"இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்ற நான் வாழ்வில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளேன். இந்தியாவில் என்னுடைய வளர்ப்பு சிறப்பாக இல்லாதிருந்தால் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்காது. எனவே இந்தியாவிற்கு நான் அதிகம் நன்றி சொல்லவேண்டும்" எனக் கூறி நெகிழ்கிறார் இந்திரா நூயி.
இந்திரா நூயி... உலகின் பல நாடுகளில் வணிகக்குடை விரித்து சாம்ராஜ்யம் நடத்திக்கொண்டிருக்கும் அமெரிக்க குளிர்பான நிறுவனமான பெப்சி நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. சென்னையில் சாதாரண நடுத்தர பின்புலமுடைய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, 12 ஆண்டுகள் பெப்சி நிறுவனத்தின் சி.இ.ஓ.வாகப் பதவி வகித்தவர்.
சுதந்திர இந்தியாவிற்கு எட்டு வயதாக இருக்கும்போது கிருஷ்ணமூர்த்தி - சாந்தா கிருஷ்ணமூர்த்தி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் இந்திரா நூயி. இன்றைய இந்தியச் சூழல் பெண்களுக்கு அதிகம் சுதந்திரம் அளிக்கக்கூடியதாக இருந்தாலும், அன்றைய சூழல் அவ்வாறாக இருந்திடவில்லை. அதிக கட்டுப்பாட்டு வரைமுறைக்குள் பெண்களை சமூகம் திணித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில், சாத்தியமுள்ள கட்டுப்பாடுகள் அனைத்தையும் உடைத்து வெளியே வந்திருக்கிறார் இந்திரா நூயி. அதற்கு அவர் குடும்பமும் பெருமளவில் ஒத்துழைப்பு நல்கியிருக்கிறது.
சென்னையில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இந்திரா நூயி, எம்.பி.ஏ படிப்பை கொல்கத்தாவில் படித்தார். பின், சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை, மும்பையில் ஜான்சன் ஜான்சன் நிறுவனத்தில் வேலை எனத் தன்னுடைய தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கியிருந்த இந்திரா நூயிக்கு, 1978ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஏல் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க ஸ்காலர்ஷிப் கிடைக்கிறது. அதையடுத்து, அமெரிக்கா சென்ற இந்திரா நூயி, பப்ளிக் அண்ட் பிரைவேட் மேனேஜ்மெண்ட் பிரிவில் முதுகலை பட்டம் பெறுகிறார். மோட்ரோலா உட்பட சில நிறுவனங்களில் வேலை பார்த்துவந்த இந்திரா நூயி, 1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறார். அங்கிருந்து தலைமை நிதி அதிகாரி, இயக்குநர்கள் குழுவில் பொறுப்பு எனப் படிப்படியாக வளர்ந்து 2006ஆம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார்.
"இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து எட்டு ஆண்டுகள் கழித்து நான் பிறந்தேன். காலனி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு அப்போதுதான் புது நாடாக நாம் வளர்ந்து கொண்டிருந்தோம். அந்தச் சமயத்தில்தான் கல்வி, வேலை வாய்ப்புகள் நோக்கி நம் பெண்கள் நகர ஆரம்பித்திருந்தனர். என்னுடைய குடும்பம் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய அதே நேரத்தில் கட்டுப்பாடுகள் நிறைந்த கூட்டுக்குடும்பம். எங்கள் குடும்பத்தின் சிறப்பு என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் சம உரிமை அளிக்கப்படும். என்னுடைய பேத்திகள் நிறைய படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்று எங்களுடைய தாத்தா விரும்பினார். அதனால் எங்களுக்கு நிறைய சுதந்திரம் அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் அது கட்டுப்பாடுகளுடன் கூடிய சுதந்திரமாக இருக்கும். நாங்கள் என்னவெல்லாம் செய்ய விரும்பினோமோ அதற்கான ஒத்துழைப்பு எங்கள் குடும்பத்தினரிடம் இருந்து கிடைத்தது. அந்தக் காலகட்டத்தில் அது பெரிய விஷயம்தான். என்னுடைய அக்கா என் வாழ்வில் மிக முக்கியமானவர். அவரைப் பார்த்துதான் நான் என்னை வளர்த்துக்கொண்டேன். உண்மையில் சொல்லவேண்டுமானால் பெண்கள் திறமைசாலிகள். அவர்களது திறமைகளைச் சரியாகப் பயன்படுத்தாமல் ஏன் நாம் வீணடிக்க வேண்டும்.
