பெண்களுக்கு ஆசை காட்டி பணம் பறிக்கும் கும்பல் பற்றிய வழக்கு குறித்து முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
எங்களிடம் வந்திருந்த நபர் சுமார் 90 லட்சம் பணத்தை எங்கேயோ ஏமாந்து கொடுத்திருக்கிறார். அதாவது, ஒரு கிளப் தங்களிடம் மெம்பராக இருந்தால் நிறைய விதமான சலுகைகள் உள்ளன. எனவே மெம்பராக இணையுங்கள் என்றும், உங்களைப் போல நிறைய பெரிய இடத்து நபர்களும் இதில் மெம்பர்களாக இருப்பதாகச் சொல்லி, கிளப்பிற்கு சென்றதும் பெண்களை பேச வைத்து, பழக வைத்து காசை வாங்கிவிட்டு ஏமாற்றி விட்டதாகச் சொன்னார். மிகப் பெரிய நபர் எனவே போலீசிடம் செல்லாமல் என்னிடம் வந்தார். இவர் தான் மட்டும் இல்லாமல் நிறைய நண்பர்களை வேறு சேர்த்து விட்டிருந்தார். இந்த கிளப்பில் நிறைய பெண்களுடன் பேசியும் இருக்கிறார். தன்னை இப்படி ஏமாற்றியவர்களை பற்றி தெரிய வேண்டும் என வந்தவரிடம், நமக்கு தேவையான தகவல்களை வாங்கினோம்.
இவர் சுதாரித்ததும் அந்த கிளப் நம்பரை மாற்றியுள்ளது பற்றி தெரிய வந்தது. சரி அவரிடம் பேசிய பெண்களின் நம்பர்களை வாங்கி, இவர் பேசினால் அவர்கள் சொன்ன இடத்திற்கு வருவார்கள் என்பதை உறுதி செய்து, தொடர்பு கொண்ட பெண் அங்கே வந்ததும் அங்கிருந்து அவரை பின் தொடர்ந்தோம். அவர் ஒரு கால் சென்டரில் பணிபுரிகிறார் என்பது புரிந்தது. இதுபோல பெண்களை வைத்து அந்த நிறுவனம் ஏமாற்றவே இப்படி பெண்களை நியமித்து இருக்கின்றனர் என்பதை கண்டறிந்தோம். நாம் பின் தொடர்ந்த அந்த பெண்ணும் வெறும் சம்பளத்திற்காக மட்டுமே இந்த வேலையே செய்திருக்கார் என்று தெரியவந்தது.
இவரிடம் விஷயத்தைச் சொல்லி அவர் அவ்வளவு தொகையை எந்த வங்கிக்கு அனுப்பினாரோ அந்த வங்கி கிளைக்குச் சென்று அக்கவுண்டின் சில தகவலை வாங்கச் சொன்னோம். அவர் போய் பார்த்ததில் அந்த கணக்கு பணம் வந்த அடுத்த இருபது நிமிடத்தில் தொகையை பல கணக்கிற்கு மாற்றிவிட்டு அக்கௌண்ட் 'நில்' என வந்திருக்கிறது. இவர் கூட சேர்ந்து பன்னிரண்டு பேரின் தொகை கிட்டத்தட்ட பத்து கோடிக்கு மேல் ஏமாற்றி கணக்கும் மூடிவிட்டனர். ஒரு டீம் செட் செய்து முதலில் பெரிய தொகையாக ஒரேடியாக வாங்காமல், சிறு சிறு தொகையாக வாங்கி அதை சிறிது காலம் கழித்தே பெரிய தொகையாக அதிகரித்துள்ளனர்.
இவர் கிளப் முகவரி பற்றி தெரிந்து ஆரம்பத்திலே சுதாரிக்க ஆரம்பிக்கவும் அவர்கள் எல்லா தொடர்பையும் துண்டித்து விட்டனர். அதனால் தான் அவர்களை ட்ரேஸ் செய்ய முடியவில்லை. தொடர்பு கொண்ட அந்த கால் சென்டர் பெண்ணை மட்டும் கண்டு பிடிக்க முடிந்தது. இவர் குடும்பத்திடமிருந்து மறைத்து கெட்ட வகையில் ஆசைப்பட்டதால் அது அவர்களுக்கே பெரிய மோசடியாக விளைந்துவிட்டது. பெரிய இடத்து நபர்கள் என்பதால் போலீஸ் என்று சென்றால், பத்திரிகை வரை சென்று பெயர் கெட்டுப் போய்விடும் என்று விட்டனர். இதுபோல ஆன்லைனில் தள்ளுபடி, சுலபமாக கோடிக்கணக்கில் லோன் வாங்கித் தருகிறோம் என்றும் விளம்பரம் செய்து தொடர்பு கொள்ளும் நபர்களை நம்புவது மிகப்பெரிய நஷ்டத்தில் போய் முடியும். மக்களின் விழிப்புணர்வினால் மட்டுமே இதுபோல ஏமாற்றுபவர்களை உருவாக்காமல் தடுக்க முடியும்.