த்தவுடன் காதல் பத்திக்குன்னு சொல்வாங்களே; அந்த மாதிரி உன்னைப் பார்த்ததும் எனக்குத் தோணுது. அடைச்சி வைச்சிருந்த உணர்வுகளை கொட்டி கவிழ்த்துவிட வேண்டும்ன்னு மனசு துடிக்குது.”
ராகேஷ் கசப்பான ஒரு புன்னகையை விடுவித்தான்.
“பணம் பணம் அதைத்தாண்டி உலகத்தில் ஒண்ணுமேயில்லைன்னு நான் உணர்ந்த காலத்தில் என் கையிலே ஒரு பைசா கிடையாது ராகேஷ். நல்ல வசதியான குடும்பம், தொழில் சமூகத்தில் நல்ல அந்தஸ்துன்னு இருந்த அப்பா தன் சொந்த ரத்த பந்தங்களினாலேயே ஏமாற்றப்பட்டு வீதியில் நின்றார். அந்த வேதனையிலேயே அவர் உயிரும் பிரிஞ்சிப் போச்சு. என்னோட என்ஜினியரிங் முடிவடையும் காலம், சட்டுன்னு பாதாளத்தில் விழுந்த நிலைமை. காக்காய் மாதிரி சொத்துக்கு ஆளாய் பறந்த கூட்டம் எஞ்சியதுன்னு கொடுத்த சில ஆயிரங்களோட ஒரு ஓட்டு வீட்டில் ஊருக்கு ஒதுக்குப் புறத்திலே எங்க வாழ்க்கை ஆரம்பிச்சது.
எப்போவும் பட்டும், வைரமுமாய் ஜொலித்த அம்மா கைத்தறிப் புடவையிலே கூட கம்பீரமாத்தான் இருந்தாங்க ஆனா உருவத்தில் இருந்த துணிவு உள்ளத்தில் இல்லை. சிறைப்பறவையாய் அப்பா அவங்களை எதுவுமே தெரியாம பார்த்துகிட்டதன் பலன் குடும்ப பாரம் எனக்குன்னு ஒரு வருவாய் வருவதற்கு முன்னாடியே சுமத்தப்பட்டு விட்டது.
உனக்கு தெரியுமா ராகேஷ். நான் பணக்கார வீட்டுப்பிள்ளைன்னு அப்போ சுத்தின நட்புகள் எல்லாம், எங்கே நான் ஐஞ்சோ பத்தோ கேட்டு வைக்கப்போறேன்னு ஒதுங்கினாங்க. வாசல்ல செருப்பும், வண்டியும் காத்திருக்க அவனில்லையேப்பா அப்பவே வெளியே போயிட்டான்னு சொன்ன அதே நண்பனோட அம்மா, போன மாசம் எங்க வீட்டுக்கெல்லாம் நீ சாப்பிட வருவியான்னு வருத்தப்பட்டாங்கன்னு சொன்னா நீ நம்புவியா? கொடுமையிலும் கொடுமை நல்லா வாழ்ந்துட்டு அதல பாதாளத்திலே விழறது.
விவரம் தெரியாத அம்மா, வேலையில்லாத நான், எதிர்கால கனவுகளோட தங்கச்சி என் நிலைமை ரொம்பவும் மோசம். ருசியா சாப்பிட்டு பயமில்லாம பொழுதுகளை கழிச்ச நாட்கள் எல்லாம் கனவாகவே போச்சு.” மைக்கேலின் கண்களின் மூலம் காட்சிகள் விரிந்தது.