பெண்கள் பெரிய பொறுப்புகளுக்கு வர ஆரம்பித்துவிட்டாலும் குடும்பம் சார்ந்து நிறைய கட்டுப்பாடுகள் அவர்களுக்கு உள்ளன. பெப்சி நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயத்தை என் அம்மாவிடம் கூற ஆவலுடன் வீட்டிற்கு வந்தேன். அம்மா உங்களுக்கு ஒரு நல்ல சேதி கொண்டுவந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தபோது, எந்தச் செய்தியாக இருந்தாலும் பரவாயில்லை. முதலில் பால் வாங்கிவிட்டு வா. நாளை காலைக்கு பால் இல்லை என்றார். நான் உடனே அருகில் இருந்த கடைக்குச் சென்று பால் வாங்கிவந்தேன். நான் பெப்சி நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அந்த விஷயத்தை ஆவலுடன் உங்களிடம் கூறவந்தால் முதலில் பால் வாங்கிவிட்டு வா என்கிறீர்களே... என்ன மாதிரியான அம்மா நீங்கள் என்று அவரிடம் கூறியதற்கு அவர் ஒரு பதில் கூறினார். வெளியே நீ பெப்சி நிறுவனத்தின் தலைவராக இருக்கலாம். ஆனால் இந்த வீட்டிற்குள் நுழையும்போது நீ மனைவி, மகள், மருமகள், குழந்தைக்கு தாய் மற்றும் பல. அந்தப் பொறுப்பை வேறு யாரும் எடுத்துக்கொள்ள முடியாது. எனவே அந்தக் கிரீடத்தை வீட்டிற்கு வெளியே கழட்டி வைத்துவிட்டு வா என்றார். உண்மை என்னவென்றால் என் வாழ்க்கையில் அதை நான் ஒருபோதும் கிரீடமாக நினைத்ததில்லை".
இந்திரா நூயி தலைமையில் பெப்சி நிறுவனம் அடைந்த வளர்ச்சி என்பது அளப்பரியது. அவர் சி.இ.ஓ.வாக பதவியேற்கும்போது 35 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அந்நிறுவனத்தின் வருமானம், அவர் அப்பதவியிலிருந்து விலகும்போது 64 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருந்தது. அதேபோல அந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 58.70 டாலரில் இருந்து 108.72 அமெரிக்க டாலராக இரட்டிப்பு வளர்ச்சி கண்டிருந்தது. கடந்த 2018ஆம் ஆண்டு இறுதியில் அப்பதவியில் இருந்து விலகிய இந்திரா நூயி, அமேசான், ஃபிலிப்ஸ் உட்பட உலகின் பல முன்னணி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ளார்.
"நாம் குழந்தைகளாக இருக்கும்போது வானம் ஏன் நீலமாக இருக்கிறது? பறவைகள் ஏன் உயரமாகப் பறக்கின்றன என்று பல கேள்விகள் கேட்டுக்கொண்டே இருந்திருப்போம். ஆனால், வயது அதிகரிக்க அதிகரிக்க புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் குறைந்துவிடுகிறது. வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருங்கள். உங்களுடைய கனவுகளை அடைய கடினமாக உழைத்தும், தியாகங்கள் செய்தும் தொடர்ந்து போராட வேண்டும்..." என வெற்றியின் ரகசியத்தை விவரிக்கிறார் இந்திரா நூயி.
கனவினை நோக்கித் தொடர்ந்து ஓடுவோம்!
பஸ் ஸ்டாண்டில் ஆரஞ்சு விற்று பள்ளிக்கூடம் கட்டிய ஹரேகலா ஹஜப்பாவின் வெற்றிக்கதை | வென்றோர் சொல் #43