திருமணம் என்றால் ஜாதகத்தை பார்க்கிற பெற்றோர்கள், சில சமயம் ஒன்றை பார்க்க தவறி விடுகிறார்கள். அது குறித்து நம்மிடையே முதல் பெண் துப்பறிவாளர் மாலதி விவரிக்கிறார்.
ஒரு பெண் என்னிடம் போஸ்ட் மேரிட்டல் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் என்று வந்தார். இதெல்லாம் சாதாரணம் என்பதால் எத்தனையாவது திருமணம், என்ன பிரச்சனை என்று விவரம் கேட்டோம். தனக்கு திருமணம் ஆகி டைவோர்ஸ் ஆகிவிட்டது. என் கணவருக்கும் இரண்டாவது திருமணம் தான் என்றார். ஆனால் அவருக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்கிறது என்று உறுதியாக நம்புவதாக சொன்னார். அதை நீங்கள் தான் என்னவென்று பார்த்து சொல்ல வேண்டும் என்றார். அவருக்கு டைவோர்ஸ் ஆகிவிட்டதா என்று கேட்டதற்கு, அவரின் முந்தைய குடும்பத்திற்கு செட்டில்மென்ட் முடித்து விட்டதாக அவர் சொன்னதாக இவர் நம்மிடம் சொன்னார்.
பணப் புழக்கத்தில் தெளிவில்லை, தன்னிடம் உண்மையை சொல்வதில்லை வேறு எங்கேயோ அதை செலவு செய்கிறார் என்பது தான் இவரது சந்தேகத்திற்கு முதல் அடியாக இருந்திருக்கிறது. நாங்கள் கேஸ் எடுத்து அவரை பின் தொடர்ந்தோம். பார்த்தால் அவர் தன் முதல் மனைவியை, குழந்தையை தான் சந்தித்து வருகிறார். அவரிடம் தான் பணத்தை கொடுக்கிறார் என்பது தெரிய வந்தது. இவர் முதல் மனைவி தான் என்பதை மேலும் 10 நாள் தொடர்ந்து பார்த்து உறுதி செய்தோம். பின்னாடி தான் தெரிய வந்தது. அவரை விட்டு, அந்த பழைய மனைவியை தொடர்ந்தோம். பின்பு தான் தெரிய வந்தது. அவர் அந்த பெண்ணுடன் விவாகரத்து கேஸில் இருந்து வெளியில் வரவில்லை. மெயிண்டெனென்ஸ் குறித்து இன்னும் கோர்ட்டில் கேஸ் போய்க் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் விவாகரத்து ஆகிவிட்டது என்று கூறி இந்த பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் என்று தெரிய வந்தது.
ஆனால் குழந்தையை பார்க்க வேண்டும் என்று ஏக்கம், குழந்தை பராமரிப்பு பணம் மற்றும் செலவுக்கு கொடுப்பது போல அடிக்கடி சென்று பார்த்து வந்திருக்கிறார். இதை அந்த பெண்ணிடம் சொல்லி, பெற்றோர் பார்த்து திருமணம் நடந்ததால் இருவீட்டு பெற்றோரையும் கூப்பிட்டு சொல்லி, அந்த முதல் மனைவியிடமும் எடுத்துச் சொல்லி விடுங்கள் என்றோம். ஏனென்றால் திருமணம் ஆகி விவாகரத்து ஆகாமலே இவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்திருப்பது சட்டப்படி 'பைகாமி' கேஸ் ஆகிறது.
பொதுவாகவே இப்படி விவாகரத்து ஆனவரை திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள் என்றால், முதலில் கோர்ட் காப்பி கேட்க வேண்டும். மேட்ரிமோனி மூலமாக பார்த்தாலும், விவாகரத்து ஆனவர் என்று குறிப்பிட்ட பிரிவில் பார்த்தாலும், அதில் ஆதார் கார்டு, ஜாதகம் சேர்ப்பதோடு விவாகரத்து ஆன சர்டிபிகேட்டயும் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுபோன்ற குழப்பம் நிறைந்ததாக தான் அமையும். எனவே கவனத்தில் கொள்ள வேண்டியது ஜாதகம் பார்த்து பொருத்தம் இருக்கா என்பதை விட ஏற்கனவே அவர் திருமண வாழ்க்கையில் இருந்தவர் அந்த உறவை சட்டப்படி முறித்துக் கொண்டாரா? அந்த வழக்கு இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதா? வழக்கு முடிந்துவிட்டதா என்று உறுதி செய்து விட்டுத்தான் திருமணம் செய்ய வேண்டும். ஜாதகம் கேட்கும் போதே டைவர்ஸ் ஆன காப்பியையும் கொடுங்க என்று இரண்டாம் திருமணம் செய்பவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும்.