மஞ்சள் நிற சட்டையின் சுருக்கங்களை நீர் தெளித்து உலோகத் தட்டு அழுந்த அயர்ன் செய்து கொண்டிருந்தான் மைக்கேல், சட்டென்று பவர் கட் ஆனது. ஆனால் அக்கம் பக்கத்து வீடுகளில் டிவியின் இரைச்சல். ஹால், பெட்ரூம், டிராயிங், டிரஸ்ஸிங் ரூம் எல்லாமே ஒன்றென அமைந்திருந்த அந்த வீட்டின் இடது பக்கத்து தடுப்பில் கிச்சன். எட்டிப்பார்த்தது அம்மாவின் தலை. இன்டெக்ஷன் ஸ்டவ் கேஸ் அடுப்பு எல்லாம் காணாமல் போய் அடுப்பு என்பதற்கு ஆதாரமாய் மண்ணெண்ணெய் அடுப்பு, ஒரு பக்கம் பச்சை நிற நெருப்பினை வெளிப்படுத்தி மறுபக்கம் மஞ்சள் என்று நீர்வீழ்ச்சியைப் போல திட்டுத்திட்டாய் எரிந்தது. ஸ்டவ் பின்னுடன் போராடிக் கொண்டு கையில் பாலில்லாத காப்பியைத் தாங்கியபடி, “அம்மா” என்ற அழைப்பிற்கு வெளியே வந்து நின்ற அம்மாவைப் பார்த்தான்.
நீளமான தங்கச் சங்கிலியில் ரோசரியும் காதில் வைரமுமாக ஜொலித்த அவள் இப்போது நிறமிழந்த சித்திரமாக இருந்தாள்.
“இன்னைக்கு என்ன சமைக்கட்டும்?” என்று கேட்டு, விரல் நுனியில் அழுக்குப் படாமல் வந்தோர் போனோர்களெல்லாம், “நல்லா சாப்பிடுங்க...” என்று விருந்தளித்த அவளின் கரங்களில் இன்று அடுப்பங்கரை சற்றே மக்கர் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். பழக்கமில்லாத பிள்ளையைப் பள்ளிக்கு செலுத்தும் நிலைதான் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிறு சூடுகளுக்கு பழகி ஓரளவிற்கு சமைக்க வந்திருக்கிறது.
ஒரு கஞ்சியும் பாலில்லாத டீயும் தான் பிரதான உணவு. அதற்கென்ன செஃப்பிற்கா படித்து வரவேண்டும். இடது பக்கம் தங்கை கிழிந்து போன டாப்ஸின் முனையைத் தைத்தபடி இரண்டொருமுறை கைகுத்திய ஊசியைச் சபித்தபடியே,
“ஏம்மா எல்லா வீட்டுலேயும் கரண்ட் இருக்கே நம்ம வீட்டுலே மட்டும் ஏன்?!”
“கரண்ட் பில் கட்டலை” ன்னு... அவள் சொல்லி முடிப்பதற்குள் கஞ்சியின் நுரைப் பொங்கி அடுப்பை அணைத்துக் கொண்டது.
“அச்சச்சோ இனிமே இந்த பின்னைப் போட்டு அடைப்பை எடுக்கணுமே...” கவலைப் பொங்கிய முகத்தோடு சென்றுவிட்ட அம்மாவிடம் அதற்கு மேல் பேசி பயனில்லை. பாதி கசங்கிய சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான்.
இரண்டு மூன்று இடங்களில் வேலைக்கு சொல்லி வைத்திருந்ததில் ஒரு துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலை காலியாக இருக்கிறது என்று அறிந்து கோடம்பாக்கத்தில் இருக்கும் அந்த இடத்திற்கு எப்படி போவது என்ற யோசனையில் இருந்தான். நேற்று முன்தினம் வரையில் நண்பனின் பைக் இருந்தது சற்றே ஒத்தாசையாக இருந்தது. ஆனால் இனி ஓசியா அதையும் கேட்டால் இருக்கும் கொஞ்ச நஞ்ச நட்பும் கரைந்து போய்விடும் என்று நினைத்து, தானே அதைக் கொண்டு போய் கொடுத்துவிட்டு வந்தான். எப்படியும் அரைமணி நேரமாகும். பையில் ஐந்தும் பத்துமாய் சில்லரைகள் பஸ்ஸில் போய்விடவேண்டும். வேலை கிடைத்ததும் கொஞ்சம் முன்பணம் வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்து சாலையில் இறங்கி நடந்தான்.
“மைக்கேல்.....!” என்ற குரல் காற்றில் மிதந்து வர அவனின் கல்லூரித்தோழன் நீரஜ் புன்னகையுடன் எதிரில், “எப்படிடா இருக்கே?”
“ம்... இருக்கேன்...” விரக்தியாய் வெளியே வந்தது பதில்....!
