நம் 'முதல்வரை தெரியுமா' தொடரில் இந்தியா முழுவதுமுள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் நடந்து புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படும்பொழுது புதிதாகப் பதவியேற்கும் முதல்வர் குறித்தும் அந்த மாநிலத்தின் அரசியல் வரலாறு குறித்தும் சுருக்கமாகப் பார்த்து வருகிறோம். ஒரு இடைவெளிக்குப் பிறகு, சமீபத்தில் தேர்தல் நடந்த ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்கள் குறித்துக் காணலாம். மஹாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி குழப்பங்கள் முடிவுக்கு வராத நிலையில், ஹரியானாவில் தன் பாணியில் சுமூகமாக ஆட்சி அமைந்துவிட்டது பாஜக.
இந்தியாவின் தலைநகரமான டெல்லிக்கு அருகில் உள்ள மாநிலம் ஹரியானா. மனித உடலில் மூக்கு எங்குள்ளதோ, அதேபோல்தான் இந்திய வரைப்படத்தில் மூக்காக அடையாளப்படுத்தப்படும் மாநிலம் ஹரியானா. ஹரியானா என்பது கடவுளின் வசிப்பிடம் என்கிறார்கள். கடவுள் மட்டுமா அங்கே வசிக்கிறார் என்றால் ஆட்சி அதிகாரத்துக்காக கடவுளையே விலைபேசி விற்பவர்களும் அந்த மாநிலத்தில் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானாவின் தலைநகரம் சண்டிகர்தான், பஞ்சாப் மாநிலத்திற்கும் தலைநகரம். அதாவது இரண்டு தலை ஒரு வாய் என்பது போல். ஒரு காலத்தில் பஞ்சாப் மாகாணத்தோடு இருந்த பகுதியைத்தான் 1966ல் பிரித்து ஹரியானா என்கிற மாநிலம் உருவாக்கப்பட்டது. மாநிலம் பிரிக்கப்படும்போது சண்டிகர் நகரை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என இரண்டு மாநில மக்களும் முட்டிக்கொண்டனர். கடைசி வரை யாருக்கு தீர்வு என்பது வராததால் சண்டிகரை, இரு மாநிலத்தவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்து சண்டிகரை தனி ஒன்றிய பிரதேசமாக்கிவிட்டார்கள். தலைநகரத்துக்காக சண்டை போட்டுக்கொண்டது போல், இன்னொரு விவகாரத்திலும் இந்த மாநில மக்கள் முட்டிக்கொண்டு மோதினார்கள். அது மொழி பிரச்சனை.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பிரிந்தாலும் ஹரியானாவில் இந்தி அலுவல் மொழியாக்கப்பட்டது. பஞ்சாபி பேசியவர்கள் அதிக அளவில் இருந்தனர். அதனால் இந்தியோடு பஞ்சாபியை இரண்டாவது அலுவல் மொழியாக்க வேண்டும் என குரல் கொடுத்தனர். இந்தி பேசுபவர்களே தலைமை பதவிகளில் அதிக அளவில் இருந்ததால் அவர்களால் பஞ்சாபி வளர்வதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்காக ஒரு திட்டம் வகுத்தார்கள். அப்போது, தமிழகத்தில் இந்திக்கு எதிராக போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. எங்களுக்கு தமிழ் மீது எவ்வளவு பாசம் பாருங்கள் எனக்காட்ட வேண்டும் என்பதற்காக, (உண்மையில் பஞ்சாபியை ஹரியானாவில் இருந்து விரட்ட வேண்டும் என்பதற்காக) ஹரியானாவின் இரண்டாவது அலுவல் மொழியாக தமிழை அறிவித்தார் அப்போது முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்சால். அலுவல் மொழியாக இருந்தாலும், அது நடைமுறையில் கிடையாது. இத்தனைக்கும் அந்த மாநிலத்தில் சுமார் 15 ஆயிரம் என்ற அளவிலேயே தமிழர்கள் இருந்தார்கள். 2010ல் தமிழுக்கு பதில் இரண்டாவது அலுவல் மொழியாக பஞ்சாபியை அறிவித்துள்ளார்கள்.
