Skip to main content

டிஜிட்டல் சதுரங்க வேட்டை: 18+ வீடியோக்களால் சிக்கிய முதியவர்.. பகுதி – 20

Published on 12/05/2023 | Edited on 12/05/2023

 

Digital Cheating part 20

 

‘செக்ஸ்டார்ஷன்’ என்பது ஆபாச படங்கள், ஆடியோக்கள், ஃலைவ் வீடியோக்கள் மூலமாக ஒருவரை வீழ்த்தி, அதாவது அவர்களை பார்க்க வைத்து மிரட்டி பணம் பறிப்பது. தனி மனிதர்கள் இருவர் இணையத்தில் பார்க்கும் 18+ வீடியோக்கள், பேச்சுகள் அடங்கிய ஆடியோக்கள் இவர்களுக்கு எப்படி கிடைக்கின்றன?

 

புனேவைச் சேர்ந்த 61 வயதான பெரியவர் மாநில அரசு வேலை ஒன்றில் நல்ல பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் அமெரிக்காவில் செட்டிலானதால் அவரும் மனைவியும் மட்டுமே அந்த பங்களாவில் வசிக்கின்றனர். வேலையில் இருந்து ஓய்வு பெற்றபோது வந்த செட்டில்மெண்ட் பணத்தினை வங்கியில் டெபாசிட் செய்துவிட்டு அதிலிருந்து வரும் வட்டி, பென்ஷன் போன்றவற்றை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்திக்கொண்டு ஹாயாக மனைவியுடன் வீட்டில் இருந்துவந்தார். 

 

முன்பெல்லாம் காலையில் தினசரி பேப்பர் படிப்பார். இப்போது ஆள்காட்டி விரல் ரேகை அழியும் அளவுக்கு மொபைலை தேய்த்துக்கொண்டே இருந்தார். வாட்ஸ்ஆப், முகநூலில் பிஸியாக இருந்துவந்தார். ஒருநாள் அவரது வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்துள்ளது. ‘உங்கள் வாழ்க்கையையே மாற்றும் வல்லமை கொண்ட இன்வெஸ்ட்மெண்ட் ப்ளான்’ என தலைப்பிடப்பட்டு வந்த அந்த லிங்க்கை அவர் ஒப்பன் செய்ததும் 18+ வெப்சைட்டுக்குள் போனது. 

 

மனிதர்களின் இச்சையைத் தூண்டும் வகையில், பெண்களின் அரை நிர்வாணப் படங்களை பார்த்ததும் அவருக்கு இன்னும் பார்க்கணும், இன்னும் பார்க்கணும் என ஆசை ஏற்பட்டது. இதுபோன்ற வீடியோக்களை ஃலைவ்வாக பார்க்க வேண்டுமா உள்ளே செல்லுங்கள் என்றது. இவரும் லைவ் வீடியோ சாட் பகுதிக்கு போயுள்ளார். ஆடையில்லாத பெண் ஒருவரின் வீடியோவை பார்க்கத் துவங்கினார். பிறகு அவருக்கு மர்ம நபர்கள் போன் மூலம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கத் துவங்கினர். அந்த ஓய்வு பெற்ற அதிகாரி போலீஸில் புகார் தர, புகாரை சைபர் க்ரைம் போலீஸ் விசாரித்தது. 

 

அந்த ரிட்டயர்டு அரசு அதிகாரியிடம் சைபர் கிரைம் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனல் பாட்டீல் விசாரித்தபோது, ‘நீ 18+ வீடியோ பார்த்த. வீடியோ என்னிடம் இருக்கு. 2 லட்சம் தரனும்னு கேட்கறாங்க. நான் முடியாதுன்னு சொல்லிட்டன். பணம் கேட்டு டார்ச்சர் செய்யறாங்க’ எனச் சொல்லியுள்ளார்.

 

இதேபோல், கேரளா பரப்பங்கடியில் காய்கறி மொத்த விற்பனையாளரான மொய்தீன் குட்டி, ‘என்னோட வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவோம் என மிரட்டி 32 ஆயிரம் ஏமாற்றிவிட்டார்கள்’ என 2022 மே 30 ஆம் தேதி கேரளா மாநில ஃசைபர்செல் பிரிவில் புகார் தந்தார். 

 

அவரை அமரவைத்து என்ன நடந்தது என விசாரிக்கத் துவங்கினர். ‘நான் பேஸ்புக்கில் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருநாள் என்னுடைய பேஸ்புக் சாட்டில் ஒரு லிங்க் வந்தது. என்னவென அதனை ஓப்பன் செய்தேன். பெண்கள் நிர்வாணமாக நடனமாடும் வீடியோ அதில் இருந்தது; அதைப் பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு என்னை தொடர்புகொண்ட ஒருவர், ‘நீ 18+ வீடியோ பார்த்துக்கொண்டு என்ன செய்தாய் என்கிற வீடியோ எங்களிடம் உள்ளது. பணம் தந்தால் வீடியோவை அழித்துவிடுவோம். இல்லையேல் நீ பார்க்கும் அதே பேஸ்புக்கில் வெளியிடுவோம் எனச்சொல்லி 32 ஆயிரம் பணம் வாங்கினார்கள். இப்போது மீண்டும், மீண்டும் பணம் வேணும் எனக் கேட்டு மிரட்டுகிறார்கள்’ என கண் கலங்கினார். 

