முதல் பெண் துப்பறிவாளர் மாலதி, தான் துப்பறிந்த வழக்குகளில் உள்ள சுவாரசியமான விஷயங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டு வருகிறார். அந்த வகையில், ஒரு சம்பவத்தைப் பற்றியும், அதில் நடந்தவற்றையும் விவரிக்கிறார்.
ஒருவர் தனக்கு பழக்கமான ஒரு நபரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த பின்னர் என்னை சந்திக்க வந்தார். நடந்ததை கேட்டபோது, அவரது குழந்தையும், ஏமாற்றியவரின் குழந்தையும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். எதிர்பாராத சந்திப்பின் காரணமாக இருவரும் பழகினோம் என்றார். மேலும் அந்த நபர் பணம் கொடுத்தால் மட்டும் போதும் வேலை செய்யாமலே லாபம் பார்க்கலாம் என்ற ஒரு பிசினஸை அறிமுகப்படுத்தியிருக்கிறார். நன்றாக தெரிந்தவர்தான், ஏமாற்ற மாட்டார் என்று முதலில் ரூ.45 லட்சத்தை கொடுத்துள்ளார்.
அதன் பிறகு, அந்த ரூ.45 லட்சத்தை அவர்களே வைத்துக்கொண்டு ரூ.10 லட்சத்தை இவருக்கு கொடுத்திருக்கிறார்கள். இதனால் முன்பு கொடுத்த தொகையுடன் சேர்த்து ரூ.55 லட்சம் வருமானம் வந்ததுள்ளதால் வேலையை ஒரு பக்கம் செய்துகொண்டு இதில் வருமானத்தை ஈட்ட முக்கியத்துவம் கொடுத்து மீண்டும் ரூ.15 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதையடுத்து மேலும் லட்சக்கணக்கில் ஒரு தொகையை இவருக்கு அனுப்பி இருக்கின்றனர். நல்ல வருமானம் வருகிறது என்ற பேராசையில் தொடர்ந்து வங்கி மூலம் பண பரிமாற்றம் நடந்திருக்கிறது. மேலும், தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து மொத்தமாக இதுவரை ரூ.85 லட்சத்திற்கு பணம் கொடுத்துள்ளார். அவர்களும், பதிலுக்கு ஒரு காசோலை கொடுத்துள்ளனர். ஒரு நாள் இவர் அந்த காசோலையை எடுத்துக்கொண்டு வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது, அந்த காசோலை போலியானது என்று தெரிய வந்ததிருக்கிறது. இதையடுத்து இந்த பிசினஸை அறிமுகப்படுத்திய அந்த நபருக்கு கால் செய்திருக்கிறார். ஆனால் தொடர்புகொள்ளமுடியாத வகையில் இருந்திருக்கிறது. இதையெல்லாம் கேட்ட பிறகு, அந்த நபர் யார் என்பதை கண்காணிக்க என் குழுவிலிருந்து சிலரை அனுப்பினோம்.
அந்த நபரின் பின்னணியில் பெரிய நெட் ஒர்க் செயல்பட்டு வந்திருந்ததால் முதலில் அந்த நபரை ரீச் ஆக முடியவில்லை. பிறகு விசாரிக்க, சொன்னவரின் குழந்தையும் ஏமாற்றிய நபரின் குழந்தையும் ஒரே பள்ளியில் படித்ததாக கூறியதால் அதை துப்பாக வைத்துக்கொண்டு அந்த நபர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தோம். அந்த நபர் அப்பார்ட்மண்ட் குடியிருப்பில் இருந்ததால் சரிவர உள்ளே சென்று விசாரிக்க முடியாமல் இருந்தது. ஏனென்றால் இது போன்ற குடியிருப்பில் வசிப்பவர்களை பார்க்க சென்றால் நாம் பார்க்கும் நபரின் சீக்ரெட் நம்பரை குடியிருப்பு பாதுகாவலரிடம் சொல்ல வேண்டும் அப்போதுதான் உள்ளே செல்ல அனுமதிப்பார்கள். இதற்கு மேல் அந்த நபரை கண்காணிக்க முடியாத நிலையில் அந்த நபர் இருக்கும் இடத்தை மட்டும் கூறி விசாரிக்கச் சொன்னவரை போலீசாரிடம் புகார் அளிக்க சொன்னோம். ரூ.1 கோடிக்கும் குறைவான தொகை ஏமாற்றம் அடைந்ததால் நீதிமன்றம் அலைய அவசியம் இருக்காது தைரியமாக புகார் கொடுங்கள் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். அதன் பிறகு போலீசார் இந்த வழக்கை விசாரித்து பணத்தை மீட்டுக்கொடுத்தனர். இதுபோன்ற தொழிலில் நிறைய பெண்களை குறிவைத்து தற்போது ஏமாற்றி வருகின்றனர். அதனால் முடிந்தளவிற்கு உழைப்பை மட்டும் நம்புகள்.