இந்த மாநிலத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 85 சதவிதம் பேர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள், 8 சதவிதம் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்தவர்கள். மீதியுள்ள 7 சதவிகிதமே மற்ற மதத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். உலகத்தின் பிரபல பல நிறுவனங்களுக்கு ஹரியானாவில் தொழிற்சாலை உண்டு. அதேபோல் புகழ்பெற்ற கைத்தறி ஆடைகளுக்கு ஹரியானாவின் பானிபட் நகரம் பிரசித்திபெற்றது. இத்தனை பெரிய தொழிற்சாலைகள், அதன் அலுவலகங்கள் ஹரியானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தாலும் விவசாயம்தான் இந்த மாநிலத்தின் முக்கிய தொழில்.
ஹரியானா சட்டமன்றத்தில் 90 இடங்கள் உள்ளன. இதில் 46 இடங்களை பிடிப்பவர்கள் அரியணையில் ஏற முடியும். வெற்றியை தீர்மானிப்பவர்களில் இந்துக்களின் ஜாட் சாதியை சேர்ந்தவர்களே பிரதானம். 30 சதவிதம் அச்சாதியை சேர்ந்தவர்களே. அதற்கு அடுத்ததாக பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். மாநிலத்தில் 15 ரிசர்வ் தொகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. யார் வெற்றி பெற்றாலும் லால்களை ஒதுக்க முடியாது. இந்தியாவின் துணை பிரதமராக இருந்தவர் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் நிறுவனர் சௌத்ரி தேவிலால். ஹரியானாவின் மிக முக்கிய பலம் வாய்ந்த சாதியான ஜாட் சமுதாயத் தலைவர்களுள் மிக முக்கியமானவர் தேவிலால். இவர்களது குடும்பத்தை தவிர்த்துவிட்டு ஹரியானாவின் அரசியல் வரலாற்றை எழுதிவிட முடியாது. அந்தளவுக்கு மாநிலத்தில் நங்கூரம் பாய்ச்சி அமர்ந்துள்ளார்கள்.
தேவிலால்க்கு நான்கு மகன்கள். அதில் கடைசி மகன் இளம் வயதிலேயே இறந்துவிட்டார். மற்ற மகன்கள் பிரதாப் சிங், ஓம் பிரகாஷ் சௌதாலா, ரஞ்சித் சிங். சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைவாசங்களை அனுபவித்தவர்களான தேவிலாலும் அவரது சகோதரர் சகிப்ராமும் காங்கிரஸ் கட்சியில் தீவிரமாக இயங்கினர். சுதந்திரக்கு முன்பே காங்கிரஸ் கட்சி சார்பில் தேவிலாலின் இளைய சகோதரர் சகிப் ராம், எம்.எல்.ஏவாகத் தேர்வாகி மக்கள் பணியாற்றினார். சுதந்திரக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் இயங்கி வந்த ஒருமைப்பாட்டு கட்சி என்கிற கட்சியில் இணைந்து செயல்படத் துவங்கினார்கள். சுதந்திரத்துக்குப் பின்பு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள விவசாயிகளின் பெருந்தலைவராக தேவிலால் மாறினார். விவசாயிகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தினார், வைத்த கோரிக்கைகளில் வெற்றியும் பெற்றார். இந்நிலையில்தான் தனி மாநில கோரிக்கை, போராட்டமாகத் தீவிரமடைந்தது.
தமிழக மக்களுக்கு வாரிசு அரசியல் புதிதல்ல. ஆனால், நாமே வியக்கும் அளவுக்கான வாரிசு அரசியல், குடும்ப அரசியல் அங்கு நடக்கிறது. அந்தக் கதையையெல்லாம் தொடர்ந்து படிக்க...
அடுத்த பகுதி...
மாநிலத்தின் பாதி தொகுதிகள் குடும்பத்துக்கு, மீதிதான் கட்சிக்கு!