காணாமல் போன ஸ்பெசல் சைல்டு குறித்த வழக்கு பற்றியும், அதில் தாங்கள் புலனாய்வு செய்த விதம் பற்றியும் முதல் பெண் துப்பறிவாளர் மாலதி நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்
பெற்றோர் தங்களுடைய மகனைக் காணவில்லை என்று நம்மிடம் வழக்கு கொடுத்தனர். மகன் சற்று மனநிலை சரியில்லாதவர். சிறப்பியல்பு குழந்தையாக வளர்க்கப்பட்டவர். அவர் எங்கெங்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்து விசாரித்தோம். அவர் மிகவும் குறைவாகவே பேசுவார். தன்னுடைய வீட்டு விலாசம் கூட அவருக்குத் தெரியாது. சாத்தியக்கூறு குறைவாக இருந்தாலும் இந்த வழக்கை நாங்கள் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு விசாரிக்கத் தொடங்கினோம். உணவெல்லாம் எடுத்துக்கொண்டு, குடும்பத்துடன் நாங்கள் தேடுதல் வேட்டையில் இறங்கினோம்.
எங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் கூட எங்களுடன் வந்தார். அந்தப் பையன் அதற்கு முன்பு நிறைய கோயில்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்தோம். அவருக்கு ரயிலில் செல்வது மிகவும் பிடிக்கும். சாப்பாடு மிகவும் பிடிக்கும். கோவில் அன்னதானத்தில் அவர் தென்படுகிறாரா என்பதை அறிய நாங்கள் ஞாயிற்றுக்கிழமை கோவிலில் தேடினோம். அதன் பிறகு மகாபலிபுரத்தில் தேடினோம். எங்கும் அவர் கிடைக்கவில்லை. அவருடைய புகைப்படத்தைக் காட்டி விசாரித்தோம். அவர் உணவை விரும்புபவர் என்பதால் உணவு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தேடினோம்.
அவருக்கு ரயில் மிகவும் பிடிக்கும் என்பதால் ரயிலில் தேடினோம். ரயிலில் வியாபாரம் செய்பவர்களிடம் அவருடைய புகைப்படத்தைக் காட்டினோம். அதில் ஒருவருக்கு அவரை அடையாளம் தெரிந்தது. "இப்படி ஒரு பையன் இருக்கிறான். யார் சாப்பாடு கொடுத்தாலும் சாப்பிடுவான்" என்றார் அவர். அந்தப் பகுதியில் எங்களுடைய தேடுதலை நாங்கள் தீவிரப்படுத்தினோம். இறுதியில் தாம்பரம் ஸ்டேஷனில் அந்தப் பையன் கண்டுபிடிக்கப்பட்டான். அவனுடைய பெற்றோரை அழைத்து அவர்களிடம் அவனை நாங்கள் ஒப்படைத்தோம்.
கண்டுபிடிக்க வாய்ப்பில்லாத பல வழக்குகளை நான் நிராகரித்திருக்கிறேன். மைனர் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் போலீஸ் துணையை நாங்கள் நாடுவோம். சட்டப்படிதான் எங்களுடைய தேடுதல் பணி இருக்கும். எங்களிடம் வேலை செய்பவர்களிடம் கூட வழக்கின் முழு விவரங்களை நாங்கள் சொல்ல மாட்டோம். இதுவரை நான்கு முறை மட்டுமே எங்களுடைய ஆட்கள் மாட்டிக்கொண்டுள்ளனர். முன்னதாகவே அவர்களுக்கு நாங்கள் அவ்வளவு பயிற்சியும் கொடுத்துவிடுவோம்.