தமிழகத்தைப் பொறுத்தமட்டில் வாரிசு அரசியலை கடுமையாக எதிர்த்த கட்சியாக இருந்து, பின்னர் வாரிசு அரசியலுக்குள் சிக்கிக்கொண்ட கட்சி என்று திமுகவைச் சொல்லலாம்.
திமுகவில் அண்ணாவுக்கு நெருக்கமாக வளர்ந்த கலைஞர், தனது மருமகன் முரசொலி மாறனும் அவருடைய கைப்பிடித்தே வளர்ந்தார். அண்ணா ஆதரவுடன் அவருடைய வளர்ச்சியை அண்ணாவும் ஆதரிக்கவே செய்தார். நெடுஞ்செழியன் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விலகிய நிலையிலேயே கலைஞரை பொதுச்செயலாளர் பதவிக்கு ஆதரிக்கும் அளவுக்கு அண்ணா ஆர்வமாக இருந்தார் என்பதையும், ஈவிகே சம்பத், கண்ணதாசன் உள்ளிட்ட சிலர் கலைஞர் பொதுச்செயலாளர் ஆவதை எதிர்த்தனர் என்பதையும் திராவிட இயக்க வரலாறு பதிவு செய்திருக்கிறது. அந்த எதிர்ப்பைச் சமாளிக்கவே அண்ணா மீண்டும் பொதுச்செயலாளராகவும் கலைஞர் பொருளாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
1967 ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா தென் சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். ஆனால் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் அவர் தனது எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு முதல்வரானார். அதைத்தொடர்ந்து அந்தத் தொகுதியில் கலைஞரின் மருமகன் என்றாலும் முரசொலி மாறனுக்கு வாய்ப்பளித்தார் அண்ணா.
அப்போதிருந்து தனது மனச்சாட்சியாக முரசொலி மாறனை அருகிலேயே வைத்திருந்தார் கலைஞர். எம்ஜியார் திமுகவின் பொருளாளராக இருந்த நிலையில், அவருக்கு அமைச்சராகும் ஆசையும் இருந்தது. ஆனால், அமைச்சரானால் நடிக்க முடியாது என்ற நிபந்தனை அவருடைய ஆசைக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. இந்நிலையில்தான், 1971ல் வரலாறு காணாத வெற்றியை கலைஞர் தலைமையில் திமுக பெற்றது. 1967 தேர்தலில் எம்ஜியார் சுடப்பட்டதால் கிடைத்த அனுதாப வாக்குகளால்தான் திமுக வெற்றி பெற்றது என்று கூறியவர்கள், 1971ல் கலைஞர் தலைமையில் திமுகவுக்கு கிடைத்த வெற்றியால் மிரண்டனர். இந்நிலையில்தான், கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். அதுவும் எம்ஜியார் பாணியிலேயே, அறிமுகமானார். அவருடைய சினிமா நுழைவை எம்ஜியாரும் ஆதரித்தார். படப்பிடிப்பையே எம்ஜியார்தான் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.
1972 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டுப் பேரணியின் முகப்பில் மு.க.முத்து குதிரையில் திமுக கொடிபிடித்து வந்தார். அந்த மாநாட்டில் திரண்ட கூட்டத்தினர் மத்தியில் தலைவர்களுடன் எம்ஜியாரும் பங்கேற்று முழங்கினார். இந்தியை தமிழகத்தில் திணிக்க முயன்றால் ராணுவத்தையும் சந்திக்கத் தயார் என்று ஆவேசமாக முழங்கினார் எம்ஜியார்.
1970 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்று சட்டமியற்றினார் கலைஞர். 1971 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று கலைஞர் அரசு தீர்மானம் கொண்டுவந்தது. இந்தச் சட்டங்கள் பிராமணர்களின் தனியுரிமையை பறிப்பதாக உணர்ந்தனர். ஆனாலும், 1972 தேர்தலில் திமுக அசுரபலத்துடன் வெற்றிபெற்று கலைஞர் இரண்டாவது முறையாக முதல்வரானார். இது தமிழக பிராமணர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. பிராமணர்கள் காலங்காலமாக அனுபவித்த உரிமைகளை திமுக அரசு படிப்படியாக பறித்துவந்தது. அரசுத்துறைகளில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தோர் ஏராளமாக பணிநியமனம் பெற்றனர்.