“கேள்விப்பட்டேன்டா பசங்க சொன்னாங்க நான் ஆறு மாசமா பெங்களூரில் இருந்தேன் இப்போதான் ஜஸ்ட் ஒன்வீக் முன்னாடி வந்தேன். விஷயம் தெரிந்து ரொம்ப சங்கடமாப் போச்சு, இப்போ எங்கே போறே?!”
‘வேலை தேடி’ என்று அவனிடம் சொல்ல சங்கோஜமாக இருந்தது. ஆனால் இவனால் ஏதாவது உதவக் கூடுமே. நண்பர்கள் எல்லாம் தள்ளிப்போன பிறகு அவனாகத்தானே வந்து பேசுகிறானா என்று நினைத்து ஒரு துணிக்கடையில் சேல்ஸ்மேன் வேலைக்கு செல்வதைச் சொல்ல,
“மைகாட்.... என்னடா இது? ராஜா மாதிரி வாழ்ந்த உனக்கு இந்த நிலைமை வரவேண்டாம். உன்கூட கொஞ்சம் பேசணும் வா...” என்று காரை நோக்கி அழைத்துப் போனான்.
“வேண்டாம் நீரஜ் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த வேலையைத் தேடிக் கொண்டிருக்கிறேன், இன்று சரியான நேரத்தில் போய் சேராவிட்டால் அதுவும் பறிபோய்விடும்.”
“அதெல்லாம் யோசிக்காமலா உன்னைக் கூட அழைத்துப் போறேன். உன் பிரச்சனைக்கு என்கிட்டே தீர்வு இருக்கு. வா போகலாம்.” என்று வலுக்கட்டாயமாக அழைத்துப் போனான் நீரஜ்.
இருட்டின் சாயம் பூசிக்கொண்டு வெளிச்சத்திற்காக வெட்கப்படும் காபி ஷாப்பின் மூலையில் மைக்கேலும் நீரஜ்ஜூம் அமர்ந்திருந்தார்கள். 60 நிமிடங்கள் முழுங்கிய 61வது நிமிட ஆரம்பத்தில் நீரஜ் தன்னிடம் என்ன சொல்ல வந்தான் என்பதைப் புரிந்து கொண்டான் மைக்கேல்.
“அப்போ நான் வர்றேன் நீரஜ்” கிளம்பியவனை பைத்தியத்தைப் பார்ப்பதைப் போலப் பார்த்தான்.
“ஏண்டா இத்தனை சொல்லியும் நல்ல வாய்ப்பை உதறிட்டு போகணுமா நீ?!”
“பணத்திற்காக கஷ்டப்பட்டாலும் அப்பாவோட நேர்மைதான் என்னை ஒரு பிடி கஞ்சியாவது குடிக்கும்படி வைத்திருக்கு. அதை நான் இழக்க விரும்பலை நீரஜ். நிச்சயமா இதைப்பற்றி நான் யார்கிட்டேயும் சொல்லமாட்டேன். ஆனா யாரையும் ஏமாத்தி பிழைக்க வேண்டாம் நீரஜ்.” சொல்லிவிட்டு மைக்கேல் வெளியேறி எதிர்பட்ட பஸ்டாண்டின் கூட்டத்திற்குள் தன்னை நுழைத்துக் கொண்டான். நீரஜ் தோளைக் குலுக்கிவிட்டு சர்வருக்கு டிப்ஸையும் பில்லுக்கான பணத்தையும் வைத்துக் கொண்டான்.
காருக்கு வந்தவுடன் பீப்...பீப்... வயர்லெஸ் அடித்தது. “என்னாச்சு இன்னும் சென்னையில் சில புரோக்கர்களை பிடிக்க உன்னால் முடியவில்லையா?!”
“முயற்சிக்கிறேன்....” நீரஜ்ஜின் குரலில் சுரத்தில்லை.
“ரதி டெக்ஸ்டைல்ஸ் ஓனரைப் போய் பாரு.... அவனும் நம்ம பிஸினஸ் பார்ட்டனர்தான் யார் டார்கெட் முடிக்கிறீங்கன்னு பார்க்கலாம்.” ஒயர்லெஸ் துண்டிக்கப்பட, மைக்கேலை “முட்டாள்!” என்று திட்டியபடியே காரைக் கிளப்பினான்.
தொடரும்
-லதா சரவணன்