 

இவர்கள் 18+ வீடியோ பார்ப்பது அவர்களுக்கு எப்படி தெரிந்தது என கேரளா, மகாராஷ்டிரா சைபர்செல் அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. அவர்கள் பார்த்த வெப்சைட் அட்ரஸ்களை வாங்கி சோதித்தபோது அது 18+ வெப்சைட் என்பது உறுதியானது. இந்தியாவில்தான் அது பதிவாகி உருவாக்கப்பட்டது. அதிலிருந்த வீடியோக்கள் உள்நாடு, வெளிநாடு என கலந்து கட்டி இருந்தன. 

 

கேரளா போலிஸ் 5 மாதங்களாக பணத்தை ஏமாற்றியவர்களைப் பிடிக்கத் திட்டமிட்டு வேலை செய்துகொண்டு இருந்தது. மகாராஷ்டிரா போலிஸ் ஓய்வு பெற்ற அந்த அரசு அதிகாரியை வைத்தே ஆப்ரேஷனுக்கு திட்டமிட்டமிட்டது. முகநூல் சாட் வழியாக முகம் தெரியாத அந்த பேஸ்புக் நண்பனுக்கு அவரையே மெசேஜ் செய்யவைத்துள்ளது. ‘நான் இனிமே ஃபேஸ்புக்கே வரமாட்டேன். என்னுடைய பர்சனல் மொபைல் எண் இதுதான். இனிமே எதுவாயிருந்தாலும் இந்த நம்பருக்கு போன் பண்ணு’ என அந்த கும்பலுக்கு வலையை விரித்துள்ளது. அந்த மர்ம நபர்கள், ‘நீ போலிஸ்க்கு போனன்னா உன் வீடியோவை நெட்ல போட்டுடுவன்’ என சொல்லியுள்ளது. ‘அய்யய்யோ அப்படியெல்லாம் செய்துடாத. நான் போலிஸ்க்கெல்லாம் போகமாட்டேன், நான் அதிகாரியா இருந்து ரிட்டயர்டு ஆனவன், எனக்கு என் மரியாதை முக்கியம்’ எனச் சொல்லியுள்ளார். இதனை அந்த மர்ம நபர் நம்பியுள்ளான். 

 

‘பணம் ட்ரான்ஸ்பர் செய்கிறேன் எந்த வங்கிக் கணக்குக்கு ட்ரான்ஸ்பர் செய்ய வேண்டும்’ எனக் கேட்டார். அவன் தனது பர்சனல் எண்ணில் இருந்து வங்கி குறித்த தகவலை இவரது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் செய்துள்ளான். அந்த மொபைல் எண்ணின் முகவரியை நெட்ஒர்க் கம்பெனியிடம் இருந்து மும்பை சைபர் க்ரைம் போலிஸ் வாங்கினர். வங்கிக் கணக்கு எண்ணை வைத்து சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து வாங்கிய முகவரி இரண்டும் ஒன்றாக இருந்தது. பெயரும் ஒன்றாக இருந்தது. அதுவெல்லாம் ராஜஸ்தான் முகவரியில் இருந்தது. 

 

அதேபோல், கடந்த அத்தியாயத்தில் பார்த்தோமே, தற்கொலை செய்துகொண்ட அந்த புனே இளைஞர் பணம் அனுப்பிய வங்கி முகவரியும் கிடைத்தது. அவன் வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்ட புரோக்கர். அவனை தூக்கி வந்து காவல்நிலையத்தில் வைத்து விசாரித்தது. அவன் சொன்ன தகவல்களைக் கேட்க கேட்க போலிஸார் அதிர்ச்சியடைந்தனர். மகாராஷ்டிரா க்ரைம் பிரிவின் தனிப்படை போலிஸார் வேன் எடுத்துக்கொண்டு ராஜஸ்தானுக்கு புறப்பட்டனர்.

 

கேரளா மாநில ஃசைபர்செல் போலிஸார், பரப்பங்காடியை சேர்ந்த மொய்தீன் குட்டியின் புகாரை தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். 5 மாத தொடர் விசாரணையில், ஏமாற்றியவனின் வங்கிக் கணக்குக்கு சென்ற பணத்தினை வைத்து ட்ரேஸ் செய்ததில் அவனின் பெயர், முகவரி, போட்டோ, வங்கிக் கணக்கில் உள்ள மொபைல் எண் போன்றவற்றின் நகல்களை வங்கி நிர்வாகம் அனுப்பி வைத்தது. தங்களிடம் கிடைத்துள்ள முகவரிகளை எடுத்துக்கொண்டு கேரளா சைபர்செல் பிரிவு போலிஸ், க்ரைம் பிரிவு போலிஸ் டீம் ராஜஸ்தானுக்கு ரயில் ஏறியது. 

 

புறப்பட்ட இரண்டு மாநில டீம்களுக்கும் பல கேள்விகள் இருந்தன. இணையத்தில் இவர்கள் பார்த்த 18+ வீடியோக்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தன? அவர்கள் அவர்களது அறையில் மேலாடை இல்லாமல் இருக்கும் காட்சிகளை இவர்கள் எப்படி எடுத்தார்கள்? என்கிற கேள்விகள் மண்டையை குடைந்தன.  

 

வேட்டை தொடரும்…