இந்நிலையில் திமுகவை உடைக்க எம்ஜியாரை பயன்படுத்த முடிவெடுத்தனர். அந்த நேரத்தில் எம்ஜியார் உலகம் சுற்றும் வாலிபன் என்ற சினிமாவை எடுத்துக் கொண்டிருந்தார். அதில் அனுமதிக்கப்பட்ட அன்னியச் செலாவணி அளவைத் தாண்டி செலவுசெய்ததாக எம்ஜியார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை மத்திய அரசு கையில் எடுத்தது. அதுபோக, எம்ஜியாரின் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரவே கலைஞர் தனது மகனை சினிமாவில் புகுத்தியிருக்கிறார் என்று எம்ஜியாருக்குள் பற்றவைத்தார்கள். எம்ஜியாரை அச்சுறுத்துவதிலும், அவரை திமுகவுக்கு எதிராக குழப்புவதிலும், அன்றைக்கு இந்திராவை ஆதரித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கல்யாணசுந்தரமும், ஆனந்தவிகடனில் பணியாற்றிய எழுத்தாளர் மணியனும் முக்கிய பங்காற்றினார்கள்.
அதுபோக, மத்திய அரசின் வருமானவரித்துறை உள்ளிட்ட துறைகளும் எம்ஜியாரை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்டன. இதையடுத்து, திடீரென்று எம்ஜியார் திமுகவுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக தெரிவித்தார். திமுகவின் மாநாட்டுக் கணக்கை இதுவரை தன்னிடம் ஒப்படைக்கவில்லை என்றும், கட்சியிலும் ஆட்சியிலும் ஊழல் மலிந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். கலைஞர் தனது மகனுக்கு பட்டம்சூட்ட விரும்புகிறார் என்பதும் எம்ஜியாரின் புகார்களில் ஒன்றாக இருந்தது. இதன் தொடர்ச்சியாக அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
எம்ஜியார் நீக்கப்பட்ட பிறகும் மு.க.முத்து சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், திமுகவிலிருந்து விலகிய எம்ஜியார் அடுத்த சில ஆண்டுகளில் தனது திரைத்துறை செல்வாக்கை இழந்தார். 1977ல் ஆட்சியைப் பிடித்து முதல்வரானார்.
இடையில், 1975ல் இந்தியாவில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் இந்திரா. நெருக்கடி நிலையை கடுமையாக எதிர்த்த திமுக அரசின் பதவிக்காலம் இரண்டு மாதங்கள் இருந்த நிலையில் அதைக் கலைத்தார். திமுக நிர்வாகிகளை காரணமே இல்லாமல் சிறையில் அடைத்தார். கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் திமுகவில் இருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்தால் விடுதலை என்று திமுக நிர்வாகிகளுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. எப்போது விடுதலை ஆவோம் என்று தெரியாத நிலையில் குடும்பத்தினரை பிரிந்து சிறையில் சித்திரவதை அனுபவிக்கவும் தயங்காத நிர்வாகிகள் அந்த நிபந்தனையை ஏற்கவில்லை.
1977ல் நெருக்கடி நிலை திரும்பப்பெறப்பட்டது. கொடூரமான அடக்குமுறைகளால் திமுக அழிந்து போயிருக்கும் என்று கருதப்பட்ட நிலையில், திமுக 48 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது. எம்ஜியார் தலைமையிலான அதிமுக 131 இடங்களில் வெற்றிபெற்றது. அந்தக்கட்சி தலைமையிலான அணி 52 லட்சம் வாக்குகளையும், திமுக தனித்து 43 லட்சம் வாக்குகளையும் பெற்றது. அதாவது திமுக தனது வாக்கு வங்கியை பெரிய அளவில் இழந்துவிடவில்லை என்பது தெளிவாயிற்று. கட்சியை இந்த அளவுக்கு கட்டிக் காப்பாற்றியதில் கலைஞரின் பங்கை பெரும்பாலான நிர்வாகிகள் ஏற்றனர். ஆனால், நெடுஞ்செழியன் உள்ளிட்ட சிலர் ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
அப்படிப்பட்ட இக்கட்டான நிலையிலும் ஏராளமான கட்சி நிர்வாகிகளும் கலைஞரின் தலைமை ஏற்று தொடர்ந்தனர். திமுகவின் வாக்கு வங்கியை வளர்க்கும் விதத்தில் கலைஞர் பல்வேறு வியூகங்களை வகுத்தாலும், கட்சியின் இளைஞர் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் 1980 ஆம் ஆண்டு திமுக இளைஞர் அணியை தொடங்கினார். அந்த அணியின் மாநில அமைப்பாளராக மு.க.ஸ்டாலினை நியமித்தார். இதன்மூலம் திமுகவில் மீண்டும் கலைஞரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கட்சிப் பதவிக்கு வந்தார்.
ஆனால், சிறு சிறு சலசலப்புகளுடன் ஸ்டாலின் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்தார். தமிழகம் முழுவதும் அவர் இளைஞர் அணிக் கிளைகளை அமைத்து தலைமையின் பாராட்டைப் பெற்றார். 1984 தேர்தலில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இந்திரா சாவு, எம்ஜியார் நோவு என்ற அனுதாப அலையில் ஸ்டாலின் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதே தொகுதியில் மேலும் 6 முறை போட்டியிட்டு 4 முறை ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார். சென்னை மேயராக இருமுறை பதவியேற்றிருக்கிறார். மேயராக இருந்தசமயத்தில் அவருடைய முயற்சியால் சென்னையில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் இன்றைய சென்னையின் போக்குவரத்தை பெரும்பகுதி எளிதாக்கியிருக்கிறது. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் பொறுப்பேற்று சிறப்பாக செயல்பட்டார்.
இதற்கிடையே, 1992 ஆம் ஆண்டு திமுகவில் ஸ்டாலினுக்கு முடிசூட்ட கலைஞர் திட்டமிட்டிருப்பதாக வைகோ தலைமையில் ஒரு பகுதியினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கட்சியைவிட்டு நீக்கப்பட்டனர். அப்போதிருந்து திமுகவின் உள்கட்டமைப்பில் மாறுதல்கள் செய்யப்பட்டன. நெருக்கடியான காலகட்டங்களில் தொல்லைகளைத் தாங்கி கட்சியை பாதுகாத்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பொறுப்புகளை வழங்கும் போக்கு தொடங்கியது.
2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முரசொலி மாறன் மரணமடைந்தார். இதையடுத்து 2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவருடைய மகன் தயாநிதி மாறனுக்கு திமுக வாய்ப்பளிக்கப்பட்டது. கட்சிக்காக உழைத்தவர்களின் குடும்பங்களில் தகுதிவாய்ந்தோருக்கு தகுதிவாயந்த பொறுப்புகள் அளிக்கப்படும் என்று கலைஞர் அறிவித்தார்.
கட்சிக்காக கஷ்டங்களை அனுபவித்தோரின் வாரிசுகள்தான் கட்சிமீது உண்மையான பற்றுடன் இருப்பார்கள் என்று கட்சி நினைக்கிறதா? புதிதாய் வருவோரை கட்சி நம்பவில்லையா என்ற விமர்சனம் எழுந்தது. அப்படியில்லை என்றும் கட்சிமீது உண்மையான விசுவாசம் கொண்டு காலங்காலமாக கட்சிக்காக உழைக்கிற குடும்பங்களுக்கு மரியாதை கொடுப்பதுதான் முக்கிய காரணம் என்றும் திமுக தலைமை தெரிவித்தது. இத்தகைய போக்கு திமுகவில் உழைப்போருக்கு உரிய மரியாதை கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.
அந்த வகையில்தான் கலைஞரின் மகள் கனிமொழி, மகன் அழகிரி ஆகியோருக்கு கட்சிப் பொறுப்புகளும், எம்.பி., அமைச்சர் பொறுப்புகளும் வழங்கினார் கலைஞர். அதுபோலவே அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வெ.தங்கப்பாண்டியன் மகன் தங்கம் தென்னரசு, மகள் தமிழச்சி தங்கப்பாண்டியன், பொன்முடி மகன் கவுதம் சிகாமணி, ஐ.பெரியசாமி மகன் செந்தில்குமார், தூத்துக்குடி பெரியசாமி மகள் கீதா ஜீவன், ஆலடி அருணா மகள் பூங்கோதை, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த், ஆர்க்காடு வீராசாமி மகன் கலாநிதி வீராசாமி என திமுகவின் முக்கிய நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இதன் உச்சமாக, திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினையும் இந்த தேர்தலில் களம் இறக்கியது திமுக. ஆனால், கலைஞர் ஸ்டாலினை கட்சியில் ஈடுபடுத்தியபோது எழுந்த முணுமுணுப்புகூட உதயநிதியின் அரசியல் பிரவேசத்தில் எழவில்லை என்பதிலிருந்தே திமுக வாரிசு அரசியலை அங்கீகரித்துவிட்டது என்பதற்கு அடையாளமாக கருதப்படுகிறது. அதற்கு ஏற்றபடி ஸ்டாலினைக் காட்டிலும் சிறப்பாகவே புதிய கூட்டத்தை ஈர்ப்பதிலும், சரளமாகவும் எதார்த்தமாகவும் பேசி அசத்தி தன்னுடைய இடத்தை தக்கவைத்துள்ளார் உதயநிதி என்கிறார்கள் திமுகவினர்.
(மற்ற தமிழக கட்சிகளில் வாரிசுகள் பற்றியும் பார்க்காலம்)